Saturday, November 11, 2023

வசந்த காலம் வருமோ?-9

 வசந்த காலம் வருமோ?-9

By N Krishnamurthy 

மைதிலிக்கு குழந்தை பிறக்க வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. 

அந்த வியாழக்கிழமை இரவு அவளுக்கு வலி எடுக்க ஆரம்பித்தது.

உறையூரில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரவு முழுவதும் வலி வந்து போய்க் கொண்டிருந்தது. சாயங்காலத்திலிருந்தே சீதாலக்ஷ்மியும், மகாலக்ஷ்மியும் மருத்துவ மனையிலேயே தங்கினார்கள்.

விடியற்காலை ஐந்தே  காலுக்கு "வீல்" என்று குழந்தையின் அழு குரல் கேட்டது. அடுத்த பத்து  நிமிஷத்தில் வெளியில் வந்த நர்ஸ், சீதாலக்ஷ்மியைப் பார்த்து"  உங்க மகளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு" என்று கூறினாள். சீதாலக்ஷ்மியும், மஹாவும் மைதிலி இருந்த அறைக்குள் சென்றார்கள். மைதிலி லேசாக கண்விழித்து படுத்திருந்தாள். குழந்தையை அப்போதுதான் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள் தங்க விக்ரமும் போல அந்த பெண் குழந்தை  இருந்தாள். மைதிலி மெல்லிய குரலில் மகாலக்ஷ்மியிடம்" கொஞ்சம் அத்திம்பேருக்கு போன் போட்டு சொல்லீடு" என்று சொன்னாள்." சரி அக்கா, நான் சொல்லிட்றேன்" என்று கூறி,  வெளியில் வந்த மஹா, சாலைக்கு எதிர்புறம்  இருந்த எஸ்.டி.டி பூத்துக்கு சென்று,சாரங்கள் வீட்டிற்கு போன் செய்தாள். ஏற்கனவே சாரங்கனக்கு முதல் நாள் இரவே மைதிலையை நர்சிங் ஹோமில் சேர்த்திருந்த விவரம் தெரிந்திருந்தது. அவன் இரவு முழுதும் போன் அருகிலேயே பழியாக கிடந்தான். சரியாக தூங்க கூடவில்லை. அப்போதைக்கப்போதுமுழித்து, எப்போது போன் மணி அடிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தான்.

காலை ஆறு மணிக்கு போன் மணி  அடித்தவுடன் உடனடியாக போனை எடுத்து " ஹலோ" என்று சொன்னான். "அத்திம்பேர்"என்றாள் மஹா . "சொல்லு, மாஹா"என்றான் சாரங்கன் படபடப்புடன். 

மஹாவுக்கு திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது. அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று சொல்வதா உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்வதா   என்று யோசித்தாள். பிறகு சாரங்கனிடம்

" அக்காக்கு பொண் குழந்தை பொறந்திருக்கா" என்றாள். இதைக் கேட்டவுடன் சாரங்கன் பூரிப்படைந்தான்.

" ரொம்பசந்தோஷம் மஹா.   எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து குழந்தையை பாக்றேன்னு   மைதிலி கிட்ட சொல்லு.நார்மலா,சிசேரியனா?

ஆமா கொழந்த வெய்ட் எவ்வளவாம்" என்று கேட்டான். " நார்மல் டெலிவரி அத்திம்பேர். கொழந்த மூணு கிலோ" என்றாள் மஹா. போன் பேச்சை முடித்துக்கொண்டு, சாரங்கன்  சமையல் அறைப்பக்கம் சென்றபோது, கோமளா "என்னடா ? என்ன விஷயம் .பிரசவம் ஆயிடுத்தா.கொழந்தை பொறந்தாச்சா" என்று கேட்டாள். "ஆமாம்மா. உனக்கு பேத்தி பொறந்திருக்காளாம்" என்றான் சாரங்கன் உற்சாகமாக. 

" வெள்ளிக்கிழமை காலங்காத்தால  மகாலஷ்மி நம்பாத்துக்கு வந்து பொறந்திருக்கா " என்றாள் கோமளா.

சக்கரவர்த்தி  காபி குடிக்க வரும் போது விஷயம் அவருக்கும் சொல்லப்பட்டது. அவர் வானத்தை நோக்கி கையை காண்பித்து" எல்லாம் அந்த பெருமாள் செயல்" என்றார். 

அன்று மதியமே பல்லவன் எக்ஸ்பிரஸை பிடித்து இரவு  சாரங்கனும், கோமளமும் திருச்சி போனார்கள். ஜங்ஷனில்  இறங்கி,தில்லை நகர் வழியாக ஸ்ரீரங்கம் போகும் டவுன்  பஸ்ஸை பிடித்து, உறையூரில்  இறங்கி நர்சிங்  ஹோமுக்கு சென்றார்கள்.

மகாலக்ஷ்மி அவர்கள் இருவரையும் பார்த்து "வாங்கோ"என்று கூறி வரவேற்று, சாரங்கனிடமிருந்த பையை வாங்கிக் கொண்டாள்.

கோமளம், சாரங்கனை  பார்த்தவுடன் மைதிலி படுக்கையில் இருந்து எழுவதற்கு  சிறிது பிரயத்தனப்பட்டாள்.

 " அதெல்லாம் எழுந்துக்க வேண்டாம். படுத்துக்கோ" என்றாள் கோமளம். இருவரும் குழந்தையை பார்த்தார்கள். கொண்டு வந்திருந்த சர்க்கரையை துளி குழந்தை நாக்கில் தடவினாள்  கோமளம். பின்னர் மிக ஜாக்ரதையாக குழந்தையை எடுத்து கொஞ்சினாள். பின்பு அவள்,சாரங்கன் மாட்டுப்பொண்ணோடு பேசட்டும் என்று எண்ணி, வெளியே சென்றாள்.

சாரங்கனை பார்த்த மைதிலி " என்ன சந்தோஷமா? நம்ம நினைச்ச மாதிரியே நம்மளுக்கு  பெருமாள் பெண் கொழந்தையாக கொடுத்தூட்டார்.

ஆமாம் கொழந்தை யார் ஜாடை" என்றாள்

 " ஆமாம் மைதிலி எனக்கு பரம  சந்தோஷம். 

அந்தப் பெருமாளுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. கொழந்தய  இப்ப  பாத்தா  உன்ன மாதிரி தான் இருக்கா.ஆனா ஜாடை மாறிண்டே இருக்கூன்னுவாளே" என்றான் சாரங்கன்.

அன்று இரவு,சாரங்கனும் கோமளாவும் மைதிலியின் வீட்டிலேயயே தங்கி விட்டார்கள். மறு நாள் மீண்டும் ஒருமுறை நர்சிங் ஹோமுக்கு சென்று, குழந்தையை மறுபடியும்  பார்த்துவிட்டு, அப்படியே சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் சென்று, சென்னைக்கு பஸ் பிடித்தார்கள்.

No comments:

Post a Comment