வசந்த காலம் வருமோ?-22.
By N Krishnamurthy
சினிமாக்களில் குழந்தைகள் பெரியவர்கள் ஆவதை, சக்கரம் சுழல்வதை போல காட்டுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட எட்டு வயது ஆகும் பொழுது, ஒரு கச்சேரி செய்யும் அளவுக்கு தயாரானாள் ம்ருதுளா. இன்னும் ஆர்.டி.பி தான் பாக்கி. தன் பள்ளியிலும், பின்பு பள்ளிகளுக்கு இடையேயும் நடக்கும் சங்கீத போட்டிகளில் ம்ருதுளா ஈடுபட்டால் முதல் பரிசு அவளைத் தவிர வேறு யாருக்கும் செல்லாது என்று நிலை ஏற்பட்டது. கப்போர்ட் முழுவதும் வெற்றிக்கோப்பைகளால் நிரம்பி வழிந்ததால், புதிய பெரிய கப்போர்ட் வாங்க சாரங்கன் திட்டமிட வேண்டியதாயிற்று.
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.
ம்ருதுளா இப்பொழுது குழந்தை அல்ல. டீன் ஏஜ் ஜில் அடி எடுத்து வைத்திருக்கிறாள். வயது பதிமூன்று.
சாரங்கனை போல உயரம்.கூரான நாசி.மற்றபடி, முகஜாடை, கலர்,உடல் வாகு அத்தனையும் டிட்டோ மைதிலி.பருவம் அவளுக்கு அதீத வனப்பை வாரி வழங்கிக்கொண்டிருந்தது.
அவளது பாடும் பணி எம்.எஸ், எம்.எல்.வி, டி.கே.பி மாதிரி இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.
பதினாறு வயதை எட்டியதும், பள்ளிப்படிப்பை நன்றாக படித்து முடித்து, ஒரு பெண்கள் கல்லூரியில் ப்ரீ யூனிவர்சிட்டியை தொடர்ந்தாள். அதற்கு மேல் பி.ஏ மியூசிக்கில் அவளை சேர்க்கலாம் என்று மைதிலி நினைத்தபோது, கோமளம் அதற்கு "இவளுக்கு மியூசிக்கில் தெரியாது ஒண்ணும் இல்லேன்ற நிலை வந்துடுத்து. இனிமே பி.ஏ மியூசிக் ல போய் என்ன புதுசா கத்துக்க போற. வேற ஏதாவது சப்ஜெக்ட்ல போட்டுடு" என்றாள். ஒரு பெண்கள் கல்லூரியில் மிருதுளாவுக்கு பி.காமில் சேர இடம் கிடைத்தது.
ஒரு வியாழக்கிழமை அன்று சுப்பு லக்ஷ்மி மைதிலிக்கு போன் செய்து, "நாளைக்கு நவராத்திரி கொலுவுக்கு ஒத்தராத்ல என்ன கூப்பிட்டு இருக்கா. நான் போறதா இருக்கேன். நீங்களும், ம்ருதுளாவும் என் கூட வந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்றாள். மறுநாள் மைதிலியும், ம்ருதுளாவும், சுப்புலக்ஷ்மியுடன் ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்த விஸ்வநாத சர்மா என்பவர் வீட்டிற்கு சென்றார்கள். வீட்டின் ஹாலில் விஸ்வநாத சர்மா அமர்ந்து கொண்டு இருந்தார். இவர்கள் போனதும், விஸ்வநாத சர்மா"லலிதா,சுப்பு லக்ஷ்மி மாமி வந்திருக்கா பார் ",என்று குரல் கொடுத்தார். விஸ்வநாத சர்மாவின் மனைவி லலிதா, சுப்பு லக்ஷ்மியை பார்த்து "வாங்க மாமி.பாத்து ரொம்ப நாள் ஆயிடுத்து. நண்ணாயிருக்கேளா? பாட்டு கிளாஸெல்லாம் எப்டி போயிண்டிருக்கு?ராதிகா சௌக்யமா.அவ ஏன் வரல" என்று கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தாள்.
சுப்பு லக்ஷ்மி" ராதிகா ஏதோ வேலையா காஞ்சிவரம் வரைக்கும் போயிருக்கா.பாட்டு க்ளாஸ் அமோகமா போறது" என்று சொல்லிவிட்டு, மைதிலி யையும், ம்ருதளாவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.
" ஒரு பாட்டு பாடுங்க மாமி" என்றாள் லலிதா.
"என் பாட்டுதான் வழக்கமா கேக்கறேளே.
இன்னிக்கு நான் பாடறதுக்கு பதிலா ம்ருதுளா தான் பாட போறா"என்றாள் சுப்புலக்ஷ்மி. லலிதா ச்ருதி பெட்டியை கொண்டு வந்து கொடுத்தாள். ச்ருதி சேர்த்துக்கொண்ட ம்ருதுளா,ச்யாமா சாஸ்திரிகளின் "ஹிமாத்ரி சுதே பாஹிமாம்" என்ற கல்யாணி ராக பாடலை பாடி, ச்யாமா க்ருஷ்ணன் சோதரி கௌரி என்ற இடத்தில் நிறுத்தி, நிரவல் செய்து,
சிறிது ஸ்வரம் பாடினாள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாத சர்மா மிருதுளாவின் பாடலில் சொக்கி போனார். அவர் எத்தனையே வித்வான்களின் கச்சேரியில் இந்த கீர்த்தனையை கேட்டு ரசித்திருக்கிறார். ஆனால் இப்போது ம்ருதுளா கீர்த்தனை பாடிய விதமும், அவளது கல்யாணியில் இருந்த கம்பீரமும் (Majesty) அவருக்குள்ளே ஊடுருவி, அவரை வேறோரு உலகத்திற்கு அழைத்துச்சென்றன. லலிதாவும் அப்படியே. பாடல் முடிந்து, அதை அனுபவித்த ஏகாந்த நிலையிலிருந்து விடுபட்டு, சகஜ நிலைக்கு திரும்பிய விஸ்வநாத சர்மா இரு கைகளையும் தட்டி "பேஷ். ரொம்ப பிரமாதமா பாடற கொழந்தை" என்றார்.
விஸ்வநாத சர்மாவை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும். மியூசிக் அகேடமி கவர்னிங் கவுன்சிலில் அவர் ஒரு முக்கிய அங்கத்தினர். இதை தெரிந்துதான் சுப்பு லக்ஷ்மி, ம்துளாவை அங்கே அழைத்துக் கொண்டு போயிருந்திருந்தாள். பின்பு மிருதுளாவை பற்றி சுருக்கமாக சுப்புலக்ஷ்மி விஸ்வநாத சர்மாவிடமும், லலிதாவிடமும் கூறினாள். சுப்பு லக்ஷ்மி பின்னர் அவரிடம் " மியூசிக் அகாடமில 12 மணி ஸ்லாட்ல இந்த கொழந்தைக்கு இந்த வருஷம் சான்ஸ் கெடைக்க நீங்கதான் மனசு வைக்கணம் " என்று விண்ணப்பித்தாள்.
" என்னம்மா நீ. நவம்பர்ல வந்து இப்படி கேக்கற. இந்த வருஷம் ஷெட்யூல் எல்லாம் செப்டம்பர்லே முடிஞ்சு போச்சு. நிச்சயம் அடுத்த வருஷத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்" என்று கூறினார்.
பிறகு சுப்புலட்சுமி, ம்ருதுளா மற்றும் மைதிலி ஆகியோர் லலிதாவிடம் விடை பெற்றார்கள். குங்குமம் கொடுத்து, தட்டில் தேங்காய், ரவிக்கத் துண்டு,தனித்தனி பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வீட்,பட்டாணி சுண்டல் ஆகியவற்றை மூவருக்கும் கொடுத்தாள் லலிதா. மைதிலி சொன்னதும், ம்ருதுளா விஸ்வநாத சர்மாவுக்கும், லலிதாவுக்கும் நமஸ்காரம் செய்தாள். விசுவநாத சர்மா ம்ருதுளாவை பார்த்து "உனக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துண்டிருக்கு குழந்தை. இந்த வருஷம் சான்ஸ் இல்லேன்னு கவலப்படாதே" என்றார். பின்பு மூவரும் வீடு திரும்பினார்கள்.
*பின் குறிப்பு:* சென்னை ம்யூசிக் அகேடமி, சங்கீத வித்வத் சபை என்றும் அழைக்கப்படுகிறது.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், பல்லடம் சஞ்சீவராவ், டி.எல். வெங்கட்ராம ஐயர் மற்றும் பல புகழ் பெற்ற மனிதர்களால்,
1928 ஆகஸ்ட் 18 ல் இது உருவானது. ஒவ்வொரு வருடமும் *சங்கீத கலாநிதி* என்ற விருதை மிகச்சிறந்த சங்கீத வித்வான்களுக்கு வழங்கி அவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தனக்கும் பெருமை சேர்த்துக்கொள்கிறது.
சங்கீத கலாநிதி அவார்டுகளை முக்கியமாக வாய்ப்பாட்டுக்காரர்களுக்கு கொடுப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மாபெரும் மேதைகளான லால்குடி ஜெயராமன், டி.என். கிருஷ்ணன்,எம். எஸ் கோபாலகிருஷ்ணன், மாலி போன்ற வாத்திய கருவி விற்பன்னர்களை ம்யூசிக் அகேடாமி பல காலம் கண்டு கொண்டதாக தெரியவில்லை என்று படித்து தெரிந்து கொள்கிறேன்.
சங்கீத கலாநிதி அவார்டை, லால் குடி ஜெயராமன் அவர்களுக்கு மிக லேட்டாக கொடுக்க நினைத்து அவரை அணுகிய போது, 'தனக்கு உரிய நேரத்தில் அந்த விருதை வழங்காததால் வேண்டாம்' என்று மறுத்துவிட்டதாக தெரிகிறது .
2008 ல் லால்குடி சாருக்கு life time award கொடுத்து தன்னை கௌரவித்துக் கொண்டது ம்யூசிக் அகேடமி. இன்றைய
பின் குறுப்பில் நான் கூறிய எவையும் என் சொந்த கருத்து அல்ல. கூகுள் செய்து கண்டுபிடித்த கருத்துகளே ஆகும். இந்தக் கருத்துக்களுக்கும், எனக்கும், தொடர்பில்லை என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment