Thursday, November 23, 2023

வசந்தகாலம் வருமோ? -21

 வசந்தகாலம் வருமோ? -21

By N Krishnamurthy 

கிட்டத்தட்ட நான்கு மாதங்களிள் சுமார் 12 உருப்படிகள் ம்ருதுளாவிற்கு அத்துபடியானது.

(இந்த உருப்படி ஒரு வேடிக்கையான வார்த்தை. சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கும் உருப்படி என்கிறார்கள். துணிகளை அயர்ன் செய்ய கொடுக்கும் போதும், சலவைக்காரரும் எத்தனை உருப்படி என்று தான் கேட்கிறார்!)

ம்ருதுளாவிற்கு சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்த மாதிரி குரல், நல்ல மனோதர்மம், ஸ்வரம் பாடினாள் என்றால் இன்றைக்கு பூராவும்  கேட்டுக் கொண்டிருக்கலாம். G.N.B மாதிரி ஸ்வரங்களை சின்ன சின்ன Phrase ஆக  பாடுவதை கேட்கும் போது, இவ்வளவு லகுவாக கூட ஸ்வரம் பாட முடியுமா என்ற வியப்பு கேட்டவர்களுக்கு மேலோங்கியது.

ஓரு நாள் சுப்புலக்ஷ்மி புதிதாக ஒரு கீர்த்தனையை சொல்லிக்கொடுக்க தீர்மானித்து, சித்த ரஞ்சனியில் அமைந்த தியாகராஜரது கீர்த்தனையான 

"நாத தனுமனிஷம் சங்கரம்" 

பற்றி ஒரு சிறிய இன்ட்ரொடக்ஷன் கொடுத்தாள்.

"என்னுடைய மனதாலும்,உடலாலும், நாதமே உருவான சங்கரனை நமஸ்கரிக்கிறேன். ஏழு ஸ்வரங்களும் சிவபிரானது ஐந்து முகங்களிலிருந்து உருவானவை " என்று கூறி, இது மாபெரும் சித்தர்களின் மனதிலும் புகுந்து இனிமையை கூட்டும் ராகமாதலால் சித்தரஞ்சனி என பெயர் பெற்றது என்றாள்.

சித்தரஞ்சனியில் ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்,மற்றும் கைஷிகி நிஷாதம் வரும் என்று கூறியபின், அந்த ராகத்தின் ஆரோஹணம், அவரோஹணமான ,ச,ரி,க,ம,ப,த,நி/ நி,த,ப,ம,க,ரி,ச பாடிய பின், பாடலை பாடிக்காட்ட ஆரம்பித்தாள். பாட்டில் "சரிகபதனி" என்ற இடம் வரும்போது, உணர்ச்சி பெருக்கால் அடுத்த வரி ஞாபகம் வராமல், மேலே செல்ல முடியாமல், சுப்பு லக்ஷ்மி தவித்தபோது, தீடிரென்று ம்ருதுளா 'வர சப்த ஸ்வர' என்று எடுத்துக்கொடுக்க, திடுக்கிட்ட 

சுப்புலக்ஷ்மி,அதனை தொடர்ந்து பாடலை நிறைவு செய்தாள்.

ம்ருதுளாவிடம் " நோக்கு முன்னாடியே இந்த கீர்த்தனை தெரியுமா? அம்மா ஆத்துல பாடுவாளா இல்ல ரேடியோவில கேட்டிருக்கயா" என்று கேட்டாள். எல்லாவற்றிற்கும் இல்லை என ம்ருதுளா பதிலளித்தாள். "அப்புறம் எப்படி சரியா அடுத்தவரியை எடுத்துக்கொடுத்தே" என்றதும்,ம்ருதுளா " நேக்கு என்னமோ இந்த கீர்த்தனையை எப்பவோ கேட்ட மாதிரியும்,  நானே பாடின மாதிரி உணர்ந்தேன்" என்றாள்.

சுப்புலக்ஷ்மி உணர்ச்சி பெருக்கால் ம்ருதுளாவை கட்டி அணைத்துக் கொண்டாள். மனதுக்குள் "ஆண்டவா.இந்த கொழந்தைக்கு பூர்ண ஆயசை கொடுத்து நீதான் ரக்ஷிக்கணம்" என்று வேண்டிக்கொண்டாள்.

ராதிகாவிடம் இந்த நிகழ்ச்சியை சொல்லிக்காட்டியபோது அவள் " அம்மா, இதெல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணம். ஜுஜீபி. அவ மனசுல இருக்ற சங்கீதம்  முழு பிரவாகமா வெளில வரும் போது தான் இருக்கு வேடிக்கை. நான் சொல்றேன், நீ எழுதி வெச்சுக்கோ,இவ கச்சேரி பண்ண ஆரம்பிச்சா, இப்போ இருக்கற சீனியர் வித்வான்லாம் காணம போய்டுவா" என்றாள்.

பின் குறிப்பு : சித்தரஞ்சனி  ராகத்தில் ஒரு தமிழ் திரை இசைப் பாடல் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? 1949 ஆம் வருடம் வெளிவந்த மங்கையர்கரசி என்ற திரைப்படத்தில் "காதல் கனி ரசமே" என்று இந்த ராகத்தில் அமைந்த பாடலை, பி.யூ. சின்னப்பா பாடி இருக்கிறார்

No comments:

Post a Comment