Wednesday, November 1, 2023

நாற்கோணம் -3

 நாற்கோணம் -3

By N Krishnamurthy 

*ராம்:*  இந்த சீதா ஒரு பைத்தியமா, மக்கான்னு புரியல.

சின்ன வயசலேந்து அவளுக்கு நான் தான் ஜோடின்னு  சொல்லி சொல்லி எல்லாரும் வளர்த்திருந்தாலும், திடீர்னு அவளுக்கு ஒரு பயம் வந்துடும். நான் ஒரு வேளை வேற யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிண்டுவோனோன்னு அவ பயப்படுறதை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வரும். அன்னைக்கு அப்படித்தான்.மாமா ஆத்துக்கு லஞ்சுக்கு போனபோது சீதா மட்டும் தான் இருப்பான்னு தான்  நினைச்சேன்.கூடவே அவ பிரண்டு ஜானகியும் பாத்தேன்.

ஜானகி சீதாவை விட  துளியூண்டு அழகா இருந்தாலும்,என் சீதா தான் எனக்கு அழகு. ஜானகி கூட பழகுற மாதிரி நடிச்சா சீதா என்ன பண்றான்னு பாக்கலாம் எனக்கு ஒரு ஆசை வந்தது. அதனால்தான் ஜானகி கூட சிரிச்சு சிரிச்சு பேசிண்டு இருந்தேன். அவ போன் நெம்பரையும் வாங்கிண்டேன். ரெண்டு நாள் கழிச்சி ஜானகிக்கு  போன் பண்ணேன்.அவ நிச்சயம் சீதா கிட்ட சொல்லுவான்னு நேக்கு  தெரியும்.அப்புறம் சீதா  என் கூட பேசாம இருப்பாளா, கோபத்தை காட்டுவாளா அப்படின்னு பாக்கறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு. சீதா கோவப்பட்டா, அவ மூஞ்சி ரொம்ப அழகா மாறிடும். உர்ன்னு  இருந்தாலும்  கோபப்படும் போது மூஞ்சில ஒரு தனி களை வரும். அதனால் இந்த விளையாட்டு இன்னும் கொஞ்சம் நகத்திண்டு போய், ஒரு நாளைக்கு சீதா கிட்ட விஷயத்தை சொல்லணும்னு நினைச்சுண்டு இருக்கேன்.எத்தனை ஜானகி வந்தாலும் வாழ்வில், சீதாவ நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

பெயர் பொருத்தம் கூட பாருங்கோ. முதல்ல நான் பொறந்தப்போ ராம்னு  பேர் வெச்சா.பின்னாடி எங்க மாமாவுக்கு பெண் குழந்தை பிறந்த போது கரெக்டா சீதான்னு  பேர் வைச்சிருக்கா. எங்க கல்யாணம் ஆனதுக்கப்புறம் சீதா தன் பேரை சீதாராம்ன்னு மாத்திப்பா. அவளை தெரியாதவா, அந்த பேரை கேக்கும் போது,அவ(சீதாராம்) ஆம்பளைன்னு  கூட நினைச்சிப்பா.  ஒரு நாளைக்கு சீதா  கிட்ட எல்லாத்தையும் சொல்லிடணம். அவ  மூஞ்சி போற போக்க பார்த்து ரசிக்கணும்.

'வீணையடி நீ எனக்கு மேவு விரல் நான் உனக்கு' அப்படின்னு நான் பாடணும்.

பதிலுக்கு அவ"பாயும் ஒளி  நீ எனக்கு, பார்வையடா நான் உனக்கு" ன்னு  பாடினா எவ்வளவு நண்ணா இருக்கும்.

பகவானே,எந்த வில்லங்கமும் இல்லாம எங்க கல்யாணத்தை நடத்தி வெச்சூடப்பா திருப்பதி வெங்கட் ரமணா.கல்யாணம் முடிஞ்ச கையோட நானும்,சீதாவும் உன் மலையை நடந்து ஏறி உன்னை சேவிக்கறோம்.

 *திருப்பதி ஏழுமலையான் :*

நாஸ்திகம் பேசறவன் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லிண்டு தான் இருக்கான். ஆனா என்ன பாக்குறதுக்கு கூட்டம் தினமும் அல மோதறது. எல்லாருக்கும் என்னால ஒரு நொடிக்கு மேல தரிசனம் கொடுக்க முடியல. "ஜருகண்டி", "ஜருகண்டி" என்ற வார்த்தைகளை கேட்டு, கேட்டு நேக்கே புளிச்சூட்த்து. என்ன பண்றது?

ஒவ்வொருத்தர் பிரார்த்தனையும் கேட்கும் போது மனுஷாளுக்கெல்லாம் எவ்வளவு வருத்தம் இருக்கூன்னு தெரியர்து.

குழந்தை ராமோட பிரார்த்தனையும் என் காதுல விழுந்தது. எல்லாம் சாதாரணமா நேக்கு பொன்னை குடு, பொருளை குடு, தோட்டம், நில புலம் குடு,ஆரோக்கியம் குடுன்னு தான் வேண்டிப்பா. இந்த பய ராம்,  வித்தியாசமா வேண்டிண்டு இருக்கான். இத நிறைவேத்தணும்தான்  நான் நினைக்கிறேன்.ஆனா விதின்னு ஒண்ணு இருக்கோல்யோ?.

இவனுக்குன்னு என்ன எழுதி இருக்கோ அதுபடி தான் நடக்கும்.

யாருக்கு யார் மூணு முடிச்சு போடணம்றது என்னிக்கோ தீர்மானமாயிட்டது.

No comments:

Post a Comment