நாற்கோணம் -17
By N Krishnamurthy
*வைதேகி :*
மறு நாள் காலைல சாப்பாட்டு கடை முடிஞ்சதுக்கப்பறம் நானும், கோபால்சாமி மாமாவும், ட்ரிப்ளிகேன் போறதுக்கு ஓலா டாக்ஸி புக் பண்ணேன். மாமா என்ன பாத்து "மறக்காம அந்த மூணு ஜாதகத்தையும் எடுத்துண்டூட்டயா" என்று கேட்டார். "ஆமாம், மாமா.எடுத்து வெச்சிண்டிருக்கேன்" ன்னு நான் சொன்னேன்.
புக் பண்ண பத்து நிமிஷத்தில் டாக்ஸி வாசல்ல வந்து நிந்தது. ஜோசியர் வீடு சரியாக இடம் தெரியாததால் டெஸ்டினேஷன் அட்ரஸை பார்த்தசாரதி கோவில்ன்னு கொடுத்திருந்தேன். கோவிலுக்கு போறதுக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு இடத்தில் மாமா வண்டியை நிறுத்த சொன்னார். வண்டிக்குண்டான பணத்தை கொடுத்தூட்டு கீழே இறங்கினோம். கோவிலுக்கு பின்புறத்தில் மூன்று நான்கு குறுக்கு தெருவுகள் இருந்தன. மாமா என்ன அங்க இருக்க சொல்லீட்டு, ஒரு தெருவில் கொஞ்ச தூரம் நடந்து போய் திரும்பி வந்தார். "இந்த தெருவில்லம்மா, அடுத்த தெரு" என்று கூறிவிட்டு அடுத்த தெருவுக்கு என்னை அழச்சுண்டு போனார். கொஞ்ச தூரம் போனதும் வலது கை பக்கம் *ராமநாதன், ஜோசியர்* என்று போர்டு போட்டிருந்த வீட்டில் வெளியில் இருந்த காலிங் பெல் சுவிச்சை மாமா அழுத்தினார். உள்ளே இருந்து ஒரு லக்ஷ்மிகரமான பெண்மணி வந்து கதவைத் தொறந்தா. "யாரை பாக்கணும்" ன்னு கேட்டாள். "ஜோசியர் மாமாவை பாக்கணும்" என்றார் மாமா. மாமி ஹால்ல எங்களை உக்கார சொல்லீட்டு உள்ள போய்ட்டா.அடுத்த ஐந்து நிமிஷத்தில் ராமநாதன் மாமா உள்ளே இருந்து ஹாலுக்கு வந்தார். நெத்தில மூணு பட்ட விபூதி அடிச்சிண்டிருந்தார். லேசான வழுக்கை. தேஜஸ் ஆன கண்கள். வயது சுமார் 60 இருக்கலாம்.கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி போட்டுண்டிருந்தார்.பஞ்ச கச்ச வேஷ்டியும்,மேல அங்கவஸ்த்ரமும் உடுத்திண்டிருந்தார். கோபால்சாமி மாமாவை பாத்து "வாங்க கோபால்சாமி சார். எப்படி இருக்கீங்க. பாத்து வருஷகணக்கா ஆயிடுத்து" என்றார். "ஆமாம்.கடைசியா மூணு வருஷம் முன்னாடி திருச்சீல ஒரு கல்யாணத்துல பாத்தது. நடுவுல சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கல" என்றார் மாமா. உடனே என்னை பார்த்தார் ராமநாதன். அதை புரிந்து கொண்ட மாமா
" இது வைதேகி. என் அக்கா மாட்டுப் பொண்" என்று கூறி, வந்த விஷயத்தை கூறினார்.
" ஜாதகத்தை கொடுங்க" என்றார் ராமனாதன். முதலில் எதை பார்க்கணும் என்றார். "சீதாவின் ஜாதகத்தையும், ராகவன் ஜாதகத்தையும் பாருங்க .அப்புறம் சீதா,ராம் ஜாதங்களை பாக்கலாம்"என்றேன் நான். அவர்" நீங்க ஒண்ணு பண்ணுங்கோ. பார்த்தசாரதி கோயிலுக்கு போயிட்டு பெருமாளை சேவிச்சூட்டு வாங்கோ.அதுக்குள்ள மூணு ஜாதகத்தையும் பாத்தூடறேன்" என்றார்.
நானும் மாமாவும் கோவிலுக்கு போய் பெருமாளை தரிசனம் பண்ணீட்டு திரும்பி வறதுக்கு முக்கா மணி ஆயிட்த்து. ராமநாதன் மாமா வீட்டுக்கு மறுபடியும் போனோம்.என்னை பார்த்து ராமநாதன் மாமா "ஏற்கனவே இந்த ஜாதகத்தை யார் கிட்டயாவது கொடுத்து பாத்திருக்கேங்களா" என்றார் ."ஆமாம்.மாமா. ராம் ,சீதா ஜாதத்தை ஒரு ஜோசியர் கிட்ட என் நாத்தனார் கொடுத்து பாக்க சொல்லியிருக்கா" என்றேன். அதுக்கு ராமனாதன்" அவர் ரெண்டு ஜாதகமும் பொருந்தலைன்னு சொல்லிட்டாராக்கும்" என்றார் ." ஆமாம்.மாமா" என்றேன் நான்.அவர் முகத்தில் லேசாக புன் முறுவல் வந்தது." எந்த ஜோசியராயிருந்தாலும் இந்த ரெண்டு ஜாதகத்தை பாத்தா அப்டி தான் சொல்லியிருப்பார்" என்றார். பின்னர் அவர் "ஒரு வேடிக்கை பாத்தேளா. உங் பொண்ணு ஜாதகமும்,இந்த பையன் ராகவன் ஜாதகமும் கொஞ்சம் கூட பொருந்தியே வரலை" என்ற குண்டை தூக்கிபோட்டார். நேக்கு தலைல இடி விழுந்த மாதிரி ஆய்ட்த்து. ஏனோ பெருமாள் எம்பொண்ணை இப்படி சோதிக்கறார்ன்னு எண்ணினேன்." அப்ப கெளம்பலாம்,மாமா " என்றேன் நான் கோபால்சாமி மாமாவிடம்.ராமனாதன்
மாமா எங்கிட்ட " உங்க வருத்தம் புரியர்து. ஒரு ஆச்சர்யமான விஷயம் உங்க பொண்ணு ஜாதகத்ல இருக்கு. உங்க பொண்ணு ஜாதகத்தை எழுதினவருக்கு கொஞ்சம் கண்ணுல,காதுல பிராப்ளம் இருந்ததா" என்று கேட்டார் .
"தெரியலையே.ஏன் கேக்கறேள்" என்ற என்னிடம் அவர் " உங்க பொண்ணு பொறந்த தேதி உங்களுக்கு ஞாபகம் இருக்கா" என்றார்.
" ஆமாம்.நண்ணா ஞாபகம் இருக்கு.புரட்டாசி மூணாவது சனிக்கிழமை பொறந்தா" என்றேன். அதைக் கேட்டு ராமநாதன் சீதா பொறந்த வருஷத்தை சொல்லி அது சரியான்னு கேட்டார்.
" நூறு பர்சண்ட் கரக்ட்" என்றேன் நான். " உங்க பொண்ணு ஜாதகத்தை கணிச்ச ஜோசியர் ஒரு பெரிய தப்பு பண்ணீட்டிருக்கார்.
உங்க பொண்ணு ஜாதகத்தையும் இந்த ராம்ன்ற பையன் ஜாதகத்தையும் நான் பாக்கிறபோது என் மனசுல ரெண்டுக்கும் பொருத்தம் நிச்சயம் இருக்கும்னு தோணித்து. ஆனா கட்டப்படி நிச்சயம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லைன்னு வந்தது. நேக்கு ஏதோ நெரிடித்து. ரொம்ப நேரம் யோசித்து பார்த்தேன்.அப்புறம் தான் ஒரு உண்மை தெரிஞ்சது. நீங்க சொல்ற டையத்தையும், சொல்ற தேதியையும் கரெக்டா எடுத்து கணிச்ச உங்க ஜோசியர், நீங்க சொன்ன தமிழ் தேதிய இங்கிலீஷ் தேதின்னு எடுத்துண்ட்டார். அவர் போட்ட தேதிக்கு, பொறந்த நக்ஷத்ரம் ஒத்து வரல.நீங்க சொல்ற மாசம்,தேதி இதெல்லாம் வெச்சுண்டு நான் புதுசா ஒரு ஜாதகம் போட்டு பாத்தேன். அப்பதான் நக்ஷத்ரம் டேலி ஆச்சூ. உங்க பொண்ணு ஜாதகமும், ராம் ஜாதகமும் பத்துக்கு பத்து சரியா பொருந்தறது. இதுபோல பொருந்துற ஜாதகங்களை பாக்கறது ரொம்ப அபூர்வம் . அதே மாதிரி ஜாதகத்தை கணிக்கும் போது இதுபோல தப்பு பண்றதும் ரொம்ப அபூர்வம். லட்சம் லட்சத்துல ஒண்ல தான் இது போல தப்பு நடக்கும்"என்றார்
நான் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்ட்டேன்.நான் கேக்கறது நிஜமா இல்ல கனவான்னு தெரியற்துக்கு என்னையே கிள்ளி பாத்துண்டேன்." மாமா சித்த, நண்ணா பாத்து சொல்லுங்க" என்றேன் படபடப்புடன்.
அதற்கு ராமநாதன் மாமா " எத்தனை தரம் பாத்தாலும் ஜாதகம் பொய் சொல்லாது. நானும் பொய் சொல்றவன் இல்லை" என்றார். "ஆமாம் இந்த பையன் ராம் சொந்தக்கார பையனா " என்றார்.
"ஆமாம்.அது என்னோட நாத்தனார் பையன்" என்றேன் நான்.
"பையனுக்கு குரு பலன் வந்திருக்கு. நீங்க இப்பவே முயற்சி பண்ணா இன்னும் ரெண்டு மூணு மாசத்துல கல்யாணம் நடத்தூடலாம் " என்றார் அவர்.
அப்புறம் நான் அவர்கிட்ட" என் நாத்தனார் கவுசி ஜாதகம் பொருந்தலைன உடனே அம்மன் சன்னதியில் புஷ்பம் போட்டு பாத்து இருக்கா.அதுலயும் தப்பா வந்திருக்கே " என்றேன். " என்னென்ன புஷ்பங்கள் போட்டு பாத்திருக்கா" என்றார் ராமநாதன்.
" செவ்வரளியும், ரோஜாப்பூவும் துர்க்கை சன்னதீல போட்டு பாத்திருக்கா இருக்கா" என்றேன் நான். " என்ன வந்துதாம்" என்றார் ராமநாதன்." செவ்வரளி தான் வந்ததாம்"என்றேன் நான்.
ராமநாதன் " சரியா தானே வந்திருக்கு" என்றார்." என்ன சொல்றீங்க நீங்க" என்று கேட்டேன் நான். ரோஜான்றது டாம்பீகமான பூவே தவிர அம்மன் மனசுக்கு உகந்தது செவ்வரளி தான். நீங்க தான் சரியா புரிஞ்சுக்கலை" என்றார் ராமநாதன்.
No comments:
Post a Comment