Sunday, November 5, 2023

வசந்த காலம் வருமோ?-3

வசந்த காலம் வருமோ?-3

By N Krishnamurthy 

மைதிலி,தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு,தலையை முடிந்து கொண்டு, பெருமாள் படத்தின் முன் நின்று ஸ்லோகம் சொல்வாள்.சமையல் அறையில் புகுந்தால், அங்கே ஏற்கனவே கோமளா அன்றைய  சமையலுக்கு வேண்டிய முஸ்தீபுகளை ஆரம்பித்திருப்பாள்.

பில்டரில் காபி பொடியை போட்டு,மேலே வென்னீரை விட்டு, அடுத்த அடுப்பில், பசும்பாலை காய்ச்சுவாள் மைதிலி.

டிகாக்ஷன் ரெடியாகி,பாலும் சூடானதும், மாமனார்,சாரங்கன், ரங்கநாயகிக்கு காபி கலந்து தருவாள்.கோமளமும்,மைதிலியும் காபி குடிப்பதில்லை. பனங்கற்கண்டு போட்ட பாலைத்தான் குடிப்பார்கள்.பின்னர் கறிகாய் நறுக்குவது போன்ற சுற்று முற்று வேலைகளை கவனிப்பாள் . ஒன்பது மணிக்குள் தளிகை முடிந்து விடும்.

சாரங்கன் குழம்பு அல்லது சாத்தமுது சாதத்துடன் கரமதை சேர்த்து சாப்பிட்டு விட்டு, கைக்கு  தயிர் சாதம்,ஊறுகாய் டிபன் பாக்ஸில் கொண்டு போய் விடுவான்.

பத்தரை மணிக்கு சக்ரவர்த்தி சாப்பிட வருவார்.

பின்னர் மைதிலிமாமியாரையும், நாத்தனாரையும் உட்கார வைத்து பறிமாறுவாள்.

கடைசியாக மைதிலி  சாப்பிட உட்கார்ந்ததும் கோமளமோ, ரங்க நாயகியோ பரிமாறுவார்கள். பாதி நாள் கரமது இல்லாததால் அதற்கு பதில் மைதிலிக்கு சுட்ட அப்பளம் தான் கிடைக்கும். 

(சாரங்கன் ஒருநாள் இரவு மைதிலியிடம் "இன்னிக்கு அம்மா கத்திரிக்காய் எண்ண கரமது பிரமாதமா பண்ணி இருந்தா" என்றான். "அப்படியா" என்றாள் மைதிலி. "என்ன நீ சாப்பிடாத மாரி பேசற" என்றான் சாரங்கன். மைதிலி மெளனமாக இருந்தாள். பின்னர் அவளிடம் பேச்சுக் கொடுத்த சாரங்கனுக்கு அன்று மட்டுமல்ல, நிறைய  நாட்கள் மைதிலிக்கு கரமது கிடைப்பதில்லை என்பதை தெரிந்து கொண்டான். அடுத்த நாளிலிலிருந்து காய்கறி வாங்கும் போது  1/2 கிலோவுக்கு பதிலாக முக்கால் கிலோ வாங்க ஆரம்பித்தான்).

இதற்கு பிறகு சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து விட்டு, பாத்திரங்களை கழுவி, துடைத்து, அந்தந்த இடங்களில் வைத்து முடிக்க கிட்டத்தட்ட  மணி ஒன்றரை ஆகிவிடும்.

வீட்டை தினம்பெருக்குவதற்கும்,செவ்வாய், வெள்ளிகளில் மெழுகுவதற்கு மட்டும் ஒரு பெண் ஏற்பாடாகி இருந்தது. 

பத்து பாத்திரங்களை கழுவுவதற்கு வெளியாள் இல்லை.

மைதிலிக்கு, ரரங்கநாயகி சில நாட்கள்  இஷ்டம் இருந்தால்,  வந்து ஹெல்ப் பண்ணுவாள். இல்லையென்றால் மைதிலி தானாகவே செய்ய வேண்டியதுதான். ஆனால் மைதிலி இதையெல்லாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மிகவும் விரும்பி செய்ததால், அவளுக்கு வேலையெல்லாம் சுலபமாக இருந்தது.

இந்த காலத்தில் எத்தனை பெண்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த காலத்து பெண்கள் நிறைய பேர் இதுபோல்தான் இருந்திருக்கிறார்கள்.

கடமையே என்று வேலை செய்வதை விட வேலை செய்வது தன் கடமை என்று உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

பின்பு அரை மணியிலிருந்து ஒரு மணி வரை ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள் மைதிலி. மூன்றரை மணிக்கு மீண்டும் காப்பி கடை  ஆரம்பித்து விடும்.

சாயங்காலம் ஆபீஸில் இருந்து திரும்பும் போது சாரங்கன் ஜாதி மல்லி வாங்கி கொண்டு வருவான். அதை அக்காவிடம் கொடுத்து விடுவான். ரங்கநாயகி அதை துண்டு போட்டு, தனக்கு ஒரு பாகத்தை  வைத்துக்கொண்டு அம்மாவுக்கும், மைதிலிக்கும் மீதியை  கொடுப்பாள்.

 மைதிலி முகம் ,கை , கால் கழுவிக் கொண்டு, தலையில் பூச்சூடி, பூஜை அறையில் தம்புராவுடன் உட்கார்ந்து,ஸ்ருதி சேர்த்து,தினமும் ஏதாவது ஒரு கீர்த்தனம்   பாடுவாள்.

சில நாட்கள் அவள் பாடி முடித்ததும் ரங்கநாயகி அவளிடம் "  ஒரு காலத்தில் இந்த கீர்த்தனை நேக்கு அத்துபடியா இருந்தது. இப்போ மறந்தூட்த்து" என்று கூசாமல் பொய் சொல்வாள்.

கல்யாணத்துக்குப் பிறகு அம்மா வீட்டில் டேரா போட்ட ரங்கநாயகி, பத்து நாட்கள்  போனதும், கோமளத்திடம் " அம்மா. உன்  மாப்ளை அங்க தனியா இருக்கா. வசுமதிக்கும்  ஸ்கூல் தொறந்தாச்சு. எல்லாம் போட்டது போட்டபடியே வந்தூட்டேன். நான் நாளைக்கு கெளம்பறேன்" என்றாள். கோமளம் அவளிடம் "அதுக்குள்ள என்னடி அவசரம். இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போலாம்" என்றாள்.மைதிலியும் ரங்கநாயகியிடம்

" ஏங்க்கா. இங்கதான் இருந்துட்டு போலாமே.

நீங்க பக்கத்துல இருந்தா நான்  உங்ககிட்டேந்து நிறைய விஷயம் கத்துக்க முடியும் அக்கா" என்றாள்.

(பெண்களுக்கு இப்படி பேச சாமார்த்தியம் எங்கிருந்து தான் வருமோ?)

இந்த ஐஸை மைதிலி  தன் தலையில் வைத்ததும், ரங்கநாயகி குளிர்ந்து போனாள். "அதெல்லாம் சரி மைதிலி. அதுக்கோசரம் நான் உன் கூடவே இருந்துண்டு  இருக்க முடியுமா. அப்புறம் என் குடும்பத்தை யார் பாத்துப்பா. உனக்கு ஏதாவது வேணும்னா, நீ அப்பப்போ போன் பண்ணு , இல்லேன்னா கடுதாசி போடு. நான் உனக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுக்கிறேன்" என்றாள்(தொடரும்)

No comments:

Post a Comment