வசந்த காலம் வருமோ? -24
By N Krishnamurthy
சாரங்கன் குடும்பம் மியூசிக் அகாடமியை அடைந்து,மேடையின் பக்கத்திலிருந்த ரூமுக்குள் நுழைந்தார்கள். அங்கே ஏற்கனவே சுப்புலக்ஷ்மியும், ராதிகாவும் தம்புராவுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் ம்ருதங்கம் வாசிக்க குத்தாலம் ராமச்சந்திரனும், வயலின் வாசிக்க மன்னார்குடி முரளியும் ஆஜரானார்கள்.முதலில் ம்ருதுளாவை பார்த்ததும் அவர்கள் இருவருக்கும் சிறிது பயம் எடுத்தது. அவர்கள் இருவரும் ஓரளவுக்கு சீனியர் வித்துவான்கள். ஏற்கனவே பன்னிரண்டு மணிக்கு கச்சேரி பண்ண இருந்த பையனை பற்றி அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். எனவேதான் அவனுக்கு பக்கவாத்தியம் வாசிக்க ஒத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ம்ருதுளாவை பார்த்தவுடன் 'இந்த பெண் எப்படி பாடுவாளோ? சுமாராகப்பாடி நமது பெயரையும் கெடுத்து விடுவாளோ' என்று பயந்தார்கள்.
ராமச்சந்திரன் ம்ருதுளாவை பார்த்து "என்னம்மா நல்லா பாடுவியா. பிராக்டீஸ் பண்ணியிருக்கயா" என்று கேட்டார்.உடனே ம்ருதுளா "நிச்சயமாக நான் நண்ணா பாடுவேன் சார் "என்றாள் தைரியமாக.
" இதுக்கு முன்னாடி எங்கேயாவது கச்சேரி பண்ணி இருக்கியா" என்று கேட்டார் முரளி.
"பூர்வ ஜென்மத்தில் பல கச்சேரிகளை பண்ணியிருக்கிறேன்" என்று அவள் எப்படி சொல்வாள்! அப்போது சுப்புலஷ்மி குறிக்கிட்டு ம்ருதுளாவை பற்றி ஒரு சிறிய பிரசங்கம் செய்து முடித்தாள். இதனால் ஓரளவுக்கு மனசாந்தி அடைந்த அந்த இருவரும், இன்னும் முதலில் ஏற்பட்ட தயக்கத்திலிருந்து விடுபடாமல் இருந்தார்கள். பின்பு ம்ருதுளா அவர்கள் இருவருக்கும் நமஸ்காரம் செய்தாள். அவளை ஆசீர்வதித்தார்கள்.
"நீ நண்ணா பாடணம். ஸ்ருதி மட்டும் வெலகாம பாத்துக்கோ. எங்கேயாவது கொஞ்சம் தொய்யர மாதிரி இருந்தா நாங்க பாத்துகறோம்" என்றார் ராமசந்திரன். "பாட போற பாட்டெல்லாம் பேப்பர்ல எழுதி வெச்சிண்டிருக்கயோ" என்று கேட்டார் முரளி. "இல்ல மாமா.எல்லா பாட்டும் நேக்கு அத்துபடி" என்று மிகவும் சர்வசாதாரணமாக ம்ருதுளா கூறினாள். "சரி.என்னவோ பகவான் விட்ட வழி" என்றார் ராமச்சந்திரன்.
இதற்குள் சபாவை சேர்ந்த ஒருவர் உள்ளே வந்து இவர்களிடம் "சரியாக 12 மணிக்கு ஆரம்பித்து விட வேண்டும். சரிதானே" என்று கூறிவிட்டு,மைக் சிஸ்டம் சரியாக வேலை செய்கிறததா என பார்த்துவிட்டு சென்றார். 11:55 ஆகும் போது எல்லோரும் மேடையின் மேல் அமர்ந்தார்கள். மேடைக்கு முன்பு ஒரு ஸ்கிரீன் போட்டு இருந்தது. ம்ருதுளாவின் பக்கத்தில் ஒரு பிளாஸ்க்கில் குடிக்கும் பதத்தில் வெந்நீரூம், கொஞ்சம் அதிமதுரம் தூளும் இருந்தது. சரியாக 12 மணிக்கு திரை விலகியது. ஹாலில் அங்கும் இங்கும் ஆக மொத்தம் 50 பேர்களுக்கு மேல் இல்லை.முன் வரிசையில் மட்டும் சில பிரபலங்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
சாரங்கன் குடும்பமும், சுப்பு லக்ஷ்மியும் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
ம்ருதுளா சபையை பார்த்து ஒரு கும்பிடு போட்ட பின்பு "எனக்கு இங்கு பாட வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் என் வந்தனங்கள். என்னுடைய குரு சுப்பு லக்ஷ்மி மாமிக்கும், ராதிகா அக்காவுக்கும், மிருதங்கம் வாசிக்கப் போகும் ராமச்சந்திரன் சாருக்கும், வயலின் முரளி சாருக்கும் என்னுடைய நமஸ்காரங்கள்" என்று கூறிவிட்டு ஸ்ருதி கூட்டினாள். சபையில் உள்ளவர்களிள் சிலர் "இந்தப் பெண் என்னதான் பாட முடியும்" என்று அலட்சியமாக இருந்தார்கள்.
வேறு சிலர் "ஒருவேளை இந்த பெண் நன்றாக பாடுபடுவாளோ" என்ற ஒரு நம்பிக்கையுடன் இருந்தார்கள். ம்ருதுளா கச்சேரியை ஆரம்பிக்கும் போது, சிலர் கேண்டினில் சாப்பிட்டுவிட்டு, உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். மிருதங்கம் ராமச்சந்திரன் சாரையும், முரளி சாரையும் பார்த்து ம்ருதுளா ஆரம்பிக்கலாமா என்று கண்ணாலே கேட்டாள். தனது முதல் கச்சேரியை ஆரம்பித்தாள் ம்ருதுளா.
அப்பொழுது அங்கிருந்த மைதிலிக்கும், சுப்புலக்ஷ்மிக்கும் படபடப்பாக இருந்தது.தாங்களே முதல் முதலில் கச்சேரி செய்வதாக நினைத்தார்கள்.
இதை எழுதும்போது எனக்கே படபடப்பாக இருக்கிறது. நாளை பதிவின் போது ம்ருதுளாவின் முதல் கச்சேரி எப்படி இருந்தது என்று நாம் அறிந்து கொள்ள போகிறோம். இதற்காக ஒரு நாள் காத்துக் கொண்டிருக்க போகிறோமே என்று என்ற எண்ணம் எனக்குள்ளும் இருக்கிறது.
No comments:
Post a Comment