வசந்த காலம் வருமோ? -27
By N Krishnamurthy
அந்த வாரம் வியாழக்கிழமை காலை பதினோரு மணிக்கு சுப்புலக்ஷ்மி மைதிலிக்கு போன் செய்தாள்.
" சொல்லுங்க, மாமி "என்றாள் மைதிலி.
" உங்காத்துல கல்கி வாங்கறேளா" என்றாள் சுப்புலக்ஷ்மி.
"ஆமாம் மாமி .இன்னிக்க காலைல வந்திருக்கு. இன்னும் படிக்கலை " என்றாள் மைதிலி.
" சுப்புடு சார்,ம்ருதுளா கச்சேரியை விமர்சனம் பண்ணியிருக்கார்" என்றாள் சுப்புலக்ஷ்மி.
மைதிலி சற்றே பயத்துடன் " என்ன மாமி எழுதியிருக்கார்" என்றாள். அதற்கு சுப்புலக்ஷ்மி " நீங்களே படிச்சுப்பாருங்கோ" என்று சொல்லி போனை துண்டித்தாள்.
மைதிலிக்கு பயம் பிடித்துக்கொண்டது. சுப்புடு சார் மனதில் பட்டதை நறுக்கு தெரித்தாற்போல் எழுதிவிடுவார் என்று அவள் அறிந்திருந்தாள்.
போனை எடுத்த இடத்தில் வைத்த பின், அன்று வந்திருந்த கல்கி பக்கங்களை கிடுகிடுவென புரட்டி, சங்கீத விமர்சன பக்கத்தை கண்டுபிடித்து படிக்கத்தொடங்கினாள்.
அதில் அவர் எழுதியிருந்ததை அப்படியே தருகிறேன்
" எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்று சொல்கிற மாதிரி நானும் சங்கீதக் கச்சேரிக்கு போயிண்டே இருக்கிறேன்.
எத்தன பேர் முழு கச்சேரியையும் மடியா, ஸ்ருதி விலகாம,ராக பாவம் மாறாமா பாடறாளோன்னு பாக்கறேன். இது போன ஞாயிற்றுக்கிழை வரை நடக்கல. சில பெரிய வித்வான்கள் நான் அவா கச்சேரிக்கு வருவதை விரும்புவதே இல்லை. எங்கே நான் ஏதாவது தப்பு கண்டுபிடித்து விடுவேனோ என்று யோசிக்கிறார்கள். சரியாக பாடினால் நான் ஏன் தப்பு கண்டுபிடிக்க போகிறேன்?
இப்படித்தான் போன வாரம் ஒரு கச்சேரியில் ஒரு பெரிய சீனியர் வித்துவான், சங்கீத பரம்பரை குடும்பத்திலிருந்து வந்தவர், தர்பாரில் லேசாக நாயகியை அழைத்து வந்து நுழைத்து விட்டார். யாராவது கண்டுபிடிக்க முன்னர் தர்பாருக்கு திரும்பி விட்டார். இதை நான் கேட்டு தொலச்சூட்டேன். இப்பொழுதெல்லாம் நான் கச்சேரிக்கு போனால் முடிந்தவரை என்னை காட்டிக் கொள்வதில்லை.
சரி இன்றைய விமர்சனத்திற்கு வருகிறேன். பொதுவா நிறைய கச்சேரிக்கு நான் போகும் போது, *வர்ணம்* முடிந்ததும், கச்சேரியிலிருந்து திரும்ப *வரணம்* என்ற நினைப்பே வரும். போன ஞாயிற்றுக்கிழமை மியூசிக் அகேடமி 12 மணி கச்சேரி போயிருந்தேன். எல்லோரையும் போல நானும் அசிரித்தையாக தான் கச்சேரிக்குப் போனேன். ஏதோ, மிருதுளா என்ற பொண்ணு முதல் முதலாக பாடரான்னு கேள்விப்பட்டேன் .சரி பார்க்கலாம் என்று போனேன்.பொண்ணு பாக்குறதுக்கு தேவதை மாதிரி இருந்தா. சரி சங்கீதம் எப்படி இருக்குமோன்னு பயந்து கொண்டு உட்கார்ந்து இருந்தேன்.
சஹானா வர்ணம் முடிஞ்சதும் எனக்கு தெரிஞ்சு போச்சு, ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு. கர்நாடக சங்கீதம் அழியாமல் இருக்கறதுக்கு பகவான் புதுசு புதுசா இவளைப்போல உற்பத்தி பண்ணி அனுப்பறான்னு. இந்த குழந்தை என்ன அருமையா பாடறா. இதுதான் முதல் கச்சேரி என்று சொன்னார்கள். பொய் சொல்றான்னு கூட எனக்கு முதலில் பட்டது. சீனியர் வித்வான்கள் கூட கச்சேரி முழுதும் இவ்வளவு பர்ஃபெக்டாக பாட முடியுமான்னு எனக்கு தெரியவில்லை. சாங் செலக்ஷன் அபாரம். லலிதா ராகத்ல இந்த பொண்ணு பாடின பாட்டு இருக்கே, ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் அசாத்தியம். நிச்சயம் அந்த சபாவல முத்துசாமி தீக்ஷதர் எங்கேயாவது உட்கார்ந்திருந்து, கேட்டுண்டு, ரசித்திருப்பார்ன்னு நினைக்கிறேன். கொடுத்த டயத்தை கன கச்சிதமா இந்த பொண்ணு பயன்படுத்தி இருக்கா .இந்த பொண்ணு கச்சேரியை ஒரேடியா பாராட்டி இருக்கேனே ஒண்ணும் குற்றம், குறை இல்லையான்னு கேக்கலாம். சத்தியமா குற்றம் ஏதுமில்லை. எனக்கு ஒரே ஒரு சின்ன குறை. இன்னும் ஒண்ணு, ரெண்டு தியாகராஜ கீர்த்தனைகளை இந்த குழந்தை பாடி இருக்கலாம் என்று. இந்த குழந்தைக்கு ஒரு அட்வைஸ். இவளுக்கு நிறைய கச்சேரி சான்ஸ் வந்துண்டே இருக்கும். எல்லா சான்ஸ்யையும் எடுத்துக்க வேண்டாம்.நல்ல சபாவா பார்த்து பாடணும்" என்று முடித்து இருந்தார்.
மைதிலியின் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போனது.
ம்ருதுளாவுக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைத்தது போல மைதிலி எண்ணினாள்.
சுப்புடு சார் இப்படி ஒரு பாராட்டு மழைல ம்ருதுளாவை நனைப்பார்ன்னு மைதிலி எதிர்பார்க்கவில்லை.
இது மாதிரி பாராட்டை அந்த நபர் சாதாரணமாக கொடுத்து விட மாட்டார்.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று சொல்வார்களே அது போலத்தான் இது.
கால் மணி சென்றதும் டெலிபோன் மணி அடித்தது. மைதிலி போனை எடுத்ததும் மறு முனையில் சுப்புலஷ்மி " என்ன மைதிலி படிச்சிட்டாங்களா" என்றா. அதற்கு மைதிலி " ஆமாம் மாமி. படிச்சூட்டேன். என்னால நம்பவே முடியல" என்றாள். அதற்கு சுப்புலக்ஷ்மி " அதுதான் சுப்புடு சார்.எந்த கொம்பனா இருந்தாலும் சரியா பாடலேன்னா கிழிச்சி போட்டுடுவார். நண்ணா பாடின அத பாராட்டாமல் இருக்க மாட்டார்" என்றாள். உடனே மைதிலி சுப்புலக்ஷ்மி யிடம் " மாமி நம்ப போய் அவரைப் பார்த்து, ம்ருதுளாவை அவருக்கு நமஸ்காரம் பண்ண சொல்லணும்னு நெனைக்கிறேன் .இது சாத்யமா "என்று கேட்டாள்.
அதற்கு சுப்புலக்ஷ்மி " நானும் அதே தான் நினைச்சுண்டு இருந்தேன். எங்கிட்ட சாருடைய நம்பர் இல்ல. விஸ்வநாத சர்மாவ காண்டாக்ட் பண்ணி,அவர் கிட்ட கேட்டு பாக்கிறேன். சுப்புடு சார் நம்பர் கொடுத்தார்ன்னா நம்ப போன்ல பேசி அவர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றாள்.
No comments:
Post a Comment