வசந்தகாலம் வருமோ?-10
By N Krishnamurthy
குழந்தை பிறந்த நான்கைந்து நாட்களுக்குள் ஒரு நாள், ரங்கநாயகி மட்டும் குழந்தையை பார்க்க வந்திருந்தாள். குழந்தை எடுத்து உச்சி முகர்ந்தாள். அவள் மைதிலியை பார்த்து
" என்ன மைதிலி. குழந்தை சாரங்கன் மாதிரி இருக்கா போல இருக்கே" என்றாள். "ஆமாங்க்கா, நேக்கும் அப்படித்தான் தோண்றது" என்றாள். ரங்கநாயகி இரண்டு மணி நேரம் அங்கு இருந்துவிட்டு பின் மதுரை திரும்பிச்சென்றாள்.
குழந்தை பிறந்த பத்தாவது நாள்,ஞாயிற்றுக்கிழமை (இன்று போல) தீபாவளியாக அமைந்து விட்டதால், சாரங்கன், சக்ரவர்த்தி,கோமளா ஆகியோர், சனிக்கிழமை பல்லவன் எக்ஸ்ப்ரசை பிடித்து திருச்சிக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மைதிலி,சீதாலக்ஷ்மி,
மஹாவிற்கு புடவையும்,பட்டுசாமிக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம்,குழந்தைக்கு புது துணியும், மத்தாப்பு, பட்டாசு வகையறாக்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தான் சாரங்கன்.
நுழைந்ததும் கை,கால் கழுவிக்கொண்டு கோமளா குழந்தையை மடியில் போட்டு கொஞ்சினாள்.சாரங்கனும்,சக்ரவர்த்தியும் கோமளா அருகில் தரையில் அமர்ந்து கொண்டனர்.
" குழந்தையை எடுத்துக்றேளா" என்று கோமளா சக்ரவர்த்தியை கேட்டாள். அதற்கு அவர்
"வேண்டாம்.வேண்டாம்.நீயே வச்சிக்கோ" என்று கூறி குழந்தையை கொஞ்சினார். அதன் பிறகு சாரங்கன் குழந்தையை தன்னுடைய மடியில் போட்டுக் கொண்டு கொஞ்சினான்.
குழந்தை சில சமயம் கண்ணை திறப்பதும்,
சில சமயம் கண்ணை மூடுவதாகவும் இருந்தாள்.
அவள் தன் பிஞ்சு விரல்களால் சாரங்கன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்ட போது அவன் நெஞ்சம் விம்மியது. அவன் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான்.
மறுநாள் ஞாயிறு தீபாவளி. மைதிலி தவிர அனைவரும் கங்கா ஸ்னானம் செய்தார்கள்.அனைவரும் புதுத்துணி அணிந்தனர்.
மஹாவும்,சாரங்கனும் ஒலை வெடி, ஊசி பட்டாசுகளை வெடித்தார்கள்.
சக்ரவர்த்தி,கோமளா,பட்டுசாமி,சீதா லக்ஷ்மி ஆகியோர் சாஸ்திரத்துக்கு கம்பி மத்தாப்பை கொளித்தினார்கள்.
மைதிலியையும், குழந்தையையும் கவனித்துக்கொள்ள வேண்டி இருந்ததால், சீதா லக்ஷ்மி தீபாவளி பக்ஷணங்களை செய்ய இயலவில்லை.
உறையூர் பாண்ட மங்கலம் ஆக்ராஹாரத்தை சேர்ந்த அகிலா மாமியிடம் முன் கூட்டியே ஆர்டர் கொடுத்திருந்தாள்.
லட்டு, காரா பூந்தி, முள் முறுக்கு, மிக்சர் மற்றும் தீபாவளி மருந்து ஆகியவற்றை அகிலா மாமியிடம் மஹாவை அனுப்பி, சனிக்கிழமை சாயங்காலமே வாங்கி வைத்திருந்தாள் சீதாலக்ஷ்மி.
காலை டிபனுக்கு தும்பை பூ மாதிரி வெள்ளை இட்லியும், மேட்சிங் தேங்காய் சட்னியும் பறிமாறப்பட்டது.
இடையிடையே தீபாவளி பக்ஷணங்களையும் வாயில் தள்ளிக்கொண்டிருந்தார்கள். வயிறு கெட்டு விடாமல் இருக்க தீபாவளி மருந்தையும் சேர்த்து சுவைத்தார்கள்.
நல்ல வேளையாக, 'டீவி'யின் ஆதிக்கம் இல்லாத சமயம் அது. பட்டி மன்றம் என்ற பெயரில் நடத்தப்படும் லூட்டிகளும்,எந்த சேனலை திருப்பினாலும் நாள் முழுக்க சினிமாவும் இல்லாத பொன்னான நேரம் அது.சென்னையில் வெஸ்ட் இண்டீசுடன் இந்தியா விளையாடிய இரண்டாம் டெஸ்ட்டின், இரண்டாம்நாள் ஆட்டத்தின் ரன்னிங் கமண்ட்ரியை கேட்க அனைவரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரேடியோவின் முன் அமர்வார்கள்.முதல் நாள் ஆட்டத்தில் எழுபத்தி ஆறு ரன்கள் அடித்திருந்த கவாஸ்கர்,ஹோல்டிங்,ஆண்டி ராபார்ட்ஸ் போலிங்கை எதிர் கொண்டு, இன்று சென்ச்சுரி அடிப்பாரா என்ற எதிர் பார்ப்பு அனைத்து ரசிகர்களின் உள்ளங்களிலும் இருந்தது.
பகல் பன்னிரண்டரை மணிக்கு வாழை இலை போட்டு உணவு பறிமாறப்பட்டது.
தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடி விட்டு,அன்று மாலை ரங்கநாயகி தன் கணவன், மற்றும் பெண்ணுடன் மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்திருந்தாள். அன்று இரவு அவர்களுக்கு சமைக்க வேண்டி இருந்ததாலும், மைதிலிக்கு பத்திய சாப்பாடு சமைத்து போட வேண்டி இருந்ததாலும், சீதாலஷ்மி பக்கத்து வீட்டில் இருந்த ஆனந்தா மாமியை சமையலுக்கு ஒத்தாசைக்கு கூப்பிட்டு இருந்தாள். இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றார்கள்.
No comments:
Post a Comment