Saturday, November 25, 2023

வசந்த காலம் வருமோ? -23

 வசந்த காலம் வருமோ?-23

By N Krishnamurthy 

சுப்புலக்ஷ்மிக்கு, இந்த வருஷம் ம்ருதுளாவிற்க்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அடுத்த வருஷமாவது  கொடுக்கிறேன் என்று சொல்கிறாரே என்று ஆனந்த பட்டாள்.

ம்ருதுளாவும், மைதிலியும்  விசுவநாத சர்மா  வீட்டுக்கு போய்விட்டு வந்த அடுத்த  மாதத்தில், ஒரு நாள், ஒரு வெள்ளிக்கிழமை.

ம்ருதுளாவிற்கு கல்லூரி  நிறுவனர் நினைவு தினமாதலால் விடுமுறை  விட்டிருந்தார்கள்.

ம்ருதுளா குளித்துவிட்டு, சுவாமி படத்தின் முன் உட்கார்ந்து, ச்யாமா சாஸ்திரிகளின் பைரவி ஸ்வரஜதி "அம்ப காமாட்சி"ஐ பாட ஆரம்பித்தாள். ஏற்கனவே உருக்கமாக இருக்கும் அந்த பாடல் ம்ருதுளாவின் குரலில் இன்னும் உருக்கம் கூடியது. பாடி முடிக்கவும், டெலிபோன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

 ம்ருதுளா சென்று போனை எடுத்தாள். "யார் பேசர்து" என்றாள். அந்த பக்கம் பேசிய சுப்பு லக்ஷ்மி " நான்தான் ம்ருது,மாமி பேசறேன். கொஞ்சம் அம்மாவ கூப்படுறியா" என்றாள். சுப்புலக்ஷ்மி ."தோ கூப்பிடறேன் மாமி" என்று சொல்லிவிட்டு "அம்மா,பாட்டு டீச்சர் கூப்படறா" என்றாள். அடுக்களையில் வேலையாக இருந்த மைதிலி கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து விட்டு,போனை ம்ருதுளாவிடமிருந்து வாங்கிக் கொண்டாள். "சொல்லுங்க மாமி, மைதிலி பேசுறேன்" என்றாள்.

சுப்புலக்ஷ்மி அவளிடம் எடுத்தவுடனேயே "கடவுள் நம்ம பக்கம் இருக்கார் மைதிலி" என்றாள். "என்ன சொல்றேங்க நீங்க. புரியலயே" என்றாள் மைதிலி."என் சிஷ்யை, அதான் உன் பொண்ணு  ம்ருதுளாவுக்கு இந்த வருஷமே மியூசிக் அகாடமி 12 மணி கச்சேரிக்கு சான்ஸ் கெடைச்சிருக்கு" என்றாள் சுப்புலக்ஷ்மி. இதைக் கேட்ட மைதிலி ஆச்சரியத்துடன் "இந்த வருஷம் தான் ஃபுல் ஆயிடுத்துன்னு சொன்னாரே மாமி. எப்டி இப்டி திடீர்னு" என்றாள்.

 "அத ஏன் கேக்கற.

நேத்து ராத்திரி ஒன்பது மணி இருக்கும். விசுவநாத சர்மா மாமா ஃபோன் பண்ணார். வர ஞாயிற்றுக்கிழமை 12 மணி ஸ்லாட்ல, அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ, பே ஏரியாவிலேந்து, சங்கர க்ருஷ்ணன்ற பையன் பாடறதா இருந்ததாம். அவனுக்கு திடீர்னு அம்ம போட்டிருக்கறதனால, அவனால பாட முடியல. இப்போ அவனுக்கு பதிலா ம்ருதளாவை பாட வைக்கலாம்னு மாமா  சஜஸ்ட் பண்ண, மீதீ பேர்லாம் ஒத்துண்டு இருக்காளாம். நீங்க ஓகேன்னு சொல்லிட்டீங்கன்னா, ப்ரோக்ராம் சேஞ்ச் ஆனது பத்தி ந்யூஸ் பேப்பருக்கு ந்யூஸ் கொடுத்துடுவேன்னு  சொன்னார்.நான் உங்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன் "என்றாள் சுப்புலக்ஷ்மி.

"கேக்கற்தக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமி. எல்லாம் உங்க முயற்சி தான். ஆமா என்னிக்கு பாடணம்" என்றாள் மைதிலி.

" நாளனிக்கு, ஞாயிற்றுக்கிழமை, பகல் 12 மணிக்கு பாடி ஆகணும்" என்றாள்  சுப்புலக்ஷ்மி.

 "அவ்ளோ சீக்கிரம் பாட முடியுமா மாமி"  என்று கேட்டாள் மைதிலி ." நீ ஒண்ணுக்கும் கவலைப்படாத மைதிலி. அவள  உடனே எங்காத்துக்கு  அனுப்பு. இன்னிக்கும், நாளைக்கும் ரெண்டு நாளும் முழுசா அவ எங்காத்துல இருக்கட்டும். நான் அவ்வள ட்ரெய்ன் பண்றேன். இத சொல்றதுக்கு எனக்கே வேடிக்கையா இருக்கு. அவளை ட்ரைன் பண்ண நான் யாரு. ஆனா கச்சேரிக்குன்னு எப்பவுமே ஒரு பேட்டேர்ன் இருக்கு. அந்தப் பேட்டர்ன் அமச்சி கொடுத்தது மாமேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தான். நான் அவளுக்கு கச்சேரி பாணியை கத்து கொடுத்து,  சாங் செலக்ஷன் பண்ண  ஹெல்ப் பண்றேன். விஸ்வநாத சர்மா மாமா கிட்ட நான் ஓகேன்னு சொல்லிடலாமா "என்று கேட்டாள்.

" எல்லாமே உங்க முடிவு தான் மாமி. அவள இந்த லெவலுக்கு கொண்டு வந்ததே நீங்கதானே ' என்றாள்  மைதிலிபவ்யமாக.

"வெளக்குல எண்ணை இருந்தா தான் தீபத்தை ஏத்த முடியும்" என்றாள் சுப்புலக்ஷ்மி.

கோமளாவிடமும், ம்ருதுளாவிடமும், சக்கரவர்த்தியிடமும் மைதிலி விஷயத்தை  கூறினாள். எல்லோரும் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை. கோமளா உடனே ரங்கநாயகிக்கு போன் செய்து இந்த விவரத்தை கூறி,  மருமாளின் கச்சேரிக்கு புறப்பட்டு வருமாறு சொன்னாள்.

இதைக் கேட்ட ரங்கநாயகி விட்டோத்தியாக "பாக்கறம்மா. முடிஞ்சா தான் வருவேன்" என்றாள். ம்ருதுளாவை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறி,அவள்   சாப்பிட்டவுடன் அவளை அழைத்துக் கொண்டு போய் சுப்புலக்ஷ்மி வீட்டிற்கு சென்றாள் மைதிலி. பின்பு அவள் சுப்புலஷ்மியிடம் "நேக்கு  ரொம்ப நெர்வசா இருக்கு மாமி" என்றாள். ம்ருதுளா பார்க்காத சமயமா பார்த்து, சுப்புலஷ்மி "உன்ன விட நேக்கு தான் அதிக  நெர்வசா இருக்கு. நம்ப ரெண்டு பேரும் தான் நெர்வசா  இருக்கோம்.ம்ருதுளாவ பாரு. கொஞ்சம் கூட   கவலையே படல. உன் பொண்ணு  பிச்சு உதறிட போறாள்" என்றாள்  சுப்புலக்ஷ்மி.

No comments:

Post a Comment