Wednesday, November 1, 2023

நாற்கோணம் -2

 நாற்கோணம் -2

By N Krishnamurthy 

 *ஜானகி:* சீதா ஞாயிற்றுக்கிழமை என்ன அவ வீட்டுக்கு கூப்பிட்ட போது முதல்ல கொஞ்சம் தயங்கினேன். நம்பளால எதுக்கு  தொந்தரவுன்னு நினைச்சேன். எட்டு மணிக்கு மறுபடி போன் பண்ணி 'ஏன் இன்னும் வரலைன்னு' சண்ட போட்டா.  சரின்னு கிளம்பிட்டேன்.  முட்டாள்தனமா நான் அன்னைக்கு போகலைன்னு தீர்மானம் பண்ணி இருந்தா, வாழ்க்கையில பெருசா மிஸ் பண்ணி இருப்பேன்.கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்ததக்கப்புறம் "நான் ஹாஸ்டலுக்கு கிளம்புறேன்" சொன்ன போது "நீ சாப்பிட்டு தான் போகணும்" அடம் பிடிச்சா சீதா. எல்லாமே நம்ம நினைக்கிறபடி நடக்கிறது இல்ல. மேல இருக்கற ஒருவந்தான் எல்லாத்தையும் நடத்தி  வைக்கிறான்னு  நான் தீர்மானமா நம்பறவ. அதனால்தான் அப்படி சீதா  வற்புறுத்தின போது நான் ஒத்துண்டிருக்கணும் . இல்லேன்னா  நான் ராம பாத்து இருக்க முடியுமா.

ராம்தான் சீதா பண்ணிக்க போற மாப்பிள்ளைன்னு  தெரிஞ்சும் என் மனசு ஏன் அவன் கிட்ட போச்சோ.இனிமே நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.சீதாவை அவ அம்மா சமையல் ரூம் பக்கம் கூப்ட்ட போது ராம் என் கூட பேச ஆரம்பிச்சான். பாவி,என்னமா அழகா இருக்கான். ப்ளு ஜீன்ஸும்,வெள்ளை டீ ஷர்ட்டும் போட்டதால அவன் அழகா இருக்கானா இல்லை அவன் அது ரெண்டையும் உடுத்திண்டதால அவைகளுக்கு அழகு வந்தூட்தானா தெரியல.  அழகா இருக்கறவாளுக்கு அறிவு கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்னு நினைச்சேன்.(தற்பெருமை அடிக்கிறேன்னு நினைச்சுக்க கூடாது, நான் இதுல எக்சப்ஷன்)

ஆனா அவன்  என் எண்ணத்தில் மண்ணை வாரி போட்டுட்டான். பாரதியை பற்றி பேசினோம்,பாரதிக்கும், எங்க ஊர் பக்கத்ல இருக்க  கடையத்துக்கு உள்ள தொடர்பை  பற்றி,அவன்  அப்படி பேசறான். அப்படியே அக்ஷரம் தவறாம குயில் பாட்டை ஒப்பிக்கறான். சரி பேச்ச கொஞ்சம் கர்நாடிக் மியூசிக் பக்கம் திருப்பலாம்னு பாத்தா,அதையும் அவன் விட்டு வைக்கல.என்ன ஆச்சர்யம்.எனக்கும் அவனுக்கும் பிடிச்சுதே ஒரே ராகம்.பைரவி.

ச்யாமா சாஸ்திரி பைரவில பண்ணியிருக்கற ,

'அம்ப காமாக்ஷி'  ஸ்வரஜதியை நாள் பூரா கேப்பேன்றான்.(நேக்கும் அது உயிர்).

பழைய பாடகாள்ல யார் பிடிக்கும்னு கேட்டேன்.ஜி.என்.பி,

மதுரை மணின்னான்.என் சாய்சும் இதான்.நேக்கு தீடீர்னு ஒரு சந்தேகம்.இக்ஷிணி ஏதாவது வசியம்பண்ணி என் மனசல இருக்கறத வேவு பாக்றானோன்னு. கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசிண்டு இருந்தோம். நானும் அவனும் ஒரே வேவ் லெங்த்ல  இருப்பதை நான் தெரிஞ்சிண்டேன். இருந்தா கூட மனசுக்குள்ள "ஜானகி உன் டியர் ஃப்ரெண்ட்.ராம் அவள கல்யாணம் பண்ணிக்க போறவன்.அவன் மேல ஆசையை  நீ வளத்துகறது  நண்ணா  இல்லைன்னு" மனசு ஒரு பக்கம் நெனச்சாலும், இன்னொரு பக்கம் இந்த பாழும்  மனசு அவனையே சுத்தி சுத்தி வரது.இதுக்குதான் கண்ணதாசன் ரெண்டு மனம் வேணும்னு எழுதினானா?

நெனச்சு வாழ ஒண்ணு.மறந்து வாழ ஒண்ணுண்ணு.

கடைசீல கிளம்பும்போது அவன் என் நம்பரை கேட்டான். எனக்கு கொடுக்கிறதா வேணமான்னு தயக்கம். சீதா வேற பாத்துண்டு இருந்தா. அவ பார்வையே சரியில்லை. வேற வழி இல்லாம என் நம்பர் கொடுத்துட்டேன். அப்ப சீதா என்ன முறச்ச மாதிரி தெரிஞ்சது. சரி பார்த்துக்கலாம்ன்னு, அவா கிட்ட சொல்லிண்டு  ஹாஸ்டலுக்கு  கெளம்பீட்டேன்.

"நான் ஓணா உன்ன டிராப் பண்றேன்னு" ராம் சொல்வானோன்னு  நெனைச்சேன். நல்ல வேளை ராம் அப்படி ஒண்ணும் சொல்லல.

No comments:

Post a Comment