வசந்த காலம் வருமோ? -6
By N Krishnamurthy
ஐந்து நிமிடம் கழித்து, டாக்டரின் ரூமிலிருந்து வெளியே வந்த டாக்டரின் அசிஸ்டன்ட், சாரங்கனை பார்த்து "உங்க ரெண்டு பேரையும் மேடம் கூப்பிடுகிறாங்க" என்று சொன்னாள். இரண்டு பேரும் எழுந்து டாக்டரின் ரூம் அருகில் சென்றதும், சாரங்கன் ரூம் கதவைத் தட்டினான்
." ப்ளீஸ் கம் இன்" என்று குரல் கொடுத்தாள் டாக்டர். உள்ளே சென்று இருவரும் டாக்டர் எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள். டாக்டர் என்ன சொல்லப் போகிறாளோ என்று பதைபதப்பு அவர்கள் இருவரிடம் காணப்பட்டது.
இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர், இலங்கைக்கு சீதாதேவியை தேடிச்சென்ற அனுமன் திரும்ப வந்து,ராமனிடம் "கண்டேன் சீதையை" என்று சொல்லிய மாதிரி, அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை வைத்திருக்கிறேன்" என்று கூறினாள். இதைக் கேட்ட உடனே இருவருக்கும் கொஞ்சம் மூச்சு வந்தது. பிறகு தொடர்ந்த டாக்டர் " உங்கள் இருவரையும் நன்றாக டெஸ்ட் செய்து பார்த்ததில், நீங்கள் இருவரும் மிகவும் நார்மலாக இருக்கிறீர்கள் என்றுதெரிய வந்தது. உங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கும் சாத்திய கூறுகள் நிறைய இருக்கின்றன. நிறைய தம்பதிகளுக்கு கல்யாணம் முடிந்த உடனே குழந்தை உண்டாகி விடுகிறது. சிலருக்கு கொஞ்ச காலம் கழித்து தான் இது நடக்கிறது. எப்படி, எதனால், இப்படி நடக்கிறது என்று விஞ்ஞான உலகமும் அறிந்து கொள்ள முடிவதில்லை. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறினாள் டாக்டர்.
மைதிலி தன்னுடைய சீட்டிலிருந்து எழுந்து, டாக்டர் கையை பற்றி கொண்டு" ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்"என்று கூறினாள். அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. அதற்கு டாக்டர் அவள் தோளை தட்டிக் கொடுத்து " நான் இருப்பதை தானே சொன்னேன். இரண்டு பேரும் சென்று வாருங்கள். அடுத்த முறை வரும்போது நீ கர்ப்பமா இருக்கற செய்தியோடு என்னை வந்து பார்க்க வேண்டும்" என்று கூறினாள்.
இரண்டு பேரும் டாக்டரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.
இப்போதைக்கு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் நோக்கத்தை கைவிடலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.
அந்த தீபாவளிக்கு ரங்கநாயகி தன் கணவர் மற்றும் பெண்ணுடன் வந்திருந்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரம் தங்கி இருந்தாள். அவள் மைதிலியை பார்த்து
" என்ன மைதிலி. இதுவரைக்கும் ஒண்ணும் விசேஷமில்லையா . கல்யாணம் ஆகி இவ்வளவு வருஷம் ஆய்டுத்தே. ஒரு ஒரு நல்ல டாக்டரா பார்த்து டெஸ்ட் பண்ணிக்க வேண்டாமா. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பேரனோ பேத்தியோ பாக்கணம்னு ஆச இருக்காதா" என்றாள். இதைக் கேட்ட மைதிலி "ஆமாங்க்கா.டெஸ்ட் பண்ணிக்கணும்" என்றாள் .
ரங்கநாயகி,மைதிலி இல்லாத போது , கோமளாவிடம் இதைப் பற்றி பேசினாள்.
" அம்மா. இது இப்படியே போனா நல்லதில்ல. நேக்கென்னமோ மைதிலிகிட்டதான் கொறை இருக்கும்ன்னு தோண்றது.மைதிலி சித்தி ஒத்திக்கு கல்யாணம் ஆகி இருபத்தஞ்சு வருஷம் ஆயும் கொழந்த பொறக்கலயாம் "என்று திரியை கொளுத்திப்போட்டாள்.
கோமளம் ரங்கநாயகி சொன்னதை அவ்வளவாக ரசிக்கவில்லை.
மகளைப் பார்த்து அவள் " நீ பாட்டுக்கு சும்மா இப்படி அசட்டு பிசட்டுன்னு பேசிண்டு இருக்காத. நீ பேசறது மைதிலிக்கு கேட்டூட போறது. நேக்கு என்னமோ அவளுக்கு குழந்தை பிறக்கும்னு தோண்றது" என்று கூறினாள்.
அம்மா இப்படி கட்சி மாறுவாள் என்று ரங்கநாயகி எதிர்பார்க்கவில்லை. அவள் கோமளத்தை பார்த்து கடுகடுத்த குரலில் " நேக்கு என்னம்மா வந்தது. உன் நன்மைக்கு தான் சொல்றேன். அவளுக்கு குழந்தை பொறந்தா நேக்கு என்ன, பொறக்கலேன்னு நேக்கு என்ன" என்றாள் நிஷ்டூரமாக.
பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனின் கால்களை பிடித்தவாறு இருந்த ஸ்ரீதேவி " பிரபு என்ன நீங்க இதெயெல்லாம் பாத்துண்டு சும்மா இருக்கீங்க. மைதிலிக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க.அவளுக்கு எப்போ கொழந்தை பொறக்கும்" என்று ஆவலுடன் கேட்டாள். அதற்கு பதிலாக அந்த பெருமாள் ஒரு புன்னகையை உதிர்த்தார்.
பின்பு அவர் ஸ்ரீதேவியிடம்" அது எனக்கும் இக்கதாசிரியருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்" என்றார்.
இதைக் கேட்ட ஸ்ரீதேவி பொய்யான கோபத்துடன் "நீங்கள் சொல்லாவிட்டால் போகிறது,விடுங்கள்" என்றாள். பரந்தாமன் "தேவி, கோபத்தில் உன் முகம் இன்னும் அழகாக ஜொலிக்கிறது. அந்த அழகை பார்த்து ரசிக்கத்தான் நான் அவ்விதம் சொன்னேன்" என்று கூறிவிட்டு அவள் காதில் அந்த ரகசியத்தை கூறினார்
(தொடரும்
No comments:
Post a Comment