Wednesday, November 1, 2023

நாற்கோணம் -1

 நாற்கோணம் -1

By N Krishnamurthy 

இந்த கதையை நான் எழுதப்போவதில்லை. அந்ததந்த கதாபாத்திரங்களே கதையை நகர்த்திச்செல்லப்போகிறார்கள்.

--------------------------------------------------------------

 *சீதா:* "மாடு மாதிரி வளந்திருக்கயே தவிர உனக்கு அறிவு போறாதடி" என்பாள் அம்மா, நான் சின்ன தவறு செய்தால் கூட.

அதன் தாக்கம் இந்த மர மண்டைக்கு இப்போதுதான் உரைக்கிறது. இருபத்தி  ரெண்டு வயதாகியும், இப்படி தவறு பண்ணீட்டனே என நெஞ்சு பதபதைக்கிறது.

எங்க இனத்தை சேர்ந்தவர்களுக்கு நினைச்சுக்கூட பாக்க முடியாத எம்.ஐ.டி யில் என்ஜினியரிங் படிச்சி,அண்ணா யூனிவர்சிடியில் ரெண்டாவது ரேங்க் வந்து,ப்ளேஸ்மண்டில்,

எடுத்த எடுப்பிலேயே மாசம் தொண்ணூராயிரம் ரூபாய் வேலைல ஒரு வருஷம் குப்பை கொட்டியும், இந்த இமாலய தப்பை எப்படி பண்ணேன். 

இப்போ மருகி என்ன பண்ணறது.

அன்னிக்க அந்த தப்பை நான் பண்ணியிருக்க கூடாது.

என் பிரண்ட் ஜானகியை வீட்டுக்கு கூப்பட்டது தப்பா,போயிட்டு வரேன்னு சொன்னவளை வலுக்கட்டாயமா 'லன்ச் சாப்டூட்டுதான்  போணம்னு' சொன்னது தப்பா,அந்த சமயம் பாத்து அத்தை பையன்(என் முறை பையன்) ராம் எங்காத்துக்கு வந்தது தப்பா,அவனை இந்த ராக்ஷசிக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணினே அது தப்பான்னா யோசிக்கறேன்,யோசிக்கறேன், மூளை கொழம்பறது.எனக்கு நானே சூன்யம் வைச்சூண்டூட்டேனோ?

ஜானகி எங்கூட வேல பாக்றவ.என் வயசுதான்.

சொந்த ஊர் அம்பாசமுத்திரம்

.தாமிரபரணி தண்ணி குடிச்சு வளர்ந்ததனால உடம்புல அப்படி ஒரு மினு மினுப்பு.கரு கருன்னு பாம்பு மாதிரி நெளியற கூந்தல்.செத்த  பூசின மாரி உடம்பு.

பொம்னாட்டிக்கே அவளது காந்த கண்ணையும்,சிரிப்பையும்  பாத்தா பேசணம்னு தோணும். அப்படீன்னா ஆம்பளைகளுக்கு கேக்கணமா.

நான் ஜானகியை விவரிச்சதை பாத்து நான் அழகில்லைன்னு அவசரப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம்.கிட்டத்தட்ட நானும் அவளை மாதிரிதான்.என்ன,கலர் துளியூண்டு(Just 10%) கொறச்சல்.

நான் காவேரி தண்ணி குடிச்சு வளர்ந்தவ. +2 வரைக்கும் கும்பகோணத்தல படிச்சேன்.அந்த சமயம் பாத்து அப்பாவும் ரிடயர் ஆனாதால,குடும்பமே சப் ஜாடா மெட்ராசுக்கு வந்தூட்டோம்.நங்க நல்லூர்ல 27 ஆவது தெருவுல பிளாட்ல இருக்கோம்.

பகவானே.ஆஞ்ஜநேயா.

நான் பண்ண தப்பால எனக்கு ராம் கிடைக்காம பண்ணீடாதே. எல்லாம் நல்லபடிய போனா நோக்கு வடமால சாத்தறேன்.

No comments:

Post a Comment