Sunday, November 5, 2023

நாற்கோணம் - 21

 நாற்கோணம் - 21

By N Krishnamurthy 

 *சீதா கல்யாணம் வைபோகமே* 

 *சீதா:* 

அடுத்த நாள் காலையில் டயத்தோடு ஆபீசுக்கு போய் சீட்டில் உட்கார்ந்த போது  நேக்கு உற்சாகம் பொங்கி வழிஞ்சிண்டிருந்தது. மகாகவி பாரதியின் 'வீணையடி நீ எனக்கு' பாடலை, சினிமாவில் ஜேசுதாஸ் பாடுகிற மெட்டில், லேசாக முணுமுணுத்தேன்.

ஐஞ்சு  நிமிஷம் கழிச்சு தான் ஜானகி வந்தா.  என் உற்சாகத்தை பாத்ததும் ஜானகி 

" ஆச்சரியமா இருக்கு. என்ன இது,சீதாவா இல்ல வேற யாரோவா பக்கத்து சீட்டு உக்காந்து இருக்கறது" என்றாள் என்னை பாத்து.

"  உன் பிரண்டு சீதாவே தான்" என்று நான் சிரிப்புடன்  கூற, ஜானகி 

" என்ன இவ்வளவு சந்தோஷமா இருக்க" என்றாள்.

" இருக்காதா பின்ன. நெனச்சத அடையப்போறேன்னு எண்ணும் போது, இதயத்தில் பொங்கி வழியும் சந்தோஷம், கண்கள்  வழியாக தெரிவது இயற்கை தானே" என்றேன்.

"வாவ். என்ன சீதா பெரிய கவிதாயினி ஆயிட்டே"  என்றாள். அவளிடம் நான் நடந்ததை எல்லாம்  சொன்னேன். ஜானகி முகம் தொங்கிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு "அப்படியா, சீதா கிரேட்.கங்கிராட்ஸ்" என்று ஒப்புக்கு  சொல்லீட்டு வேலையை பாக்க ஆரம்பிச்சா.

காபி சாப்படற சமயத்தில அவ கிட்ட  ",உன் ராகவண்ணா  ஜாதகத்தையும் அம்மா கிட்ட  கொண்டு வந்து கொடுத்திருக்க போலிருக்கு. ஒரு விஷயம் தெரியுமா அந்த ஜாதகமும், என் ஜாதகம் இம்மி கூட பொருந்தலயாம்" என்றேன் அவள் முகத்தை பாத்துண்டே. அதற்கு அவள் விட்டோத்தியாக " இன்னமே  பொருந்தினா என்ன.இல்லேன்னா என்ன" என்றாள். இந்த விஷயத்தில் இவளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று எனக்கு முதலில் புரியவில்லை. அப்புறம் கொஞ்சம் யோசித்துப் பாத்ததில்

" ஒருவேளை நான் ராகவனை பண்ணிண்டிருந்தா, ராமுக்கு இவள் அடி போட்டிருப்பாளோ" ன்னு நெனக்கத் தோணித்து. எனக்கு இருந்த சந்தோஷத்தல அந்த சமயத்தில் அது ஒணும் நேக்கு  பெரிய தப்பா படல. ஐயோ பாவம்ன்னு என்  மனசு அவளுக்கு அனுதாபப்பட்டது.

அப்பா சத்தரத்துக்கு அலஞ்சு  தி.நகர்ல கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்த பிக்ஸ் பண்ணா. இரண்டு மாசம் கழிச்சு, ஒரு சுப  முஹுர்தத்ல நேக்கும், ராமுக்கும் கல்யாணம் ஜாம் ஜாம்ன்னு என்று நடந்தது.ஜானகி தான் மணப்பெண்ணின் தோழி.மால மாத்றபோது, அம்மாவோட ஒண்ணூட்ட தம்பி ரங்கன் மாமா என்ன தூக்கிண்டார்.ராமை தூங்கிண்டது அவரோட சொந்த மாமா,என்னோட அப்பாதான்.எங்கேயாவது மாமனார் மாப்ளையை மால மாத்ற போது தூக்கிண்ட கேலிகூத்த  கேள்வி பட்டு இருக்கேளா?

ராம் நேக்கு தாலி கட்டி முடிஞ்சதும்  என் கண்ணிலும், அப்பா, அம்மா கண்ணிலும்  கண்ணீர் பொங்கி பெருகித்து. 

எங்க மூணு பேர்ல ரொம்ப அதிகமா அழுதது  அப்பா தான். சாதாரணமா அப்பாவுக்கும், பொண்ணுக்கும் தான் பந்தம் அதிகமா இருக்கும்னு சொல்லுவா. நான் அழுதத பாத்த அம்மா அழுதா. ராமும் லேசா கண் கலங்கின மாரி இருந்தது.

அப்பா அழுதத பாத்து, தாங்க முடியாத கௌசி அத்தை, அப்பாவை கட்டிண்டு,

" ஏண்ணா. நீ எதுக்கு கண் கலங்கற. உன் பொண்ணு எங்க போப்போறா .எங்காத்துக்கு தானே வரப்போறா. உன்  கண்ணை தொடச்சுகோண்ணா"  என்று ஆறுதல் சொல்லச்சே அத்தையும் அழுதா. அவ ரெண்டு பேரையும் பார்க்கும்போது பாசமலர் சிவாஜி கணேசன்,சாவித்திரி மாதிரி இருந்தது

ஆனந்தக் கண்ணீர் என்று சொல்வாளே அது இது தான் போல இருக்கு. கன்னத்தில் வடிஞ்ச கண்ணீர் சிறிது வாயில் பட்ட போது உப்பு கரிச்சது. ஆனந்த கண்ணீரா இருந்தாலும், துக்கப்படும் போது வரும்  கண்ணீரா இருந்தாலும் இரண்டிலும் உப்பு தான்னு  நான் என்று தெரிஞ்சிண்டேன்.

 ஹனீ மூனுக்கு நாங்க   ஒரு வாரம் சிங்கப்பூர் போய் வந்தோம்.

கல்யாணம் முடிஞ்ச ஆறு மாசம் கழிச்சு, திடீர்ன்னு  காலைல எழுந்ததும்  வயித்தை  பெரட்டித்து. ஒரு தரம்  வாயிலெடுத்தேன். கௌசி அத்தை என் தலய ரெண்டு கையாலும் பிடிச்சுண்டு என்னை பாத்து

" இந்த மாசம் குளிச்சயா"  ன்னு கேட்டா. நான் வெக்கத்ல குனிஞ்சேன். சாயங்காலமே ராமும், நானும் பக்கத்தில இருந்த லேடி டாக்டர் கிட்ட போய் செக்கப்பண்ணிண்டேன் .

கர்ப்பமாய் இருப்பது உறுதியாயாச்சு. அடுத்த பத்தாவது மாசத்தல தங்க விக்கிரகம் மாதிரி ஒரு ஆணும்,பெண்ணும் பொறந்தா. பையனுக்கு சித்தார்த்ன்னும், பொண்ணுக்கு சித்ராங்கீன்னும்  பேர் வெச்சோம் . 

அம்மா அடிக்கடி ஆத்துக்கு வந்து போயிண்டிருக்கா. பேரனையும், பேத்தியையும் பாத்துகறத்துக்கே அத்தைக்கு நேரம் போறல. ஜானகியும் ஆபீசுக்கு வந்து கொண்டிருக்கிறா. முன்ன  போல  அவ கிட்ட  அதிக உற்சாகம் இல்லை. நான் ராம் கிட்ட சொல்லி " ஜானகிக்கு

ஏதாவது  நல்ல இடமா இருந்தா பாருங்களேன். பையன் நல்லவனா இருக்கணும்" னேன். இதக்கு ராம் " நேக்கு தெரிஞ்ச ஒரு நல்ல பையன், அழகான பொண்ண கல்யாணம் பண்ணிண்டு, அவளுக்கு ஒரு ஆண், ஒரு பெண்ணுன்னு  ரெட்டை குழந்தைய கொடுத்து இருக்கான். அவன ஓணா ரெக்கமண்ட் பண்ணலாமா" ன்னு கேட்டார்.ராமை நோக்கி கையை ஓங்கி

 " என்ன .இப்டி ஒரு ஐடியா இருக்கா. கொன்னுடுவேன்"னேன்.

எங்க டீம் லீடர் ஜெயஸ்ரீ அமெரிக்காவில் ஒரு ப்ராஜக்ட்டுகாக   ரெண்டு வருஷம் போயிருந்தபோது, அங்க அவ கூட  வேலை செஞ்ச ஜான் பீட்டரை கல்யாணம் பண்ணிண்டூட்டா.அங்கேயே செட்டில் ஆய்ட்டு, இங்க வேலய ரிசைன் பண்ணீட்டா.

அவ எடத்துக்கு, C.T.S லேந்து ரகுராமன்னு சேர்ந்திருந்தார்.

அவரும்,ராமை போல நல்ல பர்சனாலிட்டி. ஆனா கொஞ்சம் கலர் கம்மி.வேலைக்கு சேந்த ஆறு மாசத்ல ரகுராமன் ஜானகி கிட்ட கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுக்றத பாத்தேன். ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ நடக்கறதுன்னு என் உள் மனசுல தோணித்து. ரெண்டு மாசம் கழிச்சு விஷயம் வெளீல வந்தது.ஜானகி எல்லாத்தையும் சொன்னா. மனசு ஒத்து போனதால,ரெண்டு பேரும் ஜாதக பொருத்தம் பாக்கல.

அவ கல்யாணத்துக்கு நானும்,இவரும் போய்ட்டு வந்தோம். பெருமாள் யாருக்கு 

யாரை ஜோடியாக்கணம்னு பிளான்பண்றான்.

அத நம்பளாலதான் முன் கூட்டியே தெரிஞ்சிக்க முடியல.

காலம் அது பாட்டுக்கு பறக்கறது.

சித்தார்துக்கும்,சித்ராங்கிக்கும் நாலு வயசு முடியபோறது.

இன்னிக்கி காலேலேந்து தல சுத்தல். சாங்காலம் லேடி டாக்டரை போய் பாக்கணம்.

பூஜ ரூம்லேந்து அத்தை

"குலம் தரும்,செல்வம் தந்திடும்,அடியார் படு துயர் ஆயின எல்லாம்

நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும்,

வலம் தரும் மற்றும் தந்திடும்,

பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்"ன்னு பாட ஆரம்பிச்சூட்டா.

ஆபிஸ் போறதுக்கு முன்னாடி அத்தைக்கு ஒத்தாசய இருக்கணம்.நான் வரட்டமா?

            .. *சுபம்*

No comments:

Post a Comment