Thursday, November 23, 2023

வசந்த காலம் வருமோ?- 19

 வசந்த காலம் வருமோ?- 19

By N Krishnamurthy 

சுப்புலக்ஷ்மி "குழந்தை என்ன சொல்றா" என்று கேட்டவுடன் "ஒண்ணும் இல்ல மாமி. நீங்க உங்க ஸ்டூடன்ட்ஸ்க்கு  சொல்லிக் கொடுத்துண்டு இருந்தேங்களே "கொலுவ மரகத கோதண்டபாணி",  அது தோடி ராகம்ன்னு சொல்றா" என்றாள்.

சுப்புலட்சுமி ஆச்சரியத்துடன்  இத்தனூண்டு கொழந்தையா இதெல்லாம் கண்டுபிடிக்கிறா" என்று கேட்டாள்.

" ஆமாம் மாமி. ரெண்டு வயசுலேந்து எந்த பாட்டு பாடினாலும்  ராகத்தை சரியா கண்டுபிடிக்கிறா" என்றாள் மைதிலி. அதற்கு சுப்பு லக்ஷ்மி "இது போல  அதிசயத்த எல்லாம் நான் கேள்விப்பட்டுதான் இருக்கேன்.இப்பதான் முதல் மொறையா பாக்கறேன்"  என்று சொல்லி " சோபில்லு சப்த ஸ்வர" என்று ஒரு வரிதான்  பாடினாள்.  ம்ருதுளா  உடனே "ஜகன் மோகினி" என்றாள்.

குழந்தையை மைதிலியிடமிருந்து வாங்கி, உச்சி முகர்ந்து "எப்படிடா கண்ணா கண்டுபிடிக்கிற? நாங்க எல்லாம் ஆரோஹணம்,அவரோகணத்தை  வச்சித்தான் ராகங்களை கண்டுபிடிக்கிறோம். அதெல்லாம் ஒண்ணும் தெரியாம நீ பாட்டுக்கு அடிச்சு விடற" என்று சொல்லி குழந்தைக்கு முத்த மாதிரி பொழிந்தாள்.

மைதிலையை பார்த்து "நீங்களும்  பாடுவேளா" என்றாள்."ஆமாம் மாமி. ஒரு ஆறு வருஷம் கத்துண்டேன். கல்யாண ஆகி குழந்தை பெறந்துட்டா. வீட்டு வேலைக்கு டைம் சரியா போய்ண்டு இருக்கு. அதனால அதை கண்டினியூ பண்ண முடியல. ஆனா சமயம் கெடைக்கும் போதெல்லாம் பாடுவேன்" என்றாள் மைதிலி. இதைக் கேட்ட சுப்புலக்ஷ்மி" ரொம்ப நல்லது. இந்த குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறதுன்னு நேக்கு பயமா இருக்கு. என் பொண்ணு ராதிகா கிட்ட கேட்டூட்டு உங்களுக்கு நாளைக்கு தகவல் சொல்லட்டுமா. ஆத்ல போன் இருந்தா, நெம்பரை குடுங்கோ"என்று கூறி தன் டெலிபோன் நெம்பரை மைதிலியிடம் கொடுத்தாள்.

மகள் ராதிகா வந்தவுடன் சுப்பலக்ஷ்மி அவளிடம் விஷயத்தை சொல்ல,கேட்டதும் ராதிகாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

"அந்த கொழந்தை நம்ப கிட்ட பாட்டு கத்துண்டா நமக்கு எப்பேர்பட்ட பேர் கெடைக்கும்னு யோசிச்சு பாத்தயா" என்றாள்.

இதன் பிறகு சுப்புலக்ஷ்மி மைதிலிக்கு போன் செய்தாள்.

"மாமி.என் பொண்ணு ராதிகா கிட்ட பேசினேன். அவ குழந்தைக்கு டீச் பண்ண ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கா. நாளையிலிருந்து அவளை நீங்க கொண்டு வந்து விட்டுடுங்கோ. முதல்ல தினம் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கலாம். எப்படி போறதுன்னு பாத்துண்டு பின்னாடி டையத்தை இன்க்ரீஸ் பண்ணிக்கலாம்" என்றாள்.

" சரி மாமி.ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பீஸ் கொடுக்கணும்" என்று கேட்டாள் மைதிலி. அதற்கு சுப்புலக்ஷ்மி "அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல நாளையிலேந்து குழந்தை மறக்காம அழிசிண்டு  வாங்க" என்றாள் .

மறுநாள் சுப்புலக்ஷ்மியும், ராதிகாவும், மைதிலியையும், மிருதுளாவையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தார்கள். மைதிலி குழந்தையுடன் போய் சேர்ந்தவுடன், ராதிகா மிருதுளாவை தூக்கி கொண்டாள். அவளை கொஞ்ச நேரம் கொஞ்சினாள்.

" என்னடா கண்ணம்மா. ராகம்லாம் நீ கண்டு பிடிக்கிறியாமே"என்று கூறிவிட்டு ஸ்யாமா சாஸ்திரிகளின் "சங்கரி சம் குரு சந்திரமுகி, அகிலாண்டேஸ்வரி" என்னும் பாடலை பாடிவிட்டு,குழந்தையை பார்த்து,"இது என்ன ராகம்"என்று அவள் கேட்டு முடிக்கு முன்னர் குழந்தை ஸ்பஷ்டமாக "சாவேரி" என்று சொன்னாள். இதைக் கேட்ட ராதிகா "மாமி இவ கொழந்தையே இல்ல. குழந்தை ரூபத்தில இருக்கிற ஒரு மாமேதை. இப்படி கூட இந்த வயசுல இருக்க முடியுமான்னு தெரியல. எங்கம்மா சதா சர்வகாலமும் பாடிண்டு, அத நான் கேட்டுண்டு இருந்தாலும் கூட, எனக்கு சில ராகங்களை கண்டுபிடிக்கிற சக்தி எட்டு வயசுலதான்  தான் வந்தது. இது போல ஆச்சரியத்தை நான் இப்பதான் மொதல் மொறயா  பாக்கிறேன். இவள என் கிட்ட வுடுங்கோ. இன்னும் கொஞ்ச நாள்ல்ல பிரிப்பேர் பண்ணிடறேன்.என் அனுமானம் சரின்னா ஆறு மாசத்துல இவள அம்மா கிளாஸ்ல சேர்ந்துடலாம்னு நெனைக்கிறேன்" என்றாள்.

No comments:

Post a Comment