Monday, November 20, 2023

வசந்த காலம் வருமோ?-18

 வசந்த காலம் வருமோ?-18

By N Krishnamurthy 

"அப்போ நாங்க கெளம்பறோம் மாமா" என்றான் சாரங்கன்.

சாம்பசிவ சாஸ்திரிகள் மைதிலியிடம்              " யாருக்கும் கெடைக்காத பொக்கிஷம் நோக்கு கெடச்சிருக்கம்மா. அவளுக்கு மொறையா சங்கீதம் கத்து கொடுக்க ஏற்பாடு பண்ணு. என் வார்த்தையை குறிச்சு வெச்சுக்கோ.பெரிவளானதும் அவ பெரிய பாடகியா பேர் எடுப்போ" என்றார்.

" கேக்றதுக்கே ரொம்ப சந்தோஷ இருக்கு மாமா.உங்கள போல பெரியவா ஆசிர்வாதம் வீண் போகாது மாமா" என்று மைதிலி கூறிய பின்  மைதிலியும், சாரங்கனும் அவருக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

" ஸ்ரேயசா இருங்கோ"          என வாழ்த்தினார் சாஸ்திரிகள். 

பின்பு இருவரும் ம்ருதுளாவுடன் வீடு திரும்பினார்கள்.

அன்று இரவு மைதிலி வேறு சில பாடல்களை ம்ருதுளாவின் முன் பாட, குழந்தை எல்லாவற்றின் ராகத்தையையும் சரியாக கூறினாள்.

மறுநாள் கோமளமும்,சக்ரவர்த்தியும் திரும்பியதும் விஷயத்தை கேள்விப்பட்டு பெரிதும் வியப்பும்,சந்தோஷமும் அடைந்தார்கள்.

"கொழந்தைக்கு த்ருஷ்டி சுத்தி போட்டயா" என்றாள் கோமளம் மைதிலியிடம்.

" இல்லம்மா" என்று மைதிலி சொன்னவுடன் கோமளா" அதை முதல்ல செய்ய வேண்டாமோ. கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது,தெரியாதோ" என்று அங்கலாய்த்து சொன்னாள்.

பின்னர் கோமளம் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு, வலது புறமாக மூன்று முறையும் ,இடது புறமாக மூன்று முறையும்  சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட்டாள்.

மிளகாய் வெடித்தது.

" பார். கொழந்தைக்கு இப்பவே எவ்வளவு த்ருஷ்டி இருக்கு பார்" என்றாள் கோமளா. பின்னர் கோமளா வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றி வைத்தாள்.

அன்று மாலை கோமளம்  ரங்க நாயகியிடம் போனில் விஷயத்தை சொன்னாள். முதலில் ஆச்சர்யமடைந்த ரங்க நாயகி பின்னர் "தோ பார்மா.இந்த காலத்ல கொழந்தைகள் படு சுட்டியா இருக்கா.என் பொண்ணே கச்சேரிக்கு கூப்டுண்டுபோன ரெண்டு,மூணு ராகத்த கண்டு பிடிக்கறா.செஸ் கத்துக்கறா.அவ செஸ் ஆடறத பாத்தா சீக்ரமே கிராண்ட் மாஸ்டர் ஆய்டுவான்னு தோணர்து" என்றாள்.

முதல் நாள்தான், தமுக்கம் மைதானத்தில் நடந்த எக்ஸிபிஷனில்,மகளின் தொணதொணப்பை தாங்க முடியாமல்,மேக்னடிக் செஸ் போர்டையும், காயன் பாக்ஸையும் வாங்கி கொடுத்திருந்தாள் ரங்கநாயகி. சொந்த தம்பி மகளுக்கு இந்த சின்ன வயசிலே இப்படி ஒரு சங்கீத ஞானம் இருப்பதை கேள்விப்பட்டதும் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டாலும்,தன் சொந்த மகள் அப்படி இல்லையே என்ற அசூயை அவளிக்கிருந்தது.

எல்லா காலத்திலும், ஏன் திருவள்ளுவர் காலத்தில் கூட, இது போன்று மனிதர்களிடம் பொறாமை இருந்தது போல் இருக்கிறது. அதனால்தான் அவர் "அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கும்" என்ற குரளில் அழுக்காறை (அதாவது பொறாமையை) முதலில் வைத்தார் போல் இருக்கிறது.

ரங்க நாயகி இப்படி பேசியது கோமளத்துக்கே பிடிக்கவில்லை.என்ன செய்வது.பெற்ற மகளாயிற்றே. விட்டுக் கொடுக்க முடியுமா?

மைதிலியிடம்" ரங்க நாயகி விஷயத்தை கேள்விபட்டதும் எவ்வளவு சந்தோஷபடறா தெரியுமோ நோக்கு" என்றாள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சக்கரவர்த்தி மைதிலியிடமும், கோமளத்திடமும்" ரங்கநாயகிக்கு சந்தோஷம் இருக்காதா பின்ன.ம்ருதுளா சொந்த மருமா ஆச்சே" என்றார் உண்மை  தெரியாமல்.

அப்போதெல்லாம் Pre K.G கிடையாது.L.K.G, U.K.G தான். ம்ருதுளாவிற்கு நான்கு வயது ஆரம்பித்ததும், ஒரு விஜயதசமிஅன்று அருகிலிருந்த ஒரு நர்சரி ஸ்கூலில் சேர்த்தார்கள்.

முதல் பத்து நாட்கள் அம்மாவை விட்டு விட்டு ஸ்கூல் போக, ம்ருதுளா முரண்டு பிடித்தாள்.அழுது,ஆகாத்யம் செய்தாள். பின்பு ஒழுங்காக ஸ்கூல் போய் வர ஆரம்பித்தாள்.

ஆறுமாதம் போனதும் ம்ருதுளாவிற்கு சங்கீத பால பாடத்தை ஆரம்பித்தாள் மைதிலி.

அருகில் சுப்புலக்ஷ்மி என்ற மாமி வாய்பாட்டு கற்று தருவதாக அறிந்து, ஒரு நாள், ம்ருதுளாவுடன் அவளை சென்று பார்த்தாள் மைதிலி.

சுப்புலக்ஷ்மி கொஞ்சம் அடிப்படை சங்கீத ஞானம் அடைந்தவர்களுக்கு கீர்த்தனங்கள்,ஸ்வரம் பாட கற்றுக் கொடுப்பது ஆகியவற்றை செய்து கொண்டிருந்தாள்.

அவளது பதினாறு வயது மகள் ராதிகா சின்ன குழந்தைகளுக்கு அடிப்படை சங்கீதம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வீட்டு மொட்டை மாடியில் கீற்றுக்கொட்டாய் போட்டிருந்தது. அங்கு காலையில் சீனீயர்களுக்கு வகுப்பும்,வீட்டிற்குள்ளேயே ஹாலில் குழந்தைகள் வகுப்பும் நடந்து கொண்டிருந்தன.

மைதிலி போகும்போது  சுப்புலக்ஷ்மி மாத்திரம் சீனியர்களுக்கு 'கொலுவ மரகாத கோதண்டபாணி' கீர்த்தனையை பாடி, எங்கே நி(நெ)ரவல் பண்ண வேண்டும் என்பதை விளக்கி,சில ஸ்வரங்களை பாடி காண்பித்தாள். 

அங்குள்ளவர்களை பிராக்டீஸ் செய்யுமாறு கூறி விட்டு,மைதிலியிடம் வந்து " சொல்லுங்கோ" என்றாள்.அவளிடம் குழந்தை இரண்டு வயதிலிருந்தே ராகங்களை கண்டுபிடிக்கிறாள் என்பதை சொல்லாமல்" கொழந்தைக்கு பாட்டு சொல்லி கொடுக்கணம்னு ஆசைப்படறோம்", என்றாள்.

தன் எதிரில் இருப்பது ஒரு பெரிய விருக்ஷம்,தன்னை மறைத்து, விதையாக காட்டிக்கொண்டிருக்கிறது என்று அறியாத  சுப்பு லக்ஷ்மி " ரொம்ப கொழந்தையா இருக்காளே.கொஞ்சம் டைம் ஆகட்டமே" என்றாள்.

அப்போது ம்ருதுளா மைதிலியின் காதில் ஏதோ கூறினாள். அதை சுப்புலக்ஷ்மியும் கேட்க முடிந்தது. "என்ன சொன்னா.

என்ன சொன்னா" என்று இருமுறை கேட்ட சுப்புலக்ஷ்மிக்கு குழந்தை  ம்ருதுளா சொன்னதை கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது.

No comments:

Post a Comment