வசந்த காலம் வருமோ - 8
By N Krishnamurthy
மைதிலி கருவுற்றிருந்த சமாச்சாரத்தை டெலிபோன் மூலம் தெரிந்து கொண்ட ரங்கநாயகி, கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்து அவளை பார்க்க வந்திருந்தாள். அவள் தன்னுடன் வீட்டிலேயே தயாரித்த மைசூர் பாகையும், திரட்டுப்பாலையும் கொண்டு வந்திருந்தாள். மைதிலையை பார்த்தவுடன் அவளை கட்டிக்கொண்டு " நேக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா மைதிலி" என்று கூறி அவள் வாயை திறக்கச் சொல்லி கொஞ்சம் திரட்டிப்பாலை எடுத்து அவள் வாயில் போட்டாள்.
சந்தோஷமான சமாச்சாரத்தை கேள்விப்பட்ட உடனேயே பட்டுசாமியும், சீதாலக்ஷ்மியும், மகாலக்ஷ்மியும் மைதிலையை பார்க்க வந்திருந்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மைதிலியுடன் இருந்து விட்டு கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் வந்திருந்தபோது எதேச்சையாக ரங்கநாயகி அங்கு இருந்தாள். சீதாலஷ்மி
ரங்கநாயகியை "ரங்கநாயகி, இப்ப என்ன சொல்ற"என்று கேட்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.
ரங்கநாயகி வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
சீதாலக்ஷ்மி ஊருக்கு போகும்போது கோமளத்திடம்" மாமி மைதிலி எப்ப நாங்க அழச்சிண்டு போறது" என்று கேட்டாள். அதற்கு கோமளா " சீமந்தம் முடிஞ்சதும் ஒரு நல்ல நாளா பார்த்து நானே உங்களுக்கு சொல்றேன். நீங்க இருந்து அவளை கூட்டிண்டு போலாம்" என்றாள் .
மைதிலிக்கு நாலாவது மாசம் நடந்து கொண்டிருந்தது. ரெகுலராக செக்கப்புக்கு போய் வந்து கொண்டிருந்தாள். எல்லாமே நார்மலா இருப்பதாகத்தான் டாக்டர் சொன்னாள். மைதிலி ஏற்கனவே நல்ல அழகு.பிள்ளை உண்டாகி இருப்பதில் அவள் முகம், பூர்ண சந்திரன் போல ஜொலித்தது. அதைப் பார்த்த கோமளம் சாரங்கனிடம்" அதிகம் வெளியில் அழசிண்டு போகாதடா. கண் பட்டூட போறது" என்று கூறினாள்.
தினமும் மாலையில், முடிகிறதோ, இல்லையோ,பூஜை அறையில் அமர்ந்து, தமிழ்,தெலுங்கு, சம்ஸ்கிருத பாஷைகளில் அமைந்த, ஏதாவது ஒரு கீர்த்தனையை பாடுவதை வழக்கமாக வைத்திருந்தாள். பல சமயம் இந்த பாடல்களை கேட்டு வயிற்றிலுள்ள குழந்தை,ரசிக்கும் விதமாக நகர்வதை போன்ற உணர்வு அவளுக்கு அடிக்கடி ஏற்பட்டது.
வளைகாப்பு முடிந்தது. அதைத்தொடர்ந்து சீமந்தமும் நன்றாக நடந்தது. அது முடிந்த மூன்றாம் நாள் நல்ல நாளாக இருப்பதால், மைதிலி சீதாலக்ஷ்மியுடன் புறப்பட ஏற்பாடாகியிருந்தது.
ஊருக்கு போவதற்கு முதல் நாளிரவு இருவரும் தனியாக இருக்கையில் சாரங்கன் " நீ ஊருக்கு போகத்தான் வேணுமா. இங்கே இருந்து விட முடியாதா" என்று கேட்டான். " என்ன நீங்க.இது ஊர்ல நடக்காத விஷயமா என்ன? பிள்ளை தாச்சிகள் சாதாரணமா முதல் பிரசவத்துக்கு அம்மாவாத்துக்கு போறதுததானே வழக்கம். நான் எங்க போப்போறேன். பக்கத்துல இருக்க திருச்சிக்கு தானே.நீங்க எப்பொப்பெல்லாம் முடியுமோ அப்பொப்பெல்லாம் வந்து பாத்துட்டு போலாமே" என்றாள். பிறகு சாரங்கன் அவளிடம்" என்ன குழந்தை பிறக்கண்ம்னு நீ எதிர்பாக்கிற" என்று கேட்டான். அதை கேட்ட மைதிலி அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு " நீங்க, உங்களுக்கு என்ன குழந்தை வேணும்னு முதல்ல சொல்லுங்க" என்றாள். அதற்கு சாரங்கன் " நான் சொல்லுவேன். ஆனால் என் மனசு நோகப்படாதுன்னு அதே மாதிரி குழந்தை வேணும்னு நீ சொல்லக்கூடாது. உனக்கு என்ன குழந்தை வேணும்னு நீ இண்டிபெண்டண்டா சொல்லி ஆகணும்" என்றான். "சரி நான் அப்படியே சொல்றேன். முதல்ல நீங்க உங்களுக்கு குழந்தை என்ன வேணும் சொல்லுங்க" .அதற்கு சாரங்கன் " நேக்கு பொண் குழந்த தான் பொறக்கணும்னு ஆசையா இருக்கு" என்றான். இதைக் கேட்ட மைதிலி " நான் சொன்னா பொய் சொல்றேன்னு கூட நீங்க நெனைப்பேள். எனக்கும் பெண் குழந்தை தான் வேணும்னு ஆசையா இருக்கு" என்றாள்.
" அம்மா கூட வயித்த பாத்தூட்டு பொண்தான் பொறக்கும்ன்றாள்" என்றாள் மைதிலி.
அடுத்ததாக குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தார்கள். இருவரும் மாற்றி மாற்றி பல பெண் குழந்தை பெயர்களை சொன்னார்கள். கடைசியில் மைதிலி இரண்டு மூன்று பெயர்களை ஓகே பண்ணிணாள்.
இருவரும் வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.
விடிவதற்கு மூன்று மணி இருக்கும் போது தான் இருவரும் உறங்க ஆரம்பித்தார்கள்.
No comments:
Post a Comment