நாற்கோணம்- 16
By N Krishnamurthy
*வைதேகி:*
இந்தப் பொண்ணு ஜானகி அன்னிக்கு வந்துட்டு போனதுக்குப்பறம் எனக்கு மனசுல திரும்பவும் சந்தோஷம் வந்தது. அந்த பொண்ணு நம்பளுக்கு இவ்வளவு தூரம் ஒத்தசா பண்றான்னு நெனைக்கும் போது அவள பத்தி மதிப்பு என் மனசுல கூடீட்த்து. அந்தப் பொண்ணு மனசுல நெனக்றவன சீக்கிரம் கல்யாணம் பண்ணிண்டு, குடியும் குடித்தனமா, சௌபாக்கியவதியா இருக்கணும்ன்னு பெருமாள் கிட்ட வேண்டிண்டேன்.
( *பெருமாள்:*
விஷயம்தெரியாம வைதேகி இப்படி வேண்டிக்கறா.இவ வேண்டுதல நான் நெறவேத்ததினேன்னா
இவ பாடே கஷ்டமாயுடும்ன்னு யாரவது இவளுக்கு எடுத்து சொல்லுங்களேன்)
இதுக்குள்ள நாலஞ்சு நாள் ஓடிட்த்து. பெங்களூரில் இருந்து சீதா திரும்பி வந்ததும் இது விஷயமா நான் மூச்சே விடல.
அன்னிக்கு சனிக்கிழமை. காலையில் எழுந்து குளிச்சேன். அதுக்கப்புறம் வெங்கடாஜலபதி படத்துக்கு முன்னால் நிந்துண்டு"வெங்கட்ரமணா. பெருமாளே. நீ தான் ஒரு நல்ல முடிவ காட்டணும்"ன்னு வேண்டிண்டேன்.ஸ்வாமி படத்தேலேந்து முதல் நாள் சாத்தியிருந்த ரோஜா பூ கீழ உழுந்தது.நேக்கு மெய் சிலுத்தது.பெருமாள் "நான் உன்னை கைவிடமாட்டேன்னு" சொல்லாம சொல்றார்னு புரிஞ்சுது.
காப்பிய கலந்து சீதாவுக்கும், அவ அப்பாவுக்கும் கொடுத்தேன். பிரக் பாஸ்ட் பண்ணறதுக்கு ஆரம்பிக்கலாம்னு நெனக்கும் போது போன் அடிச்சது. போன் எடுத்தேன். அந்தப் பக்கத்திலேந்து கோபால்சாமி மாமா பேசினார்.
"என்ன வைதேகி, சவுக்கியமா இருக்கியா" ன்னு கேட்டார். "சொல்லுங்க மாமா. நான் சௌக்கியமா இருக்கேன். நீங்க க்ஷேமமா இருக்கேளா" ன்னு கேட்டேன்.
"பரவால்ல அம்மா. ஏதோ இருக்கேன். வயசாயிடுத்து. அப்பப்போ ஏதாது பிராப்ளம் வரது.ஒரு நாள்போல இன்னொரு நாள் இல்ல" என்றவர் "நான் திங்கட்கிழமை காலைல அங்க வரலாம்னு இருக்கேன். என் நெலம் விஷயமா கோர்ட்டில் ஒரு கேஸ் போயிடண்டு இருந்ததுன்னு நோக்கு தெரியுமான்னு தெரியல. அது விஷயமா வக்கீல வந்து பாக்க வேண்டியிருக்கு" என்றார்.
" சரி மாமா. அவசியம் வந்துடுங்கோ. எப்படி வரப்போறேள்"ன்னு கேட்டேன். "ஞாயித்து கிழமை நைட் ராக்போர்ட்டுக்கு புக் பண்ணி இருக்கேம்மா. திங்கட்கெழமை காத்தால ஆத்துக்கு வந்துடறேன். நான் போன வச்சூடட்டுமா" என்று கூறி டிஸ்கனெக்ட் செய்தார்.
"யார் போன்ல" என்றார் இவர்." கோபால்சாமி மாமாதான்.திங்க கெழமை காலைல மெட்ராஸ் வராராம்" என்றேன்
திங்கக்கெழம ஐஞ்சே கால் மணிக்கு கோபால் மாமா சொன்னபடி வந்து சேந்தார்.
கோபால்சாமி மாமான்னு சொன்னதும் நேக்கு அவர் மாமான்னு நெனச்சுக்க வேண்டாம் இவருக்கு தான் அவர் மாமா.மாமி ரெண்டு வருஷம் முன்னாடி சுமங்கலியா போய் சேந்தூட்டா. ஒரு பையன்,ஒரு பொண்ணு. எல்லா ஆத்ல போலயும் பையன் அமெரிக்காவ்ல, ஏதோ பபல்லோவாமே(பபல்லோன்னா எரும இல்லையோ!) அங்க இருக்கான். பொண்ணை மதுரைல கொடுத்திருக்கார்.
மாமா மாத்ரம் ஸ்ரீரங்கத்ல இருந்திண்டிருக்கார். சொந்தமா தளிகை பண்ணிக்கிறார்.நித்யம் காவேரி ஸ்னானம்,ரங்கன் தர்சனம்.வேறென்ன வேணும்.கொடுத்து வெச்சவர் கோபால்சாமி மாமா.
காப்பி சாப்டூட்டு குளிச்சிட்டு வந்த மாமா " நான் ஒரு பத்து மணிக்கு போல கிளம்பி ஹை கோர்ட் போயிட்டு வக்கீல பாத்துட்டு திரும்பி வந்துடுறேன்" என்றார். " ஒரு வா சாப்டூட்டு போய்டுங்களேன்" என்றேன்.
மாமா "டிபன் எதாவது இருந்தா பண்ணி கொடுத்ததூடு.நான் வந்து சாப்படறேன்" என்றார். சரி என்று அவருக்கு ரெண்டு தோசை வாத்து கொடுத்தேன்.
மத்தியானம் ஒரு மணி போல இருக்கும். மாமா திரும்பி ஆத்துக்கு வந்தார் "ஏன் மாமா, இப்படி வெயில்ல அலையறீங்க" என்று கேட்டேன்.
"என்ன பண்றதும்மா. எல்லாம் கர்ம பலன்" என்றார். வாழை எலை போட்டு மாமாவுக்கு பரிமாறினேன்.மாமா சாப்டூட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு நாலு மணி போல காபி சாப்பிட சமையல் கட்டுக்கு வந்தார். "நானும் பாக்கறேன் வைதேகி. உன் மூஞ்சில சுரத்தே இல்லையே. சாதாரணமா நீ இப்படி இருக்க மாட்டயே. சீதா மூஞ்சிலயும் சுரத்தை காணோம். சாரங்கன் கல கலன்னு இருப்பான்.இப்போ அவனும் உம்மணா மூஞ்சி ஆய்ட்டான். ஒத்தொருக்கொத்தர் பேசிக்க கூட மாட்டேங்றேள். என்ன நடக்றது இங்க. ஏதாவது ப்ராப்ளமா? எங்கிட்ட சொல்லப்டாதா" என்று கேட்டார் மாமா .அதுக்கு நான் " சொல்றேன் மாமா. உங்ககிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்ல போறேன்" ன்னு சொல்லி எல்லா விஷயத்தையும் சொன்னேன். இதைக் கேட்ட மாமா " இத ஒரு பெரிய பிராப்ளமா நீ நெனச்சிண்டு இருக்க. இது ஒண்ணுமே இல்ல. நாளைக்கு காலைல சாப்ட்டு முடிச்சுட்டு ,11 மணிக்கு நம்ம ரெண்டு பேரும் ட்ரிப்ளிகேன் போறோம். சீதா,ராம் அப்புறம் ஏதோ இன்னொரு பையன் சொன்னியே ராகவன் , அவா மூணு பேரு ஜாதகத்தையும் எடுத்துக்கோ. எனக்கு தெரிஞ்சு ஒரு ஜோசியர் ராமநாதன்ன்னு பேர் ட்ரிப்ளிகேன்ல இருக்கார். அவர் சொன்ன ஒண்ணு கூட தப்பா நடந்ததில்லை. அவர்கிட்ட போய் மூணு ஜாதகத்தையும் காட்டுவோம்.எனக்கு என்னவோ அவர் உன் பிரச்சனையை தீர்த்துடுவார்ன்னு தோண்றது" என்றார். நான் உடனே மாமா கிட்ட " மாமா அப்படி நடந்தூட்டா என்ன விட சந்தோஷப்படறவோ வேற யார் இருக்க முடியும்" என்றேன்.
இரவு படுக்கப் போகும் போது "கடவுளே நாளைக்கு நல்ல பொழுதாக விடியணம். இந்த ஜோசியர் நல்ல முடிவு சொல்லணும்டாப்பா சாமி" ன்னு வேண்டிண்டு படுத்தேன். ராத்திரி நல்ல தூக்கம். விடிகாலை மூணு,மூணரை மணி இருக்கலாம்.ஒரு கனவு கண்டேன். அதுல சீதாவும, ராமும் கழுத்துல மாலையோடு, கல்யாண கோலத்தில, நேக்கும்,இவருக்கும் நமஸ்காரம் பண்றா. திடீர்னு ஏதோ சத்தம் கேட்டு முழிச்சுண்டேன். கார்த்தால கண்ட கனா பலிக்கும்னுவா. எல்லாத்துக்கும் அந்த பெருமாள்தான் வழி காட்டணம்
No comments:
Post a Comment