வசந்த காலம் வருமோ?- 26
By N Krishnamurthy
கச்சேரி முடிந்ததும் திரை மூடப்பட்டது. அருகிலிருந்த அறைக்குள் எல்லோரும் சென்றார்கள்.
ம்ருதுளாவை பார்த்து ராமச்சந்திரன் "என்ன மன்னிச்சுக்கோம்மா. நாங்கூட நீ எப்படி பாட போறயோன்னு பயந்துண்டிருந்தேன். சீசனட் வித்வான் மாதிரி நீ பாடற . இது எப்படி சாத்தியமாச்சுன்னு எனக்கு தெரியல. முன்ன பின்ன கச்சேரி பண்ணலைன்னு வேற சொல்ற. இது ஏதோ பகவான் உனக்கு கொடுத்திருக்க வரப்பிரசாதம். நீ ரொம்ப பெரிய பாடகியா வருவ. அப்ப இந்த. ராமசந்திரனை மறக்காம ஞாபகம் வெச்சுகணம்"என்றார். இதைக் கேட்ட ம்ருதுளா" பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாமே மாமா. ஏதோ எனக்கு தெரிஞ்சத நான் பாடினேன்" என்றாள்.முரளியும் கிட்டத்தட்ட இதே போன்று கூறினார்.
சுப்புலக்ஷ்மி ம்ருதுளாவை கட்டி அணைத்துக் கொண்டு, உச்சி முகர்ந்தாள். மைதிலியை பார்த்து அவள் "ஆத்துக்கு போனதும் முதல் வேலையா ம்ருதுவுக்கு சுத்தி போடுங்க" என்றாள். அதற்குள் ராமசந்திரனும், முரளியும் அவர்களிடம் "அப்ப நாங்க கிளம்பறோம்மா.உன்ன பத்தி வேற நெறைய சபாக்களிலும் சொல்லி வைக்கிறோம்" என்று சொல்லி, சுப்புலக்ஷ்மியின் நம்பரை வாங்கிக் கொண்டார்கள்.
இதற்குள் அந்த ரூமுக்கு கச்சேரி கேட்ட சில ரசிகர்கள் வந்திருந்தார்கள்.ம்ருதுளாவின் சம வயது பெண்கள் ம்ருதுளாவை அதிசயமாக பார்த்தார்கள். நிறைய மாமிகள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு "சூப்பரா பாடினேம்மா. உன் ஒரு குரு யார்"என்று கேட்டார்கள். அவர்களுக்கு சுப்புலக்ஷ்மியையும், ராதிகாவையும் காட்டினாள். அந்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் வெகுவாக பாராட்டினார்கள்.
இதற்குள் விசுவநாத சர்மாவும், லலிதாவும் அந்த அறைக்குள் வந்தார்கள். விஸ்வநாத சர்மா ம்ருதுளாவிடம் "நான் எதிர்பார்த்ததை விட பிரமாதமா பாடிட்டேம்மா. கெடைச்ச சான்ஸை நல்லா யூஸ் பண்ணிண்டூட்ட. போன ஜென்மத்தில, நீ பகவானுக்கு தேனால அபிஷேகம் பண்ணியிருக்க. இல்லேன்னா இப்படி போட முடியாது .வித்வத் ஒரு பக்கம் இருக்கட்டும். சப கூச்சம் இல்லாம, ஏதோ இதான் உன் ஐம்பதாவது கச்சேரி மாதிரி பாடீட்ட. உன் சங்கீதம் வேற லெவல் மா "என்றார். லலிதாவும் ம்ருதுளாவின் கையை பிடித்துக் கொண்டு பாராட்டினாள்.
அப்பொழுது அங்கே கோல்டு பிரேம் கண்ணாடி அணிந்து, பணக்கார களையுடன் ஒரு மாமி வந்தாள். "பிரமாதமாக பாடியயிருக்கே" என்றாள். "நான் யாருன்னு சொல்லலையே. உனக்கு சான்ஸ் கிடைக்க நான் ஒரு காரணம் என்றாள்"அவள்.ம்ருதுளா, மைதில, சுப்பு லக்ஷ்மி ஆகியோர் முழித்தார்கள்.
" புரியலயா .இந்த ஸ்பாட்டுல பாட இருந்தது என் பையன் சங்கர க்ருஷ்ணன். அவனுக்கு அம்ம போட்டு, இன்னிக்கு தான் முதல் ஜலம் உட்டுது. அதனால அவன் இன்னிக்கி பாட முடியவில்லை. மனப்பூர்வமா சொல்றேன். அவன் பாடியிருந்தா கூட இவ்வளவு பிரமாதமாக பாடி இருக்க முடியுமான்னு தெரியல.என் பேரு ராஜேஸ்வரி" என்றாள். பின்னர் அவள் மைதிலியிடம்
" இவளுக்கு என்ன வயசாரது மாமி" என்றாள் ராஜேஸ்வரி.
அதற்கு மைதிலி " பதினெட்டு நடந்திண்டிருக்கு "என்றாள்.
" பாத்தா அவ்வளவு வயசா தெரியல "என்ற ராஜேஸ்வரியின் மனது வேறு கணக்கை போட்டுக்கொண்டிருந்தது.
"ரொம்ப தேங்க்ஸ் மாமி" என்றாள் ம்ருதுளா.
இதற்குள் ஒரு நடுத்தர வயது மனிதர் ம்ருதுளாவிடம் வந்து "என்னமா பாடின குழந்தை .இதுதான் உன் முதல் கச்சேரின்னு என்னால் நம்பவே முடியல. நான் கிருஷ்ண கான சபா செக்ரட்டரி சபேசன். எதேச்சையாக இன்னைக்கு இங்க வந்திருந்தேன். உன்னுடைய அருமையான கச்சேரியை கேக்க வாய்ப்பு கெடைச்சுது. எங்களுடைய சபாவலையும் நீ ஒரு நாள் பாடணம்" என்று கூறி சுப்புலக்ஷ்மி நம்பரை வாங்கிக் கொண்டார். இதன் பின்பு மைதிலி சுப்புலக்ஷ்மியின் கைகளை பிடித்துக் கொண்டு " நீங்க மட்டும் இல்லேன்னா, இவ இவ்வளவு தூரம் பாடியிருப்பாளான்னு நேக்கு தெரியல. ஒரு நல்ல குரு அமையறது எவ்வளவு முக்கியம்னு புரியரது. உங்களுக்கு வாழ்நாள் பூரா நான் நன்றியோடு இருப்பேன்" என்றாள். சுப்புலக்ஷ்மி" கால்பங்கு தான் என்பங்கு. உன் பொண்ணு தான் முக்கா பங்கு. அவ ஒரு ஸ்வயம் பிரகாசி. அவ ஏத்தின குத்துவிளக்கா இருக்கா.நான் கொஞ்சம் திரியை தூண்டி விடறேன்.அவ்வளவு தான். இன்னிக்கு அவ பிச்சு உதறிட்டா" என்றாள். அன்று கச்சேரியில் ஆறாவது வரிசையில் ஒரு மூலையில் யாரும் கவனிக்காதபடி அமர்ந்திருந்த சுப்புடுவை நிறைய பேர் பார்த்திருக்கவில்லை.
No comments:
Post a Comment