வசந்த காலம் வருமோ?- 2
By N Krishnamurthy
பெண் பார்த்துவிட்டு வீட்டுக்கு போனதும் கோமளம் "என்னடீ, சொல்ற நீ" என்றாள் மகளைப்பார்த்து. நியாயமா சாரங்கனைப்பார்த்து கேட்க்கவேண்டிய கேள்வி இது. ரங்கநாயகி அம்மாவை பார்த்து " பொண்ணு பரவாயில்லை.சுமாரா இருக்கா" என்றாள்.மைதிலியே சுமார் என்றால் ரங்க நாயகியை எதில் சேர்ப்பது?
பின்னர் ரங்க நாயகி சாரங்கனைப்பார்த்து " சுமாராத்தான் பாடினா.நீ அதை கேட்டு வழிஞ்ச" என்றாள். அக்காவிற்கு மைதிலி தன்னை விட அழகாய் இருப்பதாலும், தன்னை விட நன்றாக பாடுவதாலும் பொறாமை உள்ளது என புரிந்து கொண்டான். மைதிலியை கை பிடிக்கணம்னா அக்காவை நைஸ்யம் பண்ணித்தான் காரியத்தை சாதிக்கணம்னு தீர்மானம் பண்ணினான். இதன் அடிப்படையில் அவன் அக்காவை பார்த்து " ஆமாக்கா.கொஞ்சம் அவசரப்பட்டூட்டேன். யோசிச்சு பாத்ததல சரணம் பாடச்சே குரல் கொஞ்சம் பிசிர் அடிச்ச மாறி இருந்தது" என்றான்.
ரங்கநாயகிக்கு பரம திருப்தி.
"ஆமாண்டா.அது இருக்கட்டும். உன் அவிப்ராயத்தை சொல்லுடா" என்றாள் ரங்க நாயகி தம்பியிடம்.சாரங்கன் பார்த்தான்.ரொம்ப ஜாக்கிரதையாக பதில் சொல்லவேண்டும் என்று தீர்மானம் பண்ணி அவன் " நேக்கு டெபனட்டா பிடிக்றதுன்னு சொல்ல முடியலை.கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. இது போல சமயத்ல நீதாங்க்கா கரக்டா முடிவெடுப்பே" என்றான். இது ப்ராம்ஸ்திரம்.இந்த பதில் ரங்க நாயகிக்கு பரம திருப்தியை கொடுத்தது.
அம்மாவை பார்த்து" பொண்ணு நண்ணாத்தான் இருக்கா ( கொஞ்ச நேரத்திலேயே சுமாரிலிருந்து நண்ணா இருக்கான்னு மைதிலிக்கு பிரமோஷன் கொடுத்தூட்டா ரங்க நாயகி).சீர் செனத்தி எல்லாம் எப்டி செய்வான்னு பாக்கணம். இன்னூறு பொண்ணு வேற இருக்கான்றதை நாம்ப ஞாபகம் வெச்சிக்கணம்"என்றாள். கடைசியா ரங்க நாயகி அம்மாவிடம் " என்னென்னா செய்யணம்னு லிஸ்ட் போட்டு வெச்சுக்கோ. அவாள கூப்ட்டு பேசுவோம். ஒத்து வந்தா மைதிலை இந்தாத்து மாட்டுபொண்ணா வந்தூட்டு போகட்டம்" என்று பைனல் ட்ஜ்மெண்ட்டை டெலிவர் பண்ணிணாள்.
ரங்கநாயகி சீதாலக்ஷ்மியை போனில் கூப்பிட்டு
" மாமி.மைதிலியை எங்களுக்கு பிடிச்சிருக்கு.நீங்களும்,
மாமாவும்ஒரு நடை ஆத்துக்கு வந்தூட்டு போனா,மீதி எல்லாத்தையும் பேசி முடிச்சூடலாம்" என்றாள்.
எண்ணி மூன்றே நாட்களில் சீதாலக்ஷ்மியும்,பட்டுசாமியும் வந்திருந்தார்கள்.
நிறைய நெகோஷியன்சுகளுக்கு பிறகு இரண்டு தரப்பும் என்னென்ன சீர்,செனத்தி செய்ய வேண்டும் என்று அக்ரிமெண்ட்டுக்கு வந்தார்கள்.
ரங்கநாயகி பயங்கர நெகோஷியட்டர் என்று சீதாலக்ஷ்மி புரிந்து கொண்டாள்.
பையன் வீட்டு பக்கம் கல்யாணத்துக்கு எவ்வளவு பேர் வருவார்கள்,சத்தரம்,
சமையலுக்கு யார் போன்ற இன்ன பிற விஷயங்களும் பேசப்பட்டன.
பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது சாரங்கன், பெண் பிள்ளை மாதிரி,ரூமிலே அடைந்து கிடந்தான்.
ஆனால் அவர்கள் பேசுவதையெல்லாம் ஒட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.
இரண்டு மாதத்தில் ஒரு சுபயோக, சுப முகூர்த்தத்தில், சாரங்கனின் தர்ம பத்னியாக ஆனாள் மைதிலி.
நலங்கின் போது ஒரு மணி நேரம் பாட்டு கச்சேரி நடத்தி விட்டாள் மைதிலி. அவளுடைய ஒன்று விட்ட மாமா வரதன் ம்ருதங்கம் வாசித்தார்.
அந்த காலத்தில் ஹனிமூன் போவதெல்லாம் கிடையாது.
(தொடரும்)
No comments:
Post a Comment