Sunday, November 19, 2023

வசந்த காலம் வருமோ? -17

 வசந்த காலம் வருமோ? -17

By N Krishnamurthy 

சாம்பசிவ சாஸ்திரிகள் "என்ன சொல்லுங்க" என்று சொன்னவுடன்,  சாரங்கன் நடந்ததையெல்லாம் அவரிடம் விவரித்தான். அதை கேட்ட அவர் "இது மிகவும் சுவாரஸ்யமாகவும், ஆஸ்ச்சர்யமாகவும் இருக்கு" என்று கூறினார்.

பின்பு தன்னுடைய சன்னமான குரலில் "ராரா மா இண்டி தாக" என்ற அசாவேரி ராக கீர்த்தனையை பாடினார் சாஸ்திரிகள். ம்ருதுளாவைப் பார்த்து "இது என்ன ராகம்மா கோந்தை" என்று கேட்டார்.குழந்தை  பதில் சொல்லவில்லை.

மைதிலி ம்ருதுளாவைப்பார்த்து "சொல்லுடி என் செல்லமே" என்றாள்.ம்ருதுளா "அசாவேரி" என்றாள் மைதிலியின் காதில்.மைதிலி வேண்டுமென்றே குழந்தையை பார்த்து" சாவேரியா" என்று கேட்டாள். ம்ருதுளா இப்போது  கொஞ்சம் குரலை உயர்த்தி "அசாவேரி" என்றாள் நறுக்கு தெரித்தாற்போல்.

அதிர்ந்து போனார் சாம்பசிவ சாஸ்திரிகள். பின்பு அவர்கள் இருவரையும் பார்த்து "முதல்ல நீங்கள் சொன்னபோது நேக்கு நம்பிக்கை இல்லை. குழந்தை இப்போ நேரில  ராகத்தின் பேரை சொல்றப்போ இப்படி கூட இருக்க முடியுமா என்ற எண்ணம் எழுகிறது" என்று கூறியவர், மைதிலியை பார்த்து " ஏம்மா, நீ பாட்டு பாடுவயாக்கும் " என்று கேட்டார். அதுக்கு மைதிலி "ஆமா மாமா. சின்ன வயசுலேந்து பாட்டு கத்துண்டு வறேன். நிறைய கீர்த்தனம் பாடமா இருக்கு. அடிக்கடி பாடுவேன்" என்றாள். அப்பொழுது சாம்பசிவ சாஸ்திரிகள் " அது சரி. குழந்தை வயித்தல  இருந்த போது பாடிண்டே இருந்தயோ " என்றார்.

"ஆமாம் மாமா" என்றாள் மைதிலி. 

அவர் " இது ஒரு காரணமாக இருந்தாலும், இது ஒரு சின்ன காரணம்தான். இதனால குழந்தைக்கு சங்கீத ஞானம் ஓரளவுக்கு வருமே தவிர ராகத்தை எல்லாம் கண்டுபிடிக்கிற அளவுக்கு வராது. இந்த குழந்தை பூர்வ ஜென்மத்துல பெரிய சங்கீத வித்துவானா இருந்திருக்கணும்.பூர்வ ஜென்ம வாசம்  தொடர்ந்து வந்திண்டு  இருக்க.  இது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. ரொம்ப புண்ணியம் பண்ணவாளுக்குதான் இது வாய்க்கும். இது மாதிரி வாய்க்கிறது கோடில ஒண்ணு கூட இல்ல. குழுந்தை வொண்டி புண்ணியம் பண்ணல.இவளை குழந்தையா அடஞ்சதுக்கு நீங்க எப்பேர்பட்ட புண்ணியம்பண்ணி இருக்கணம். நானே இது போல ஒரு நிகழ்ச்சியை இப்பதான் நேர்ல பார்க்கிறேன்" என்றார். 

இதை கேட்டு மைதிலையும், சாரங்கனும் ஆச்சரியம் அடைந்தார்கள். பின்பு சாம்பசிவ சாஸ்திரிகள் சொல்ல ஆரம்பித்தார்.

"பூர்வ ஜென்ம வாசம் தொடரதை பத்தி உங்களுக்கு ரெண்டு உதாரணம் சொல்ல போறேன்.முதல்ல கதை. அடுத்தது நான் சமீப காலத்ல படிச்ச ஒரு ந்யூஸ். ஒரு காவல்காரன், வழக்கம்போல் பறையை அடிச்சிண்டு  பாதி ராத்திரில ''மகா ஜனங்களே ஜாக்கிரதை'' என்றுகத்திக்கொண்டே போவான்.திருட்டு பயம் இருந்ததால, அந்த தேசத்து ராஜா பண்ணின ஏற்பாடு இது.

ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால், அவன் வேலையை அவன் மகனிடம் செய்ய சொல்லீட்டு போய்ட்டான்.

அவன் மகனோ முன் ஜன்மத்தில் ஒரு வேதத்யானம் பண்ண மகா  பண்டிதனாக இருந்தவன். அவனுக்கு,ஈஸ்வர அனுக்ரத்தினால, பூர்வ ஜன்ம ஞாபகம் இருந்ததாம்.

ராத்திரில அவன் தப்பட்டை அடிச்சுண்டு "ஜாக்கிரதை" என்று மட்டும் சொல்லாமல், ஒரு ஸ்லோகத்தை  சொல்லிண்டு போனானாம்.

அடுத்த நாள் ராஜா அந்த தப்பட்டை அடிக்றவன் வீட்டு வாசலில் நிந்தாராம்.அந்த பையனைப் பார்க்கத்தான் அவர் வந்தாராம்.

''ஐயோ, ராஜாவே வந்திருக்கிறார், பையன் பெரிய தப்பு ஏதாவது பபண்ணீட்டானோ? அவனுக்கு கடும் தண்டனையைகொடுத்து டுவாரோ ராஜா?'' அப்டீன்னு காவல்காரன் நடு  நடுங்கி போய்ட்டான்.

ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க  வந்தாராம்? எதுக்காக?

முந்தின ராத்திரி பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகாம, ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னது ராஜா காதுக்கு போய்டுத்தாம். மாறு வேடத்தில் இரவு வலம் வந்த‌ ராஜாவை அந்த ஸ்லோகத்துனுடைய அழகும்,கருத்தும்  மயக்குடுத்தாம்.

அந்த நீதி வாக்யங்கள்

ஸ்ரீ ஆதிசங்கர பகவந்பாதாள்  அருளிய வைராக்ய ஸ்லோகங்களில் சிலவாம்.முதல் ஸ்லோகமும் அதன் கருத்தும்சொல்றேன்.

 “மாதா நாஸ்தி,பிதா நாஸ்தி, 
நாஸ்தி பந்து, ஸஹோதரா,
அர்தம் நாஸ்தி, க்ருஹம் நாஸ்தி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

அடே தூங்குமூஞ்சிகளா விழிச்சிகோங்கடா. அப்பனும் நிரந்தரமில்லை, பெற்ற தாயும் நிரந்தரமில்லை, அண்ணன், தம்பியும் நிரந்தரமில்லை, காசும் பொய். வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை. இது பூர்வ ஜென்ம வாசனை புண்யாத்மாக்களுக்கு தொடரும்னற்தக்கு சொல்ற கதை" என்றவர்" இப்போ சமீப காலத்ல உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சிய சொல்றேன்.

ராஜஸ்தான் அழ்வார் மாவட்டத்தல,மிலக்பூர் கிராமத்தில இரண்டரை வயசு  சிறுமி மனீஷா. ‘உண்மையின் நான் மனீஷா இல்லை. டெல்லி புஷ்ப விஹாரைச் சேர்ந்த சுமன். என்னுடைய 15-வது வயதில் டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டேன்!’ என்றதாம். மனீஷாவின் பெற்றோர்களும் அவளை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சுமனின் பெற்றோர்களைக் கண்டதுமே ஓடிப் போய் கட்டிப்பிடித்துக்கொண்டாளாம்.. சுமன் படித்த ஆந்திரா எஜுகேஷனல் சொசைட்டி ஸ்கூலையையும், அவனது நண்பர்களையும் சரியாக அடையாளம் காட்டி அசர வைத்திருக்கிறாள் மனீஷா" என்று கூறி முடித்தார். இதை கேட்ட இருவரும் திக்பிரமையிலிருந்து விடு பட வெகு நேரம் பிடித்தது.

No comments:

Post a Comment