பஞ்சவர்ண இட்லி & தோசை
செய்முறை :
அரைத்த இட்லி மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து 5 கிண்ணங்களில் சமமாக பிரித்துக் கொள்ளவும். இனி ஒவ்வொரு நிறமாக தயார் செய்து கலக்கிவிடலாமா! இதற்கு பொருத்தமான சட்னிகள் பிராக்கெட்டில்!
🟡 மஞ்சள் : 2 ஸ்பூன் பாசிப்பருப்பை ஊற வைத்து 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மாவில் ஊற்றி அதோடு 1 ஸ்பூன் மஞ்சள் தூள், கடலை மாவு & உப்பு சிறிது எல்லாம் போட்டு மாவை நன்கு கலக்கிவிட்டு கல்லில் தோசை வார்க்கவும். (தக்காளி/ மல்லி/ வெங்காயச் சட்னிகள்)
🔴 சிவப்பு : மிக்ஸியில் தோலுரித்த ஒரு பீட்ரூட்டை நறுக்கி 3 வரமிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு நன்கு கூழாக அரைத்ததை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி மாவில் விட்டு சிறிது உப்பு போட்டு மாவை நன்கு கலக்கிவிட்டு கல்லில் தோசை வார்க்கவும். (புதினா/ இஞ்சி / வெங்காயச் சட்னிகள்)
🟢 பச்சை : மிக்ஸியில் நன்கு கழுவிய 1 கப் பசலைக் கீரை, 2 பச்சை மிளகாய், நன்கு ஊற வைத்த பாசிப்பயறு 2 ஸ்பூன் 1கைப்பிடி மல்லி & புதினா, 1/2 ஸ்பூன் சீரகம் எல்லாம் போட்டு கூழாக அரைத்து மாவில் ஊற்றி சிறிது உப்பு போட்டு மாவை நன்கு கலக்கிவிட்டு கல்லில் தோசை வார்க்கவும். (தக்காளி/ வெங்காய சட்னிகள்)
🟠 ஆரஞ்ச் : மிக்ஸியில் நல்ல கலரான 1 கேரட்டை நறுக்கிப் போட்டு, 3 வரமிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம் அரைத்து மாவில் ஊற்றி சிறிது உப்பு போட்டு மாவை நன்கு கலக்கிவிட்டு கல்லில் தோசை வார்க்கவும். (கடலை/ புதினா/ மல்லி சட்னிகள்)
⚪️ வெள்ளை : மிக்ஸியில் விதை & தோல் சீவிய வெள்ளை பூசணி 1கப், தேங்காய் பால் 25மிலி, 1 ஸ்பூன் அரிசி மாவு, 1/2 ஸ்பூன் சீரகம் அரைத்து மாவில் ஊற்றி சிறிது உப்பு போட்டு மாவை நன்கு கலக்கிவிட்டு கல்லில் தோசை வார்க்கவும். (மல்லி / மிளகாய்/ தக்காளி சட்னிகள்)
இந்த எல்லா தோசைகளுக்கும் பொதுவாக தேங்காய் சட்னி சிறப்பாக இருக்கும். சாம்பாரை விட வெஜ் குருமா இன்னும் சிறப்பு. இதே தோசை மாவுகளில் மூவர்ண தோசையாக ஒரே தோசையில் ஊற்றி அசத்தலாம்!
குறிப்பு : மற்ற நிறங்களுக்கு கரைப்பதைவிட வெள்ளை தோசைக்கு மட்டும் மாவு கொஞ்சம் திக்காக இருக்கட்டும். பூசணியில் நீர் இருப்பதால் மாவு ரொம்ப தளர்வாகிவிடும்.
இந்த செய்முறையில் சொன்ன அளவில் ஒவ்வொரு நிறத்திலும் 4 தோசைகள் வார்க்க அளவு சொல்லியுள்ளேன். கூடக் குறைய வந்தால் அதற்கேற்றபடி காய்கறி அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளவும்.
🔵 நீல நிறத்திற்கு சங்குப்பூ சேர்த்து செய்யலாம்.
இதே முறையில் இட்லி மாவில் கரைத்து இட்லிகளும் செய்யலாம்.
No comments:
Post a Comment