Saturday, November 12, 2022

நானே கொன்றேன் - 6

 *நானே கொன்றேன்* 

 *கல்கி* 

 *அத்தியாயம்-6*

எல்லோரும் திடுக்கிட்டுப் பேச நாவெழாமல் மௌனமாக இருந்தனர்.

"அவனை இங்கு எடுத்துக்கொண்டு வாருங்கள். கிழே இரத்தம் கித்தம் சிந்தி இருந்தால் கழுவிவிட்டுவிடு. யாரும் வழுக்கி விழுந்து விடாமல்" என்றார் லக்ஷ்மிகாந்தம்.

"சரி சார்" என்று வேலைக்காரன் போனான்.

"இன்றைக்கு வேடிக்கையாக இருக்கவில்லையா? துப்பறியும் நாவல் மாதிரி சம்பவங்கள் நடக்கிறதே" என்று விருந்தினரைப் பார்த்துக் கூறினார்.

அந்தச் சமயத்தில் வேலைக்காரர் இருவர், பிணத்தை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அங்கிருந்த பெண்கள் மயங்கிவிடுவார்கள் போல நடுநடுங்கினர்.

"அந்த மேஜையில் வையுங்கள்" என்றார் லக்ஷ்மிகாந்தம். எல்லோரும் அதையே நோக்கினர். பராங்குச நாயுடு அதைக் கூர்ந்து கவனிக்க நெருங்கினார்.

அந்தப் பிணம் உண்மையில் துணியினால் செய்யப்பட்ட பொம்மை. சாக்கைப் போட்டு மூடப்பட்டிருந்தது.

"மிஸ்டர் லக்ஷ்மிகாந்தம். நீர் ஒரு பெரிய ஆசாமி!" என்று விழுந்து விழுந்து சிரித்தார்.

மற்றவர்களும் அதை நெருங்கிக் கவனித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

"இப்பொழுது பிணத்தைப் பார்த்தாகி விட்டது. இவனை யாரோ வீட்டிலிருப்பவர்களில் ஒருவர் தான் கொன்றிருக்கிறார்கள். உளவுகளை வைத்துக்கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 100 சிகரெட்டு பந்தயம்" என்றார்.

"நான் தான் துப்பறியும் கோவிந்தன்; நான் கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று சிரித்தாள் சுமதி.

"என்ன சுலோசனா குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போறதில்லையா" என்றார் லக்ஷ்மிகாந்தம்.

"இந்த முட்டாள்தனமான விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை" என்று முகத்தைச் சுளித்தாள் சுலோசனா.

அந்த அறையைச் சுற்றிக் கவனித்த சுமதிக்கு ஒரு கிழிந்த கடிதம் அகப்பட்டது. அதில் "விருந்திற்குப் பிறகு என்னைச் சந்தி... சனா" என்று மட்டும் தெரிந்தது.

பிணத்தையும் பரிசோதிக்க வேண்டும் என்று அந்தத் துணிப்பதுமைக்கு அணிந்திருந்த சட்டைகளில் என்ன விருக்கிறது என்று கையை விட்டுத் தடவினாள். அதிலே ஒரு கைக்குட்டை கிடைத்தது. அதன் மூலையில் "சு" என்ற எழுத்துப் பின்னப்பட்டிருந்தது.

"சு...சனான, சுலோசனா; அவள் தான் கொலை செய்தவள். அவள் தான் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவள் தான் குற்றவாளி. துப்பறிவனுக்குப் பேசிய 100 சிகரெட்டுகளைக் கொடுத்துவிட வேண்டும்" என்று உரத்த குரலில் சுமதி சிரித்துக் கொண்டு கேட்டாள்.

"அவசரப் படாதே. கோர்ட்டு என்ன தீர்ப்பு செய்கிறதோ அதிலிருந்துதான் முடிவுகட்ட வேண்டும். திவான்பகதூர்தான் ஜட்ஜ். பராங்குச நாயுடு வாதி வக்கீல். நான் பிரதிவாதி வக்கில். மற்றவர்கள் எல்லாம் ஜுரிகள்."

 *தொடரும்....*

No comments:

Post a Comment