Thursday, November 10, 2022

வறுத்த வெடி

 என்னுடைய பழைய போஸ்ட்தான் மறுபதிவு

வறுத்த வெடி!!

தீபாவளி தீபாவளி என்று ஒரு வழியாக தீபாவளி முடிந்து விட்டது. இதே போல் தான் அன்றும் தீபாவளி முடிந்த அடுத்த நாள்....

அப்போது அக்காவும் நானும் மட்டும்  சென்னை சைதாப்பேட்டை கொத்தவால் சாவடித் தெருவில் தனிக்குடித்தனம்.‌ அப்பா அம்மா தங்கை தம்பி பொட்டல் கிராமத்தில். அக்காவுக்கு டோஷ்னிவாலில் வேலை கிடைத்ததும் என்னையும் சென்னை அனுப்பினார்கள். டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்ட் படித்தபடி வேலை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது நடந்த சில சுவாரஸ்யங்கள் தனியாக எழுத உத்தேசம்.

அக்காவுக்கு 225 ரூபாய் சம்பளம். மாடியில் வீடு பக்கத்திலேயே வீட்டு ஓனர். ஓடுதான். 6க்கு 8 அடி ஒரு ரூம் (சிறிய அறை தான்) சற்று தள்ளி 6க்கு 3 அடி ஒரு கிச்சன். காமன் டாய்லட் (அதுவும் 8 மணி முதல் 9.30 மணி வரை ஓனர் டைம். அந்த டயத்தில் எங்களுக்கு "வந்தாலும் அடக்கிக் கொள்ள வேண்டும்" என்று கன்டிஷன். குடகூலி (அதான் வாடகை) 60, கரண்ட் 15, முறை வாசல் 5 ரூபாயோ என்னமோ நினைவில்லை. 

அந்த வீட்டு மாமியாருக்கு (ஓனரின்‌ அம்மாவுக்கு) நான் ஏதோ அவர்களுடைய எப்போதோ இறந்து போன தம்பி மாதிரி இருப்பதாக கூறி வேலை வாங்கிக் கொள்வார். அதனால் என்னைப் பிடிக்கும். அந்த ஒரு காரணத்துக்காகவே அவர் மருமகளுக்கு (ஓனரின் மனைவிக்கு) என்னைப் பிடிக்காது. 

அவர் பையன் பெயர் நரசிம்மா. எனக்கு அவர் வைத்த பெயர் "ராகவா". "உரேய் ராகவா" என்றால் நான் என்ன என்று கேட்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் என்றால் அவர் பையன் "உரேய் நரசிம்மா"! பத்து பைசா கூட தர மாட்டார். சாயந்தரம் 4 மெது பக்கோடா வாங்கி வரச் சொல்லி கண்ணெதிரேயே அமர்ந்து கொண்டு மேலே பூரா சிந்திக் கொண்டு சாப்பிடுவார். ஒரு வில்லல் கூட தர மாட்டார்.

கஷ்ட ஜீவனம் என்பதால் நாங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம். 250 மிலி பால், அதிலேயே காபி, மோர்‌ எல்லாம். அனைகமாக எல்லா நாட்களிலும் மொட்டைக் குழம்பும் (அப்பளாம் போட்ட குழம்பு) தட்டைக் கீரையோ அல்லது சீசன் காய்கறி ஏதாவது பண்ணுவோம். நெய் தயிர் ஹோட்டல் எல்லாம் கண்ணால் பார்ப்பதோடு சரி. அரிசி அப்பா அனுப்பித் தருவார். அந்நாட்களில் அந்தந்த தினத்தில் இன்டரஸ்டிங் டைமே சாப்பாட்டு டைம் தான். அப்போதெல்லாம் வெறும் வத்தக் குழம்பு மோர் சாதம் என்றாலுமே சட்டி தின்பேன். அக்கா எனக்காக அனுசரித்து சாப்பிடுவாள். மாதக் கடைசியில் பணம் வைக்கும் LG பெருங்காய டப்பாவில் 2 ரூபாய் கூட இருக்காது. ஒரு மாதம் 31ம் தேதி அன்றைய தின முக்கிய செலவான பாலுக்கு போக மீதம் இருந்தது இரண்டு பைசா - இது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

அவ்வருடம் தீபாவளி டிரஸ்ஸும் கிடையாது - பணம் இருந்தால் தானே. பக்ஷணம் ஊரிலிருந்து யார் மூலமாகவாவது கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் தீபாவளிக்கு வெடி வேணுமே - கிராமத்தில் வெடி தந்த கோவிந்தன் இங்கே இல்லை. 

இருக்கும் பணத்தில் அக்கா கொஞ்சமா ஒரு ரூபாய்க்கு வெடி வாங்கிக்கோடா என்று ஒரு ரூபாய் கொடுத்தாள். குருவி வெடி நாலு பாக்கெட். ஆனால் கணிசமாக வெடிக்க வேண்டும் என்பதற்காக ஒத்தை வெடி (பிஜிலி) ஒரு பாக்கெட் வாங்கினேன். கடையில் வாங்கினால் பத்து பைசா அதிகம் அதையே பிளாட்பாரத்தில் வாங்கினால் குறைவு என்பதால் வாங்கினேன்.

தீபாவளி காலை குருவி வெடியோடு கழிந்தது. மதியம் பிஜிலியை போட்டால் அது தேமேன்னு இருந்தது. மீண்டும் திரியை கிள்ளி பற்ற வைத்தால் திரி கிள்ளிய வரை ஆர்வமாக புஸூபுஸூ வென்று போய் அணைந்தது.  அதைப் பார்த்தபடியே சென்ற கீழாத்து ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நமுத்துப் போச்சு வெய்யில்ல காய வெச்சுருக்கணும் என்று உசுப்பேற்றி விட்டார். 

ஆனால் அப்போதெல்லாம் தீபாவளி சமயங்களில் சொல்லி வைத்தாற் போல் மழை பெய்யும். எங்கே காய வைப்பது? ஒரு பாக்கெட் பிஜிலி பூரா தூரப் போட மனசு வரவில்லை. சுமார் 40-50 வெடிகள் இருக்கும். வேஸ்ட் பண்ணக் கூடாது என்று மட்டும் பிரதிக்யை எடுத்துக் கொண்டேன். அப்போதெல்லாம் புது வெடியை வெடிக்க வைப்பதை விட புஸ்ஸான வெடிகளை ஒட்டுத்திரி அது இதெல்லாம் செய்து வெடிக்கச் செய்வதில் தனி கிக் இருந்தது. என்ன செய்யலாம் என்ன செய்யலாம்... என் இன்ஜினியரிங் ப்ரெயின் வேலை செய்ய ஆரம்பித்தது. வெடியில் இருக்கும் ஈரப்பதம் போக வேண்டும். போனால் அது வெடிக்கும். சரி விடியட்டும் ஒரு வழி பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.

அடுத்த நாள் அக்கா / குடியிருக்கும் ஹவுஸ் ஓனர் எல்லாம் ஆபீஸ் போய் விட்டார்கள். நான் சாப்பாடு எல்லாம் முடிந்த பிறகு வெடியை வானலியில் போட்டேன். அடுப்பை பற்ற வைத்து இளம் சூட்டில் நைஸாக வறுக்க ஆரம்பித்தேன். மணல் போட்டு வறுக்கலாம் என்று தோன்றியதை கைவிட்டேன். டைரக்டாக ப்ளேம் வெடியில் படக்கூடாது என்ற ஒரு கவனம் மட்டும் தான். 

ஒரு ஐந்தாறு நிமிடம் வறுத்த பின் வெடியை வறுகடலையை தொடுவது போல் தொட்டுப் பார்த்தேன் ஆங்... சூடு ஏறியிருந்தது. இன்னும் சற்று "வதக்கலாம்" என்று அடுப்பை தணித்தேன். அப்போது டப் என்று ஒரு வெடி தெறித்து விழுந்தது.

ஆஹா, ஆஹா .... உக்காரைக்கு பாகு கம்பிப் பதம் போல வெடி நல்ல பதத்துக்கு வந்துவிட்டது என்று அடுப்பை அணைத்து கொஞ்சம் "ஒலப்பூரட்டும்" என ஒரம் தள்ளி வைத்து விட்டு அதிலிருந்து சட்டியை இறக்கியது தான் தாமதம். எல்லாம் படபடவென வெடிக்க ஆரம்பிக்க நான் போட்டது போட்டபடி வெளியே ஓடி வந்து கிச்சன் கதவை சாத்த, ஐம்பது வெடிகளும் அறுபது வெடிச் சத்தத்துடன் வெடித்து அடங்க, சற்று நேரத்தில் காலனி அல்லோல கல்லோல பட்டது. அக்கம் பக்க வீடுகளில் இருந்து ஓடி வர நான் கதவைத் திறக்க ஒரே புகை மண்டலம். இலுப்பச் சட்டி கரண்டி ஸ்டவ் எல்லாம் கிடக்க அவர்களுக்கு எதுவும் விளக்க தேவையில்லாமல் போயிற்று. 

பாட்டியம்மாவும் மாட்டுப் பெண்ணும் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி திட்ட ஆரம்பித்தனர். எனக்கு உள்ளூர வெடிகள் வீணாகிப் போகவில்லை என்ற திருப்தி இருந்தாலும் இப்ப என்ன ஆயிடுத்துன்னு இப்படி சத்தம் போடரா. என் வீட்டுல நான் வெடிச்சா இவங்களுக்கு என்ன என்றே தோன்றியது. நான் செய்த காரியத்தின் விபரீதம் புரியும் வயது அல்ல அது. 

ஆளுக்கு ஆள் சத்தம் போட்டு ஒரு வழியாக கலைந்தனர். நான் சாயங்காலம் வெளியே சென்று சுற்றி விட்டு வீட்டுக்கு வரும் போது தான் ஐய்யோ அக்காவிடம் போட்டுக் கொடுத்திருப்பார்களே என்று ஞாபகம் வந்தது. வாசலிலேயே கோபமாக நின்று கொண்டிருந்தாள் அக்கா. நான் அருகில் செல்லச் செல்ல என்னைப் பார்த்ததும் கோபத்துடன் ஏண்டா இப்படி பண்ணினே என்று கேட்டு விட்டு  நான் செய்த காரியத்தை நினைத்து சிரித்து விட்டாள். 

அதன் பின்னர் ஓரிரு மாதங்களுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்னைப் பார்த்ததும் அவர்களை அறியாமலேயே ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்றார்கள். ஹவுஸ் ஓனர் மட்டும் ஒவ்வொரு மாத வாடகை தரும் போதும் அக்காவிடம் உங்க தம்பி மட்டும் சேட்டையை விட்டுற சொல்லுங்க என்று சந்தடி சாக்கில் வாடகை 10 ரூபாய் ஏற்றி விட்டார். இப்படியாக என் 45 பைசா சேமிப்பு 10 ரூபாய் வாடகை ஏற்றத்தில் முடிந்தது. இருந்தாலும் கொடுத்த காசுக்கு அத்தனை பட்டாஸும் வெடித்ததில் ஒரு மனத்திருப்தி இன்றளவும் இருக்கிறது.

இந்த ஜோக்கான இன்ஸிடென்ட் அக்காவுக்கு கல்யாணம் ஆன பிறகு தன் குழந்தைகளுக்கு "உங்க மாமா தீபாவளிக்கு என்ன பண்ணினான் தெரியுமா" கதையாக உருவெடுத்து, அதன் பின் என் பெண்ணுக்கு கூறி, தற்போது அக்கா பேரன் வரை மாமாத் தாத்தா வெடி வறுத்த கதை பிரபல்யம் ஆகி விட்டது. அவர்கள் உறவினரிடையேயும் பரவி எங்காவது சந்தித்தால் "கெளரி இது தான் எங்க கண்ணா மாமா என்றாலே - ஓ! அந்த நங்கநல்லூர் . . .  வெடி வறுத்த . .மாமா தானே" என்கிற அளவுக்கு அது வளர்ந்து விடும் போல இருக்கிறது.

நாம் செய்த பைத்தியக்காரத் தனங்கள் இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது. 

நினைவுகள் எப்போதுமே சுகம் தானே.

அனந்தகிருஷ்ணன் தினமலர் சென்னை

No comments:

Post a Comment