#இஷ்ட_மித்ர_பந்துக்கள் 😀😀😁😁
அந்த நாள்ல விசேஷம்னு ஆத்து வாசல்ல ஒரு கை ஜலம் தெளிச்சா உறவுகாரா, தெரிஞ்சவா தெரியாதவா எல்லாரும் பத்து நாளைக்கு முன்னாடியே வந்துடுவா இப்போ என்னடான்னா அச்சடிச்ச பத்திரிக்கையை பாத்துட்டு போலாமா வேண்டாமான்னு யோஜனை பண்றா - இது சிவசங்கரி அவர்கள் பாலங்கள் நாவலில் 1907-1935 கால கட்டத்தில் அம்மாஞ்சி அத்தானிடம் அலுத்துக் கொள்ளும் இடமாகும்.
நீடாமங்கலம் சுப்பண்ணா பேத்தி மங்களத்தோட பிள்ளை ராஜாமணி பொண்ணாடி நீ என்று நீளமான உறவுகளை சொல்ல இப்பொழுது எந்த தாத்தா, பாட்டிகளும் இல்லை.
மூன்று தலைமுறைக்கு முந்தியே இப்படியென்றால் தற்போது கேட்கவே வேண்டாம். பிள்ளை +2, பெண்ணுக்கு செமஸ்டர் பரிட்சை அவாளை விட்டுட்டு எங்கயும் போக முடியாது. எங்க அண்ணா பெண் கல்யாணத்துக்கு கூட போகலை, இதை பெருமையாக கூறிக் கொள்வார்கள். எனக்கு தெரிந்த வீட்டில் பெண் +2 படிக்கும் போது அந்த பெண் படிக்கும் போதே சாதத்தை ஊட்டி விடுவார்கள். ஏன்னா படிப்பு கெட்டு விடுமாம்.
எங்க கடைசி அண்ணா சொல்லுவான், ஏண்டா அந்த பொண்ணே அந்த நாள்ல சாந்த சக்குபாய் சினிமால கதாநாயகியா வர அஸ்வத்தம்மா மாதிரி ஒட்டி உலர்ந்து காஞ்சு போன த்ராட்சையாட்டம் இருக்கும். இதுல ஊட்டி வேற விட்டா உடம்புல எங்க ஒட்டும் என்பான்.
ஜானகி ஆச்சர்யமா இருக்கேடி ருக்குவோட பொண் வயத்து பேத்தி கல்யாணமா இருந்தாலும் நாலு நாள் முந்தியே வந்துட்டியேடி, ஏண்டி அம்புலு நானும் ருக்குவும் அத்தை பொண் மாமா பொண்ணா இருந்தாலும் பத்து வயசு வரைக்கும் பாட்டியாத்துலதான் வளந்தேன். ருக்குவோட அம்மா அதான் எங்க மாமி நாத்தனார் பொண் மாதிரியா என்னை பார்த்தா, தன்னோட பொண்ணாட்டம் வளத்தாளேடி, ருக்குவை விட்டு கொடுக்க முடியுமோ அதான் வந்துட்டேன். இது அந்தக் கால உறவுகளின் பிரிக்க முடியாத பந்தமாகும்.
இப்பொழுது சொந்த உடன் பிறப்புகளின் பிள்ளைகள் / பெண்களின் கல்யாணமாக இருந்தாலும் முஹுர்த்ததுக்கு முதல் நாள் மாலையில் வந்து மறுநாள் முஹூர்த்தம் முடிந்தவுடன் முதல் பந்தியில் சாப்பிட்டு விட்டு தாம்பூலம் வாங்கிக் கொண்டு டாட்டா சொல்லி விடுகிறார்கள்.
என்னுடைய ஒன்று விட்ட சகோதரி அவளுடைய பிள்ளைகள் 10த், +2 படிக்கும் பொழுது பரிட்சை நேரங்களில் கல்யாணம் அல்லது வேறு செய்திகளாக இருந்தாலும் ஒரு நாள் இருந்து விட்டு போவாள். பசங்கள் சமாளிச்சுப்பாளா என்று கேட்டால் பெரியவனுக்கு சமைக்க தெரியும். இல்லை ஹோட்டல்ல சாப்டுக்கட்டும். இன்னிக்கு நான் யார் ஆத்து கல்யாணதுக்கும் போகாம இருந்தா என் பிள்ளை கல்யாணத்துல எங்காத்துகாரர், நான் இவா ரெண்டு பேர்தான் மேடைல இருப்போம். எந்த உறவுக்காராளும் வரமாட்டா என்றாள்.
உண்மைதானே இன்று நாம் எப்படி நடக்கிறோமோ அதே போலத்தான் நமக்கும் நடக்கும். சுற்றமும் நட்பும் சூழ விசேஷம் நடந்தால் அந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே கிடையாது.
ஆனால் பலர் கூசாமல் கூறுவது பத்திரிகையை whatsapp அனுப்பிட்டான். நேர்ல வந்து சொல்லியிருந்தா மரியாதையா இருக்கும். இப்படி அலப்பறை பண்ணுபவர்களும் உண்டு.
#பின்_குறிப்பு
5-6 வருஷத்துக்கு முன் ஒரு கல்யாணத்துக்கு நானும் என் கடைசி அண்ணாவும் சென்றிருந்தோம். எங்களோட அரட்டையை பார்த்து விட்டு ஒருத்தர் என்னிடம் நீங்க பெண் ஆகமா இல்லை பிள்ளை ஆத்து உறவா என்றார்.
நான் உடனே எங்க அக்காவோட கடைசி ஓர்படிக்கு மன்னியோட அக்காவுக்கு நாத்தனார் பெண்தான் கல்யாணப் பெண் என்றேன். அவருடைய தலை 90* கோணத்தில் சுழன்று இயல்பு நிலைக்கு வர சில நிமிடங்கள் பிடித்தது. பிறகு தன்னிலைக்கு வந்து நீங்க அவாளுக்கு உறவுன்னு சொன்னது புரிஞ்சுது என்றார். நல்லவேளை அவர் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி தலையை பிய்துக் கொள்ளவில்லை.
🤣🤣🤣🤣
No comments:
Post a Comment