*நானே கொன்றேன்*
*கல்கி*
*அத்தியாயம்-2*
இந்த விருந்தில் இன்னும் ஒரு விசேஷம். இந்தச் சமயத்தில்தான் இவருக்கும் இவரது சகோதரன் மகரபூஷணத்தின் மனைவிக்கும் இடையே இருந்த மனத்தாங்கல் தீர்ந்து ஒரு சமாதானம் ஏற்பட்டது.
மகரபூஷணத்துடன் இவள் தனது வாழ்க்கையைப் பிணித்துக் கொண்ட பிறகு முதல்முதலாக இப்பொழுதுதான் லக்ஷ்மிகாந்தத்தின் வீட்டிற்கு விருந்தினளாக வருகிறாள். மகரபூஷணம் இறக்குமுன்பு இருவருக்கும் சண்டைதான். லக்ஷ்மிகாந்தம் அந்தக் கலியாணத்தைத் தடுக்கத் தன்னாலானவரை முயன்று பார்த்தார். முடியவில்லை. லக்ஷ்மிகாந்தம் தனது சகோதரனை விட பதிநான்கு வருஷம் மூத்தவர்.
அது ஒரு கடற்கரைக் காதல். சுலோசனா - அவள்தான் மகரத்தின் மனைவி - ஒரு மலையாளப் பெண். அழகு ஆளை மயக்கும் போதை வஸ்து போன்றது. அதில் அழகையே எப்பொழுதும் தியானித்துக் கொண்டிருக்கும் மகரம் விழுந்ததில் அதிசயமில்லை. இருவரும் ரிஜிஸ்டர் கலியாணம் செய்துகொண்டார்கள்.
லக்ஷ்மிகாந்தம் எவ்வளவோ சொன்னார். "அந்தப் பெண்ணின் குணம் உனக்குத் தெரியாது. அவள் மனம் ஒரு பரத்தையின் மனம். தன்னைத் தவிர வேறு யாரையும் அவளால் நினைக்க முடியாது. அவள் உன்னைவிட ஐந்து வயது மூப்பு. கலியாணம் செய்துகொள்ள வேண்டுமானால், ஷாப்பில் வேலை செய்யும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணை வேண்டுமானாலும் கலியாணம் செய்துகொள். நான் எனது உள்ளன்புடன் ஆசிர்வதிப்பேன். உனக்கு வேண்டியது தாயின் பரிவும் மனைவியின் காதலும் கொடுக்கக்கூடிய பெண். இவளோ? தன் சுகத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வாள்."
பிரயோஜனமில்லை. மகரமோ, அண்ணனுடன் கோபித்துக் கொண்டு ரிஜிஸ்தர் கலியாணத்தை நடத்தி விட்டான்.
பிறகு நடந்தது அந்தக் கோரமான சம்பவம். அவனது மரணம். போன வருஷம் உதகமண்டலத்திற்குக் கணவனும் மனைவியும் சென்றார்கள். அங்கு தான்..அதன் சிகரமான தொட்டப் பெட்டாவைப் பார்க்கச் சென்றார்கள். அந்தப் பாழடைந்த நட்சத்திரச் சாலையின் பக்கத்தில் செங்குத்தான வீழ்ச்சி ஒன்று. அதில் எட்டிப் பார்த்த பொழுது மகரம் சறுக்கி விழுந்து உயிர் துறந்தார். பிறகு ஏதோ ஒருமாதிரி சுலோசனாவிற்கும் லக்ஷ்மிகாந்தத்திற்கும் சமாதானம் ஏற்பட்டது. இருவரும் மகரத்தின் திதியில் சந்தித்தார்கள்; பிறகு ஜி.டி.யில் ஒரு தடவை எங்கோ சந்தித்தார்கள்.
*தொடரும்...*
No comments:
Post a Comment