Wednesday, November 16, 2022

ஆசமனம்

 ஒரு பயனுள்ள வாட்சப் பதிவு.

வினா: ஆசமனத்தைக் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மட்டும் செய்வது ஏன்?

விடை : ஆசமனத்திற்கு பல விளக்கங்கள் உண்டு. சந்தியா வந்தன, பிரம்ம யக்ஞம், ஔபாஸனம், ஸமிதாதானம், பித்ரு தர்ப்பணம் கோயிலில் ஆறுகால பூஜைகள், வீட்டில் நித்ய பூஜை போன்ற பல முறைகளிலும் மல ஜலங்கழித்தபின் தேக சுத்தியிலும் ஆசமனம் செய்யப்படுகிறது, செய்கின்ற பூஜையின் ஸங்கல்பத்திற்கேற்றவாறு ஆசமன மந்திர விளக்கங்கள் மாறும். பொதுவாக உடல் சுத்திக்காகவே ஆசமனம் செய்யப்படுகின்றது. உடல் சுத்திக்கான ஆசமனத்தில் உடலில் உள்ள தேவதைகளே அவற்றை ஏற்கின்றனர். சந்தியா வந்தனத்தில் சூர்ய சவிதா மண்டல தேவதைகளும் தேவ மண்டல தேவதைகளும் ஆசமனத்தை ஏற்கின்றனர். இவ்வாறாக இதன் விளக்கங்கள் பலப்பல.,

ஆசமனத்தில் கீழே பாத்திரத்தில் இருக்கும் வரை அது சாதாரண நீர்! வலது கை உள்ளங்கையில் ஊற்றப் பட்டவுடன் அது “பிந்து கோஷ்ட தீர்த்தமாகிறது!“ கிழக்கே பார்த்து அமர்ந்து வலது கையை உள்ளே தீர்த்தம் ஏற்க குழியாக மடித்தால் அதற்கு “பிந்து கோஷ்டம்” என்று பெயர். பிந்து கோஷ்டத்தில் தீர்த்தத்தை ஏந்தி “கேசவா, நாராயணா/அச்யுதா/அனந்தா என்று இறைநாமாவைத் துதித்திட அது ஆசமன பூஜைக்கேற்ப தேவதீர்த்தம், பித்ரு தீர்த்தம், ஸ்வதா தீர்த்தம், ஸாவித்ரீ தீர்த்தம் என பல வகைப் பெயர்களில் அனுக்ரஹ சக்திக்கேற்ப மாற்றப்படுகிறது.

கிழக்கே இந்திர மண்டலத்தின் பகுதியில் வாலகில்ய மஹரிஷிகள் தவம் புரிகின்றனர். இவர்கள் பிந்து கோஷ்ட தீர்த்தத்தை மட்டுமே அருந்திக் கடுமையான தவம் புரிகின்றனர். எதற்கு? யார் ஒருவர் பிந்து கோஷ்ட தீர்த்தம் மூலம் விஷ்ணு நாமங்களுடன் ஆசமனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்ம வினைகளில் ஒரு சிறிதைத் தாங்கள் ஏற்று அனுபவிப்பதற்காக! என்னே தியாகம்!!

எனவே வாலகில்ய மஹரிஷிகள் தவம் மேம்படுவதற்காகவும், அவர்களுடைய ஆசியினைப் பெறவும் கிழக்கு நோக்கி ஆசமனம் செய்யப்படுகின்றது.

வடக்கு திசையில் ஆசமனம் ...

ஸ்ரீவித்யா மேரு சக்கரத்தில் 43 கோடி அம்பிகைகள், தெய்வ மூர்த்திகள் உறைகின்றனர் என்று நாமறிவோம். வடக்கு காந்ததிசைப் பகுதியில் “சுக்ல வர்ணா” என்ற அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.

காந்த சக்தியானது உச்சிக் காலத்திலும் மாலையிலும் சுக்ல வர்ணா அம்பிகையிடம்  பூசுவர்ணா, நீளாக்ய வர்ணா, பர்பராலிக வர்ணா, பலிபந்தன வர்ணா, பாச வர்ணா என்று ஐந்து உபதேவியர் உண்டு. இவர்களே நம்முடைய பஞ்சேந்திரியங்கள் செய்த தீவினைகளின் தீயசக்தியை ஓரளவு குறைத்து நம் தேகத்தை புனிதப்படுத்த உதவுகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தினாலும் நாம் செய்கின்ற நல்ல, தீய காரியங்களுக்கேற்ப நம் தேகத்தின் பஞ்சபூத சக்தி கூடும்/குறையும். மனிதன் தீர்க ஆரோக்யத்துடன்  வாழ குறித்த அளவு பஞ்சபூத சக்தி தேவை. பொதுவாக நித்ய ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் இதைத் தர வல்லதாம். தீய காரியங்களில் எண்ணங்களில், ஈடுபட்டால் இப்பஞ்சபூத சக்தி குறையும். இதனால் தான் நோய்கள், மனவருத்தங்கள் உண்டாகின்றன.

வடக்குத் திசையில் செய்கின்ற ஆசமனத்தின் போது உள்ளங்கையில் ஏந்துகின்ற தீர்த்தமானது சுக்ல கோஷ்ட தீர்த்தமாக மாறுகிறது. இதில் கேசவா, நாராயணா/அச்சுதா, அனந்தா என்ற இறை நாமங்கள் சேர்ந்திட இவற்றையே சுக்ல தாரிணியின் ஐந்து உபதேவிகள் நம் உடலில் 72 ஆயிரம் நாடிகளிலும் சுழலச் செய்கின்றனர். கோவிந்தா என்று ஆசமனத்தின் கடைசி மந்திரம் மூலம் தீர்த்ததைக் கீழே விடுகையில் அதனையே அவர்கள் அர்க்யமாக ஏற்று நம்முடைய பஞ்ச இந்தியங்களின் மூலம் விளைந்த தீவினை கர்ம வினைகளை ஓரளவு நீங்கச் செய்கின்றனர். இந்த ஆசமனம் செய்த பின்னர் தான் அடுத்து வரும் பூஜையைச் செய்வதற்கான தகுதியை நம் உடல் பெறுகிறது.

எனவே, இனியேனும் ஆசமனத்தை ஏதோ மும்முறை நீரைக் குடிக்க வேண்டும், ஒரு முறை கீழே ஊற்ற வேண்டும் என எண்ணாது இதன் மஹிமையினை உணர்ந்து சிரத்தையுடன் செய்தல் வேண்டும்.

கோயில் தீர்த்தக் குளங்களைப் போல் ஒரு சாதாரண மனிதனும் தன்னுடைய வலக்கை உட்புறத்தைக் குழிவாக அமைத்துப் பிந்து கோஷ்டத் தீர்த்தம், சுக்ல கோஷ்ட தீர்த்தங்களை எளிமையான மந்திரங்கள் மூலம் உருவாக்க முடியுமென்றால் எத்தகைய அரிய மந்திரங்களை இந்த மானுடப் பிறவியில் பெற்றிருக்கிறோம்!

இந்த எளிய ஆசமன மந்திரம் அனைவருக்கும் உரித்தானது. நாள் முழுதும் பூஜை, ஹோமம், தர்ப்பணம் போன்ற எவ்வழிபாட்டிற்கும் முன்னரும் இந்த எளிய ஆசமனத்தைச் செய்து அனைவரும் பயனுற வேண்டும்.

No comments:

Post a Comment