Friday, November 11, 2022

கல்யாண சாம்பார்

 கல்யாண சாம்பார்

தேவையானவை : இளசான முருங்கை -1, உருளைக்கிழங்கு - 1, பீன்ஸ் - 4, சிறிய கத்திரிக்காய் -2, சி. வெங்காயம் – 12, 
சிறிய நாட்டுத் தக்காளி -2, 
வாழைக்காய் -1, 
கேரட் - 1, 
தேங்காய் துருவல் - அரை மூடி, 
புளி - எலுமிச்சையளவு, மல்லித் தூள் - ஒன்றரை ஸ்பூன், 
வரமிளகாய் தூள் - 1/2 ஸ்பூன், 
சாம்பார் தூள் - 2 ஸ்பூன், துவரம் பருப்பு - 100 கிராம், 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், 
பெருங்காயத் தூள் - தேவைக்கு, 
வெந்தயம் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் – 2, கறிவேப்பிலை & மல்லித் தழை – சிறிதளவு, 
வெல்லம் – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கு, உப்பு – தேவைக்கு.

செய்முறை :  

துவரம் பருப்பை குழைய வேக வைத்து எடுத்து தனியாக வைக்கவும். 

தேங்காயைத் துருவி அதை விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும். புளியை நன்கு திக்கான கரைசலாகக் கரைத்து வைக்கவும். 

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அனைத்து காய்களையும் சாம்பாரில் போடும் அளவு வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டினால் போதும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அது சூடானதும் வெட்டிய காய்கறிகள் எல்லாம் சேர்த்து எண்ணெய்யில் நன்கு வதக்கவும்.

அதன் பின்பு புளி கரைசல், மல்லித்தூள், வரமிளகாய் தூள், சாம்பார் தூள், தேவையான உப்பு சிறிதளவு நீர் சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வரும் வரை வேகவிடவும்.

பின்பு வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய் விழுது, தேவையான நீர் சேர்த்து கிளறி கொதிக்கவிடவும். கொதி வரும் முன் சிறிதளவு வெல்லம் & பெருங்காயம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நன்கு சிம்மில் வைத்து விடவும்.

ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், 2 வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு & கறிவேப்பிலை போட்டு நன்கு தாளித்து அதில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைத்து சாம்பாரில் கொத்தமல்லித் தழைகள் தூவவும்.

இதோ ருசி மிகுந்த கல்யாண விருந்துச் சாம்பார் நீங்கள் ருசிக்கத் தயார். சாம்பார் தூளுக்கு SHDசாம்பார் பொடியை பயன்படுத்தவும் மிகவும் அருமையாக இருக்கும்! சுடுசோற்றில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு இந்த சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிட்டவுடன் தானாகவே உங்கள் வாய் பாடும் இப்படி…

*“கல்யாண சமையல் சாதம்.. காய்கறிகளும் பிரமாதம்”*

No comments:

Post a Comment