வேர்க்கடலை மிளகுக் குருமா
செய்முறை :
அரைமணி நேரம் நீரில் ஊற வைத்த 250 கிராம் வறுக்காத வேர்க்கடலையை சரிபாதியாக இரண்டாக பிரித்து ஒரு பாதியை தனியே வைக்கவும். ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு கிராம்பு 3, ஏலக்காய் 2, நட்சத்திர சோம்பு 1, பட்டை 2 சிறு துண்டுகள், சோம்பு 1/2 டீஸ்பூன், பூண்டு 10 பற்கள், நான்காகக் கீறிய இரண்டு பச்சைமிளகாய்,
ஒரு அங்குல நீள தோல் சீவிய இஞ்சி, நறுக்கிய பெரிய வெங்காயம் 1 ஒரு கையளவு நறுக்கிய மல்லித்தழை எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தின் மேற்புறம் பளபளப்பாக ஆகும் வரை வதக்கி ஒரு பாதி வேர்க்கடலை, ஒரு நறுக்கிய தக்காளி, ஒன்றரை ஸ்பூன் மிளகு, துருவிய தேங்காய் கால் மூடி எல்லாம் சேர்த்துக் கிளறவும்.
தக்காளி ஓரளவு குழைந்து வந்ததும் இதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்து தனியே வைக்கவும். மீண்டும் கடாயில் நெய் 1tbs விட்டு, அது சூடானதும் சற்று பெரிய சதுரமாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, சுத்தம் செய்து நறுக்கிய குடை மிளகாய் 1 சேர்த்து வதக்கவும்.
இந்த வெங்காயம் வதங்கி கண்ணாடி போல் வந்ததும், மீதி 1 கப் வேர்க்கடலையை இதில் சேர்த்து, முக்கால் ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் போட்டு நன்கு இது கலக்கும் படி 1 நிமிடம் கிளறி பின்னர் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை இதில் சேர்த்து 1 கப் நீர் (மிக்ஸியை கழுவிய நீரும் சேர்த்து) விட்டு தேவையான உப்பு சேர்க்கவும்.
இதை நன்கு ஒரு முறை கலந்துவிட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி திரண்டு வரும் போது அடுப்பை குறைவாக எரிய விட்டு கடாயை ஒரு மூடியால் மூடி 12 நிமிடங்கள் வேக விடவும், பின்னர் மூடியை திறந்து மல்லித்தழைகள் தூவி நன்கு ஒரு முறை கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். அசத்தல் ருசியில் வேர்க்கடலை பெப்பர் குருமா ரெடி.
அசைவ குருமாக்களுக்கு இணையாக சப்பாத்தி, பூரி, பரோட்டா, ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசை அனைத்திற்கும் ரகளையான காம்போ இந்த குருமா. பிரட், பன் போன்றவற்றிற்கும் கூட சூப்பராக இருக்கும். சூடான பஜ்ஜி வகைகளுக்கு இந்தக் குருமாவைத் தொட்டுக் கொண்டால் சொர்க்கம் உங்கள் நாக்கில் தெரியும்.
டிஸ்கி : இதோடு உருளை, காளான், பனீர், பேபி கார்ன், மீல் மேக்கர் போன்றவற்றையும் சேர்த்து குருமா வைக்கலாம்.
No comments:
Post a Comment