Monday, November 7, 2022

சௌந்தரராஜ பெருமாள் கோயில்

 தினம் ஒரு திருத்தலம்...🛕*_

கருடன் மீது அமர்ந்த பெருமாள்.. காயத்ரி மந்திர தேவதைகள்..!!
               
அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில்...!!

*இந்த கோயில் எங்கு உள்ளது?*

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு என்னும் ஊரில் அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் தாடிக்கொம்பு என்னும் ஊர் உள்ளது. தாடிக்கொம்பில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*

இத்தல மூலவரான சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மதுரை கள்ளழகரை போலவே, இங்கும் சித்ரா பௌர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குவது சிறப்பம்சமாகும்.

இக்கோயிலில் சிறப்பம்சமாக மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர்.

இக்கோயிலில் தன்வந்திரிக்கும் தனிச்சன்னதி அமைந்துள்ளது. பொருளாதார சிக்கல்களை தீர்த்து வைக்க சொர்ண ஆகர்ஷண பைரவர் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் அமைந்துள்ளனர். சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் அமைந்துள்ளனர்.

*வேறென்ன சிறப்பு?*

இத்தல தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணுகோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவ தாண்டவர், ஊர்த்துவ காளி, அகோர வீரபத்திரர், ரதி மற்றும் கார்த்தவீரிய அர்ஜூனன் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.

ஆஞ்சநேயர், இரட்டை விநாயகர், லட்சுமி நரசிம்மர், விஷ்வக்ஸேனர், பெருமாளின் தசாவதாரம், வேணுகோபாலர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோரும் இங்கு தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

கருவறையின் தென் புறத்தில் தாயார் கல்யாண சௌந்திரவல்லி தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறாள். இவளது சன்னதியின் முன்பு நின்ற கோலத்தில் விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி ஆகியோர் அமைந்துள்ளனர்.

*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*

சித்திரை திருவிழா, ஆடி பௌர்ணமி பெருந்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆடியில் பிரம்மோற்சவம், திருவோணம் மற்றும் அமாவாசை ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*

குழந்தை பாக்கியம், கல்வி ஞானம், வியாபார விருத்தி ஆகியவற்றிற்காக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.

*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் தாயாருக்கு புடவை சாற்றுதல் மற்றும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுதல், அபிஷேக ஆராதனை செய்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

🌷🌷

No comments:

Post a Comment