Monday, November 7, 2022

சாமிதாத்தாவும்_காமுப்பாட்டியும்

 #சிறுகதை

சிரிக்க

#சாமிதாத்தாவும்_காமுப்பாட்டியும்சீரீஸ்

வாசலில் காலிங்பெல் சத்தம்கேட்டு, விளையாடிக்கொண்டிருந்த சுடோகு வை விட்டு எழுந்து கதவைத்திறந்தார் சாமித்தாத்தா.

 காமுப்பாட்டிதான் "உஸ் அப்பாடா" என்றபடி ஊஞ்சலில் வந்தமர்ந்தாள்.

"சாப்ட்டேளா"  இது பாட்டி.

"ம் ம். எல்லாம் ஆச்சு"

"ஏன். சொரத்தில்லாம பதில் வரது? புடிக்கலயா?"

"நீ கோச்சுக்கமாட்டேன்னு உத்தரவாதம் குடுத்தா ஒரு விஷயம் சொல்றேன்"

"மென்னு முழுங்காம விஷயத்தச் சொல்லுங்கோ. கோச்சுக்கற விஷயம்னு உங்க தொங்கற மூஞ்சிய பாத்தாலே  தெரிஞ்சுடுத்து"

"கொழம்பு கொட்டிபோயிடுத்து"

துள்ளி எழுந்து ஊஞ்சல விட்டுக் குதித்த பாட்டி"என்னது. கொழம்பு கொட்டிடுத்தா? எப்டி கொட்டித்து? ஏன் கொட்டித்து? அதெப்டி கொட்டும்" என சரவெடியாக வெடித்தாள்.

"ஒரு நாள் நான் சாதம் போடலைன்னா இந்த அமக்களம். இதுல, நீ முடியாட்டா சொல்லு. நீ ஒருமணில செய்றத நான் அரைமணில செஞ்சு அசத்தறேன்.. அப்டின்னு பீத்தல் வேற. தானா சாப்பாடு போட்டுக்கக்கூடத் தெரியாது. வாய் மட்டும் கிழியும்" தொடர்ந்தாள் பாட்டி.

" சரி சரி. க்ளீன் செஞ்சேளா? வேறென்ன சாப்ட்டேள்?"

"எதால க்ளீன் பண்றதுன்னு தெரீல. நீ வர டயம் ஆயிடுச்சேன்னு அப்டியே வச்சிருக்கேன். நீயே தொடச்சுக்கோ. நான் வெறும் கத்திரிக்கா வதக்கல கலந்து சாப்ட்டு, தயிர்சாதம் சாப்ட்டேன்"

"என்ன. ஒருநாள் வெளீல போனதுக்கு எனக்கு பனிஷ் மெண்ட்டா. அதுவும் சமச்சு எல்லாம் ரெடியா வச்சுட்டு போயிருக்கேன். என் தலையெழுத்த எங்க போய் அடிச்சுக்கறது" புலம்பியபடியே புதுப் புடவையை மாற்றிக்கொண்டு, டைனிங் ஹால் டேபிளை க்ளீன் செய்தாள் பாட்டி.

எல்லாம் முடித்து அப்பாடான்னு ஏசி கீழே வந்தமர்ந்தவளை, "ஃப்ரெண்டோட பேத்திக்கு பேபி ஷவர்னு போனியே. நானே நெனச்சுண்டேன். கொல்லன் பட்றேல ஈக்கு என்ன வேலைன்னு. அதோ ஏதோ சின்னப்பசங்க பங்க்ஷன். நீ எதுக்குன்னு தோணித்து. உன்கிட்ட சொல்லிட்டு யார் மாட்டிக்கறதுன்னுதான் வாயத்தொறக்கல"

",பேச மாட்டேளோ. நான் நல்லபொடவ கட்டிண்டு, பளிச்னு வெளீல கெளம்பினா பொறுக்காதே. சதா கிச்சன்ல சமயல் டிபன் செஞ்சுண்டு விதவிதமா ஊறுகா போட்டுண்டு அழுக்குதுணியோட சிண்ட்ரெல்லா மாதிரி இருந்தாதானே புடிக்கும்"

"சிண்ட்ரெல்லாவா. யாரு. நீயா. இப்டி வேற ஒரு கனவா ஒனக்கு?"

"என்ன முணு முணுக்கறேள் அங்க"

"அது ஒண்ணுமில்லே. ஏதோ ஸ்லோகம் சொல்லிப் பாத்தேன். சாப்பாடு நல்லா இருந்துதா"

"அத ஏன் கேக்கறேள். போனதும் பர்ப்பிள் க்ரேப் பல்ப் ஜூசும் வெஜிடபிள் பக்கோடாவும் குடுத்தா. அந்த ஜூஸ் தேவாமிர்தம் போங்கோ. துளி தோலி வாய்ல அகப்டாம அருமை. அந்த பக்கோடாவும் எப்டிதான் அவ்ளவு நன்னா செஞ்சானோ"

"ஒரு கட்டு கட்டியிருப்பியே. வெல்கம் ஸ்நாக்ஸே அப்டீன்னா சாப்பாடு பலே ஜோர்னு சொல்லு"

"அதுக்கு முன்னால சீர் டிஸ்ப்ளே இருந்தது. ஒரு பாஸ்கட்டுக்கு நானூறு ரூபாயாம். வெறும் கள்ளிபலகா, அதுக்கு டெகோரேஷன். உள்ள இருக்கற பழம், பூ, ட்ரை ஃப்ரூட்ஸ் அதெல்லாம் அதுல சேராதாம். தண்ணியா பணத்த செலவழிக்கறதுகள்"

"இந்தக்காலம் ஷோக்குக்குதான் முதலிடம். அந்தக்காலம்னா, இந்த பணத்த பொண் பேர்ல போட்டு வக்கலாமேன்னு தோணும். இப்ப பொண்களே பணத்துல பொரள்றதுகள். காலம் மாறி ப் போச்சு"

"ஆரம்பிச்சுட்டேளா. அந்தக்கால புராணத்த. மேல கேளுங்கோ. வாழ எல போட்டதும் அத தொடச்சுக்க சூடா ஒரு வெட் நாப்கின் தந்தா. கை, எலய க்ளீனா தொடச்சுக்க. அப்றம் "பிளி ஹோளிகே" (வெள்ளை போளி) அப்டின்னு ஒண்ணு போட்டா. மொதல்ல ஸ்வீட்னு நெனச்சோம். ஆனா அது காரம். நாம பருப்பு போளி ஸ்வீட் செய்வோமே. அது போலதான். உள்ளே ஸ்டஃபிங் நாம அரிசி வத்தல் போட கூழ் பண்ணுவமே அது. என்னமா ருசியா இருந்துது தெரியுமோ. நான் இதுவரை சாப்டதே இல்ல. அதுக்கு தொட்டுக்க ப்ரெஷ் மொச்சைகாய் க்ரேவி..சூப்பர் காம்போ"

"ஸ்வீட் என்ன? அதுவும் ஸ்பெஷலா"

"இல்லியா பின்ன? ,கோதுமை ரவா பாயசம், பூசணி ஹல்வா, பைன்ஆப்பிள் ரசமலாய்"

"என்னது. பைன்ஆப்பிள் ரசமலாயா? கேட்டதே இல்லியே"

பன்னீர் உள்ளே ஜீரால வேகவச்ச பைன் ஆப்பிள் ஸ்லைஸ் ஸ்டஃப் பண்ணி, அத மலாய் பாலில் ஊற வச்சிருந்தா. டிஃபரண்ட் ஸ்வீட்"

"ஓகோ. அப்றம். சாம்பார் ரசம்லாம்"

"அது இல்லாமயா..எல்லாம் உண்டு. கெட்டி தயிரும் உண்டு. கடைசியா குடுத்த பீடா வும் ஸ்பெஷல். ட்ரை டேட்ஸ்ல(உலர்ந்த பேரீச்சை)  உள்ள கொட்டைய எடுத்துட்டு, அதுக்குள்ள வெத்தல பாக்கு கிராம்பு ஏலம் எல்லாம் இடிச்சு ஸ்டஃப் பண்ணி ஆளுக்கு ரெண்டு. உங்களுக்குகூட ரெண்டு கொண்டுவந்தேன்"

"பேஷ் பேஷ். சூப்பர் விருந்துன்னுசொல்லு. லேடீஸ் பாடு தேவலை. அடிக்கடி இப்டி எங்கியாவது போறேள்..நான் பாரு. கத்திரிக்கா வதக்கல் சாதம்னு என் தலைல இன்னிக்குப் போட்ருக்கு. ஹூம்" தாத்தாவின் முணுமுணுப்பை பாட்டியின் குறட்டை ஒலி அமுக்கிவிட்டது.

No comments:

Post a Comment