Friday, November 11, 2022

கொசுக்கடிக்கு chik shamboo

 அன்புள்ள மத்யமர் குடும்ப நண்பர்களுக்கு,

இரவு மணி பத்தினொன்று!

இன்று மயிலாடுதுறை இரயில்வே நிலையத்தில் மன்னை விரைவு இரயிலுக்காக ஒரு மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இரயில் 12.03க்கு.

நிலையத்தில் கொசுக்களின் படையெடுப்பில் மனிதர்களில் கை, கால்களை கொசுக்கள் கடித்து துவம்சம் செய்து கொண்டிருக்க என் கால்களையும்  கொசுக்கள் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. நானும் என்னென்னமோ விஷயங்களைக் கையாண்டு தோற்றுப் போய் கால்களைக் கைகளால் பிடித்துக் கொண்டு கால்களையும் மூளையையும் சுரண்டிக்கொண்டிருந்தேன்.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு இருக்குமாமே! இதற்கு என்ன தீர்வு? குழம்பிப் போன நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

இரவு மணி 11.00. மெதுவாக கால்வலியோடு நடந்தவன் மேம்பாலம் கீழ் வரை நடந்து வந்து விட்டேன். வீட்டுக் குடைச்சலை தாங்க முடியாது சட்டையைப் போட்டுக்கொண்டு வீரமாய் நடந்து போவோமே அதுபோல் கொசுக்களின் குடைச்சலால் நடந்து வந்து விட்டேன்.

 எல்லா மெடிக்கல் - களும் மூடிக் கிடந்தன. ஓடோமாசும் கிடைக்கவில்லை.

 எப்படி நடந்து சென்றேன் என்று தெரியவில்லை. அந்த தெரு நாய்கள் என்னை சுற்றி வலைப்பதாக உணர்ந்தேன். ஸ்டேஷனில் அமர்ந்திருந்த என் மனைவியிடம் கூட சொல்லிக்கொண்டு வரவில்லையே என வருந்தினேன்.

என் நடைக்காக தெருவில் பூக்களை கொட்டி வைத்து இருந்தார்களா!? ஆனால் அந்த பூக்கலவையில் மட்டும் ஏன் ஒரு மாதிரியான வாடை?

ரோட்டின் இரு புறங்களிலும் யாரோ அமரர் ஆனதற்கு உறவினர்கள் பிளக்ஸ் போர்டுகளில் வருந்தியிருந்தார்கள்.

 எதிரே கண்களில் தெரிந்தது இரயில் நிலையம். கால்களுக்கு என்னவோ நடக்க தயக்கம். காலையில் தரிசித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் நம்பிக்கையை அளித்திருப்பார் என நம்புகிறேன்.

ஒருவாராக இரயில் நிலையம் வந்து விட்டேன்.

ஸ்டேஷன் வெளியில் 24 நான்கு மணிநேரமும் இயங்கும் ஒரு டீ கடை உண்டு. அதில் ஒரு டீ குடித்துவிட்டு எனக்கு மிகவும் பிடித்த மாயூரம் நெய் வருக்கி இரண்டு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். மெதுவாக ஓடோமாஸ் தங்கள் கடையில் உள்ளதா என்று கேட்டேன். டீ குடிக்கும் போதே அந்த கடை ஓனர் எனக்கு பேச்சில் நண்பராகிவிட்டார்.

நிலையத்தில் கொசுக்கடி தாங்க முடியவில்லை. அதனால்தான் என்று இழுத்தேன்.

என்னிடம் ஓடோமாஸ் இல்லை. ஆனால் கொசு கடிக்காமல் இருக்க பொருள் உள்ளது என்றவர், உங்களுக்கு மட்டும்தானா என்றார்.

நான் மிகவும் பரபரப்பானேன். இல்லை. என் மனைவியும் உள்ளார் என்றேன்.

ஒரு ஒருரூபாய் கொடுங்கள் என்றவர் ஒரு chik shamboo பாக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். இதைப் போடுங்கள். கொசு வராது என்றார். மேலும் இது எனது சொந்த அனுபவம் என்றும் சொன்னார். நம்பிக்கை இல்லாமல்தான் வந்தேன்.

அந்த ஒரு ரூபாய் பாக்கெட்டை அறுத்து கால்களில் தடவிக்கொண்டு அமர்ந்தோம்.

என்ன ஆச்சரியம்! ஒருகொசுக்கூட எங்களை நெருங்கவில்லை.

மனத்தால் அந்த கடைக்காரரை " வாழ்க வளமுடன்!" என்று வாழ்த்தினேன்.

இனி நீங்கள் வெளியூர் கிளம்பும்போது ஒரு ஒருரூபாய் சிக் shamboo பாக்கெட்டையும் மறவாமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!"

வாழ்க வளமுடன்!

இதைவிட சிறப்பான கொசுக்கடிக்கான எளிய மருந்தினை யாரேனும் தெரிந்து வைத்திருந்தால் தயவு செய்து நம் மத்யமரில் பதிவிடவும்.

கொசுக்கடியால் நொந்து போனவர்களுக்காக.

ஜி. ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment