சொல்ல மறந்த கதை ..
எந்த ஊர் கோயில் திருவிழாக்களிலும் அன்னதானம் செய்தாலும் அவர்களின் முதல் தெரிவாக சமையல்காரர் சுப்பிரமணியன் தான் இருப்பார் ...
எவ்வளவு பேர் இருந்தாலும் சளைக்காமல் சமைத்து போடுவார்.
இவர் சமையலுக்காகவே அன்னதானம் சாப்பிட்டவர்களும் உண்டு ..
பெரிய அளவு எதிர்பார்க்க மாட்டார் ..
கொடுப்பதை வாங்கிக் கொள்வார் ..
இதை சேவை மனப்பான்மையோடு செய்து வந்தார்.
இவர் மனைவி வள்ளி. இவருக்கு எப்போதும் ஒத்தாசையாக இருப்பார்.
இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருந்தான்.
நன்றாக படிப்பான். இவனின் ஆர்வத்தைக் கண்டு நன்றாக படிக்க வைத்தார் சுப்பிரமணியன்.
பத்தாவது மற்றும் 12வது வகுப்புகளில் அவனது பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான்.
பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பிற்கு யாருடைய தயவும் இல்லாமல் இருக்கின்ற ஒரு வீட்டை விற்று படிக்க வைத்தார்.
அவனும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பெங்களூரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு சேர்த்தான்.
சேர்ந்த சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் அந்த கம்பெனியின் கிளை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டான்.
நல்ல திருப்திகரமான சம்பளம்.
இதையெல்லாம் சுப்பிரமணியின் எதிர்பார்க்கவில்லை.
தன் மகனுக்கு ஏழை எளிய குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணை எடுக்க வேண்டும் விரும்பினார்.
அப்படி எடுக்கும் பட்சத்தில் மருமகள் நம்மளை கவனித்துக் கொள்வாள் என்று எண்ணி வறுமையில் இருக்கும் தனது நண்பன் முத்துக்குமாரின் மகள் வர்ஷினியை திருமணம் முடித்தார்..
திருமணம் முடித்த சில நாட்களிலேயே கார்த்திகேயன் வர்ஷினியை புளோரிடாவுக்கு அழைத்துச் சென்று விட்டான் ..
ஒழுங்காக வீட்டிற்கு பணம் அனுப்பி கொண்டு இருந்தவன் திருமணத்திற்கு பிறகு அனுப்பி வைக்கவில்லை ..
வள்ளி ரொம்ப வருத்தப்பட்டாள்..
நாம நினைக்கிறது ஒன்னு நடக்கிறது ஒன்றாக இருக்கே ..
சுப்பிரமணியனோ யாரை நம்பி யாரும் இல்லை நமக்கு கடவுள் இருக்கிறார். கவலைப்படாதே என்று மனைவி வள்ளியை தேற்றினார் ..
தனது தந்தையிடம் போன் பேசிய கார்த்திகேயன் ஊருக்கு வருவதாக சொன்னான்.
இதைக் கேட்டு மகிழ்ந்த வள்ளி தன் பிள்ளைக்கு மருமகளுக்கு வகைவகையாக சமைத்து போட வேண்டும் என்று கனவு கொண்டிருந்தாள் ..
என்னங்க நம்ம பிள்ளை நம்மள ஊருக்கு கூட்டிட்டு போவான் இல்ல ..
எனக்கும் அமெரிக்கா போகணும்னு ஆசை இருக்குங்க என சொன்னதும் சுப்பிரமணியன் லேசாக சிரித்தார் ..
புள்ள வரட்டும் அப்புறம் பார்க்கலாம் என சொன்னவரிடம் நாமளும் பிள்ளையை கூப்பிட போறோம் இல்ல .. கேட்ட வள்ளியிடம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான் .. நேராக வீட்டுக்கு வந்துடுறானாம். சற்று ஏமாந்து தான் போனாள் வள்ளி ..
வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள் ..
கார்த்திகேயன் வர்ஷினியும் ஒரே ஒரு ஹேண்ட் பேக் மட்டும் கொண்டு வந்திருந்தனர் ..
அதிலிருந்த ஒரு சிறிய பையை அம்மாவிடம் கொடுத்து இந்தாங்க ம்மா உங்களுக்கு என்று கொடுத்தான்.
அதில் சாக்லேட் மட்டும் இருந்தது ..
அது பெரிதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை.
சமையலில் ஆர்வமாக இருந்து கொண்டிருந்தாள் வள்ளி ..
அம்மா நான் உடனே வர்ஷினி வீட்டுக்கு போயாக வேண்டும் .. சாப்பிட எல்லாம் எனக்கு டைம் இல்ல .. ஒரு மாசம் அவ அங்க தான் இருப்பா.
அப்பப்ப நான் வந்துட்டு போறேன் ..
என சொன்ன கார்த்திகேயனிடம் உனக்காக நிறைய சமைச்சு வச்சிருக்கேன் ப்பா என சொன்னதும் வர்ஷினியோ பரவால்ல அத்தை பேக் பண்ணி எடுத்துட்டு போறோம்.
வர்ஷினி தாய் வீட்டுக்கு சென்றார்கள்.
ஒரு மாதம் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்லும் போது தந்தையிடம் அப்பா அடிக்கடி போன் பண்ண வேண்டாம் தேவைப்படும்போது நான் பண்ணுகிறேன் ..
சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்கள் .. அவர்களோடு வர்ஷினியின் தாயும் அமெரிக்காவுக்கு பயணம் ஆனாள்..
மகனை அனுப்பி வைத்துவிட்டு கணவரிடம் நாம ஒன்னு நினைச்சோம்.. ஆனா நடக்கிறது ஒன்னு ..
ஏழை வீட்டுல பொண்ணு எடுத்தா கஷ்டம் நஷ்டம் தெரியும் என்று நினைத்தோம்..
கடைசியா அவன் நம்மள நினைக்கவே இல்லையே .. ஒரு வார்த்தை கூட கூட்டிட்டு போறேன்னு கூட சொல்லவே இல்லையே ..
இப்ப மாமியார மட்டும் கூட்டிட்டு போறான் .. கண்கள் கலங்கியவாறே புலம்பினாள்..
நான் இருக்கிற வரைக்கும் உன்னை விட்ற மாட்டேன் கவலைப்படாதே ..
மனைவியை தேற்றினார் சுப்பிரமணியன்.
ஆறு மாதங்கள் கடந்து ஓடியது ..
வர்ஷினியும் ஐந்து மாத கர்ப்பினியாக இருக்கிறாள் ..
என்னங்க இனிமே என்னால வேலை பார்க்க முடியாது போல ..
உங்க அம்மாவை கூட்டிட்டு வாங்க ..என சொன்னதும் கார்த்திகேயனோ எப்படி என்னால கூப்பிட முடியும் எந்த முகத்தை வைத்து கூப்பிடுவது ...
அவங்க ஆசையை ஏதாவது நிறைவேற்றினோமா...
இப்போதுதான் உரைக்க ஆரம்பித்தது கார்த்திகேயனுக்கு ..
மனசு சரியில்லாமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றான்...
அன்று தைப்பூசம் விமர்சையாக நடந்து கொண்டிருந்தது ..
சாமி கும்பிட்டு விட்டு திரும்பிப் பார்த்தான் ..
அன்னதான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது ..
சிறு வயதில் அன்னதானம் சாப்பிட்ட நினைவு வந்தது ..
சாப்பிட உட்கார்ந்தான். சோறு போட்டு பரிமாறியவரை பார்த்தான்..
அப்பா ...
ஒரு பக்கம் மன வேதனை .. மறுபக்கம் ஆச்சரியம் ..
அப்பா இங்கே எப்படி என்று...
அவர் இவனை கண்டு கொள்ளாமல் அடுத்த இலைக்கு போய்விட்டார் ..
அப்பா என்னை மன்னிச்சிடுங்க.. என்னை மன்னிச்சிடுங்க.. கதறினான்..
அப்படியே சமையல் செய்த இடத்தை பார்த்தான் .. அங்கே வள்ளி நின்று கொண்டிருந்தாள்..
அம்மா என்ன மன்னிச்சிடுங்க.. அப்பா பேச மாட்டேங்கிறாரு ..
கதறிய மகனைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் வள்ளி ..
கால் பிடித்து கதறி கதறி அழுத மகனிடம்
உனக்கென்று ஒரு உறவு வந்ததும் எங்களை மறந்து போனாயே ..
எப்படி எல்லாம் உன்னை வளர்த்து ஆளாக்கி இருப்போம் .. அதையெல்லாம் மறந்து போனாயே ..
எங்கள் ஆசை கனவுகளில் மண்ணள்ளி போட்டாயே ..
போ .. உன் மனைவியிடமே சந்தோஷமாக இரு .. எங்களை பார்த்துக்க கடவுள் இருக்கிறார் ..
எப்படி இங்கு வந்தோம் என்று ஆச்சரியமாக இருக்கிறதா ..
நம்ம ஊரு பஞ்சாயத்து தலைவர் மகன் தான் இந்த ஊர்ல பெரிய கம்பெனி வைத்திருக்கிறாராம் ..
அவர்தான் இந்த கோவிலை கட்டியிருக்கிறார் ..
இந்தக் கோயிலுக்கு வர்றவங்களுக்கு அன்னதானம் தினமும் கொடுத்துக்கிட்டு இருக்காங்க ..
அதுக்கு சமைச்சு போட தான் நாங்க இங்க வந்து இருக்கோம் ..
நல்ல வசதியா வீடு கொடுத்திருக்கிறார்கள் .
கடவுள் எங்களை கைவிடவில்லை ..
உன்னையும் கடவுளையும் நம்பினோம் ..
நீ ஏமாற்றி விட்டாய் ..
கடவுள் எங்களை ஏமாற்றவில்லை ..
இதைக் கேட்ட கார்த்திகனுக்கு பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது .. இந்த சூழ்நிலையில்
மனைவி கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை சொன்னான் ..
சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு ..அட போடா ..
உனக்காக நாங்கள் பார்த்தற்கு நல்ல விசுவாசம் காட்டி விட்டாய் ..
இது போதும்டா சாமி ..
நீயே உன் பிள்ளையை பார்த்துக்கொள் ..
விர்ரென்று கிளம்பி போனாள் வள்ளி ..
கண்களில் கண்ணீரோடு தாய் சென்ற பாதையை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன் ...
🌹🌹🌹
No comments:
Post a Comment