Thursday, March 11, 2021

திருகழுக்குன்றம்

 69. திருகழுக்குன்றம் (சிசீ7) #ganeshamarkalam

ரெண்டு கழுகு. சிவன்கோவிலுக்கு மேலே தினம் மத்தியானம் உசரக்க வட்டம் போட்டுண்டு பறந்து வரும். சொல்லி வச்சாப்போல் ஒரே டயத்துக்கு. வந்து அழகா ஒரு இடத்தில் அமர்ந்ததும் கோவில் குருக்கள் அதுக்கு பிரஸாதம் உருட்டி வைக்க சாப்டூட்டு பறந்து போயிடுமாம். எங்கப்பா சொன்னது ஞாபகம்..

ஒருக்கா சிதம்பரத்துலெந்து சென்னைக்கு போரப்போ டேக் டைவெர்ஷண்னு போட இந்த ரூட்டில் பஸ். மலையக் காமிச்சு “கணேசு, கழுகு வரும்னு சொன்னேனே அந்த மலை இதான்.” ஜன்னல்லேந்து கழுத்தை நீட்டி வளைச்சுப் பாக்க கழுகே தெரியலை. “இப்ப சாயங்காலம் 5 மணி, மத்தியானம் வந்துட்டு போயிருக்குமே!” “அப்ப அது வரப்ப கூட்டிண்டு வந்து காமி”. செய்யரேன்னர். ஆனா வரவேயில்லை. வளர்ந்து பெரியவனாகி எனக்கும் பையன் பொறந்து அவனுக்கு குழந்தைனு ஆகி இன்னைக்கு பேரனை அழைச்சிண்டு வந்திருக்கேன். அன்னைக்கு அப்பா சொன்னது, அவர் குரல்லேயே மனசுக்குள் ஒலிக்க.

இதை மெமரி பை அசோசியேஷன்ம்பா. எதுவோ நடந்துட அது ட்ரிகர் செஞ்ச இன்னொண்ணு மின்னாடி நடந்ததை துல்லியமா ஞாபகத்துக்கு கொண்டு வரும். 8 வயசில் பஸ்ஸுலேந்து பாத்தது. சென்னையிலேயே இருந்திருக்கம் திருகழுக்குன்றத்துக்கு ஏன் வரலை? கழுகு பாக்கணும்னு சொன்னவன் போயே ஆணம்னு ஏன் அடம் பிடிக்கலை? மறந்தே போயாச்சு. பெரியவன் ஆனப்பரம் குடும்பத்தோட வந்திருக்கலாம். தோணவேயில்லை.

அன்னைக்கு பேரப்பய பிரணவ் “தாத்தா ஏதாவது ட்ரெக்கிங் மாதிரி பக்கத்தில் அரைநாளில் போயிட்டு வராப்போல் அழைச்சிண்டு போ” சித்தே யோசிச்சு “வாடா ஸண்டே கழுகு மலை போலாம்.” காரெடுத்துண்டு வந்தாச்சு. வழீல அப்பா சொன்னதையும் அந்த 2 கழுகு வந்து பிரஸாதம் வாங்கிண்ட கதையையும் பேரனுக்கு சொல்ரப்போ மனசை என்னவோ செஞ்சது. அப்பா கூட இல்லாததா? இருக்கலாம். நாமளும்கூட பாக்காத அந்த அதிசயத்தை இப்போ என் பேரனுக்கு சொல்லி என்னாப் போரதுன்னா? இப்போவும் அதை பாக்கப் போவதில்லை. இடைப்பட்ட 52 வருஷத்தில் இன்னுமா அந்த கழுகுங்க உசுரோட இருக்கும்? அது இருந்தாலும் குருக்கள்? சாத்தியமில்லை.

பேரன் புத்திசாலி. “நீ பாத்திருக்கியா தாத்தா?” “இல்லைடா எங்கப்பா சொல்வர். ஒருக்கா படத்தில் காமிச்சர்”. “நாம போரப்ப வருமா?” “வரலாம், ஆனா அதே கழுகு வராது”. “ஏன்” “கழுகுக்கு 30-40 வயசுதானாம். அதுக்கப்பரம் பறக்க முடியாது, ரெக்கை தடிச்சுப்போய் உசர எழும்ப முடியாதாம் அலகு வளைஞ்சு மழுங்கிப் போயிடுமாம். வேட்டையாடி சாப்பிடக் கொள்ள முடியாம பசீல 5 மாசம் அல்லாடிட்டு செத்துப் போயிடுமாம். நேஷணல் ஜியாக்ரபிக்கில் காமிச்சான். எங்கப்பா சொன்னதே நடந்து 50+ வருஷமாச்சுடா செல்லம்”. கூடவே வந்த எங்காத்து மாமி சுபத்ரா, “அது கழுகில்லைடா செல்லம். ரெண்டு ரிஷிகள். ஏதோ சாபத்தினால் கழுகா மாறி இங்கே வந்துதான் உணவு கிடைக்கணும்னு. வரச்சேயும் போரப்பவும் வேதகிரீஸ்வரரை பிரதக்ஷிணமா பறந்து போவதா கதை. கலியுகம் பொறந்ததும் ரிஷிகள் போயிடுவான்னு சொன்னா, இப்ப கலி நடக்கரதோன்னோ!”

பேரனுக்கு நான் சயின்டிஃபிக்கா சொன்னத இவள் மாத்திச் சொன்னது அவனை குழப்பித்து. முன் சீட்டில் என் பக்கத்தில் உக்காந்திண்டு வந்தவன் என்னப் பாக்கரான். பாட்டி சொன்னதுக்கு என் விளக்கம் என்னன்னு. இவளுக்குத் தெரியாம நுணி நாக்கை சைட் அன்னத்தில் உருட்டி “லுளலாயீ, எல்லாம் புருடா!” வாயக் கையால் மூடிண்டு அழகா சிரிச்சு சரீன்னு தலைய ஆட்ட எங்களுக்குள் சங்கேத பாஷையில் “பாட்டி கிடக்கா”.

அவள் சொன்னதில் தப்பில்லை. அந்த விஷயத்தையும் இவனுக்கு புரிய வைக்கணும். இப்படி சுற்றுலா மாதிரி கோவில் குளத்துக்குப் போரப்பவே நம்மாத்து குழந்தைகளுக்கு சத் விஷயங்களையும் சொல்லித் தந்தாத்தான். என்ன ஒண்ணு, நான் சொன்னா சுபத்ரா வேணும்னு மாத்திச் சொல்வள். மின்னாடி 8 கழுகு வந்தது அப்பரம் 2ஆ குறைஞ்சுடுத்தும்பள். பின்னாடி சீட்லேந்தே காரை ஓட்டுவள். கோவிலுக்கு போரமே ஏதாவது ஸ்லோகம் சொல்லிண்டே வருவம்னு செய்ய மாட்டாள். ஒவ்வொரு 5 கிமீ கடந்ததும் “பீரணவ் செல்லம், பாட்டிகிட்டே பின் சீட்டுக்கு வரியா?” இவன் “மாட்டேன்”. அந்த கடுப்பை எம்மேல் காட்டுவள்.

மஹாபலிபுரத்துலேந்து வந்தாலும் சரி செங்கல்பட்லேந்து வந்தாலும் சரி நட்ட நடூல திருகழுக்குன்றம். வழீல ரெண்டு பக்கமும் மூலிகை வனங்கள். சிலத அரசாங்கமே எடுத்து மூலிகை சாகுபடி. போர்ட் பாக்கலாம். இப்படி அரிய பொக்கிஷமா பலருக்குத் தெரிஞ்சிருக்க வாய்பில்லை. வரப்பவே மலையும் மலைக்கோவிலும் தெரிய ஆரம்பிக்கும். மலைமேல் வேதபுரீஸ்வரர். கீழே திரிபுரசுந்தரி அம்மன். சிவன் சன்னதி (பக்தவத்ஸலேஸ்வரர்) இருந்தாலும் அம்பாள்தான் கீழே பிரதானம். அம்பாள் கீழே இருகச்சே இவர் மட்டும் மேலே என்ன செஞ்சிண்டிருக்கர்? நமெக்கல்லாம் ஒரு விஷயத்தை சொல்ல.

காரை நிறுத்திட்டு கீழே பாத்துட்டு மலை ஏறலாம்னு. மேலே போக டிக்கெட் வாங்கணும். அவன் மொள்ளத் தொறப்பான்னு. கீழே பெரீசா சுத்தி வந்தா நன்னா இருந்தது. இவன் “கழுகைக் காணம்? காமிக்கலைன்னா ஆத்துக்கு போனதும் அம்மாகிட்டே சொல்லுவேன்.” மிரட்டரதெல்லாம் என்னைத்தான். மாட்டுப்பொண் இவனை தனியா எங்ககூட அனுப்பிச்சதே பெரீய விஷயம். ஏதாவது புகார் சொன்னா “குழந்தைய அழைச்சிண்டு போய்ட்டு கேட்டதை வாங்கித் தரவேண்டியது தானே’ம்பள். கழுகுக்கு எங்கே போவேன்? பேச்சை மாத்தணும்.

“உம்மாச்சி கும்டுக்கோடா.” “இவர்தான் வேதபுரீஸ்வரரா?” “இல்லைடா அவர் மலைமேல் உக்காச்சிண்டிருக்கர்.” “பின்னே அங்கே போலாம் வா.” காரை அங்கேயே ஒரு சந்தில் பார்க் செஞ்சுட்டு மலை ஏற ஆரம்பிச்சம். எங்கப்பா சொல்லுவர். “திருகழுக்குன்றம் ஒருக்கா ஏறிட்டு வந்தா கம்ப்ளீட் பாடி செக்கப் பண்ணிண்டாப்புலே.” மொத அங்கணம் தாண்டலை சுபத்ரா மூச்சு வாங்க “உக்காந்துட்டு போலாம். என்ன அவசரம்?” நானும் பிரணவ்வும் 15 படி மேலே. அவள் பிக்கல் பிடிங்கல் இல்லாம இவனோட பேசலாம். “வேதபுரீஸ்வரர்னா என்ன தாத்தா அர்த்தம்?” “வேதத்தை பரிபாலனம் செய்யரவர்னு வச்சுக்கலாம்”. “பரிபாலனம்னா?” “எழுதி வச்சுட்டு கேர் டேக்கர். ஒரு காலத்தில் வேதங்கள் சிலருக்கு மட்டுமே உபதேசிக்கப் பட்டு வந்தது. ரிஷிகளும் ஞானிகளுமே அதுக்கு பாத்யதை. சிலர் கேட்டுண்டப்போ சுவாமி அது எல்லாருக்கும் சொந்தம்னு சொல்லிட்டார். ஒரு ரிஷி இத்தனை இருக்கே, படிச்சுப் புரிஞ்சுக்க ரெம்ப நாளாகுமே, முடிக்கரவரைக்கும் எனக்கு ஆயுள் இருக்கும்படியா செய்யணும்னு கேட்டுக்க சிவன் என்ன செஞ்சார் தெரியுமா?” “என்ன?”

“இந்த மலையக் காமிச்சு இது வேதத்தோட கைப்பிடி அளவு. இதை படிக்கவே பல ஜென்மங்கள் தேவைப்படும், முடிஞ்சவரைக்கும் படிச்சுட்டு விதிக்கப்பட்ட டயம் வந்ததும் கிளம்பிடணும். இந்த மலைமேலே ஏறி வந்து என்னை கும்பிட்டா உங்களுக்கு சகல ஞானங்களும் கிட்ட அருள் செய்வேன்னு சொன்னராம்”. “ஞானம்னா என்ன தாத்தா?”. “நன்னா படிப்பு வரும்னு அர்த்தம், டீச்சர் சொல்லிக் கொடுப்பது புஸ்தகத்தில் இருப்பது சட்டுன்னு புரிஞ்சிடும்”. வேற என்ன சொல்ல? குழந்தைக்கு? ஆனா அவனோ விடுவதாயில்லை.

“வேதம்னா என்ன தாத்தா?” “வேதம்னா மிக உயர்ந்த அறிவுன்னு அர்த்தம் பண்ணிக்கலாம். அதாவது இதை படிச்சு புரிஞ்சிண்டா எல்லாமும் விளங்கிட்டதா அர்த்தம். உலகம், இந்த யுனிவெர்ஸ் உண்டானப்போவே, ஏன் அதுக்கும் மின்னாடி இதெல்லாம் ஏன்னும் எதுக்காக வந்ததுன்னும் சொல்லப்பட்ட ரகசியங்கள் இருப்பது”. பல்லக் கடிச்சிண்டேன். ரகஸியம்னா எனக்கு மட்டும் சொல்லுன்னு ஆரம்பிச்சான்னா? நல்ல வேளையா ஒரு குரங்கு ஓடினதை பாத்தவன் எழுந்துண்டான். சுபத்ராவும் மொள்ள ஏறி வரதைப் பாத்துட்டு நாம அவளை விட தெம்பா காமிச்சுக்க நானும் கிடுகிடுன்னு ஏற, கையப் பிடிச்சிண்டு இவனும். இவன் ஸ்பீடுக்கு என்னால் முடியலை. பிடிச்சிண்டிருந்த விரலை விட்டூட்டு மின்னாடி போனான். அடுத்த அங்கணத்தில் படி திசை திரும்ப சுவத்து கட்டில் அவனே ஏறி உக்காந்துக்க அவன் பின்னாடியே மரத்தில் குரங்கும் அவனையே பாத்திண்டு.

கிட்டக்கே போய் “ஆஞ்சநேயர் பாத்தியா?” “ஆமாம். பெருமாள் கோவில்லேன்னா அனுமார் வரணும் இங்கே என்ன செய்யரார்?” “சரித்தான். மலைன்னா குரங்கு இருக்கும்டா”. “ஒண்ணுதான் இருக்கா?” “இன்னும் போனதும் படீலேயே இருக்கும், நம்மை போக வழி விடாது”. சொல்லின்டே சுபத்ராவும் வந்துட கொஞ்ச தூரம் அவளோட சேர்ந்து ஏறினோம். நன்னாவே மூச்சு வாங்கித்து ரெண்டு பேருக்கும். “என்ன இப்படி செங்குத்தா கட்டி வச்சிருக்கான்?” “கீழே போரப்போ ஒரு கம்ப்ளெயின்ட் எழுதித் தந்துட்டு போவம்”. “கிண்டலா? மத்தியானம் எங்கே சாப்பாடு வாங்கித் தரதா உத்தேசம்?” கேக்கரா. “தரிசனம் முடிஞ்சதும் உங்க பேரன் பசிக்கரதும்பான். யோசிச்சு வச்சிருக்கேளா?” “மஹாப்ஸ் போலாம். ஏ2பி இருக்கு”. கேட்டுட்டான் போலேருக்கு. “அங்கே சோலே படூரே கிடைக்குமா. ஐஸ்க்ரீம்?” “உங்கம்மா உனக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம்னு சொல்லியிருக்கா. அதில் இது ரெண்டும் இல்லை”. “அப்படீன்னா நான் வரலை” நின்ன படீலே உக்காந்துட்டன். நானும் அவன் கூட. இவ மட்டும் ஜம்பமா இன்னும் 20படி மேலே போய் உக்கார.

எங்களச் சுத்தி நிறைய குரங்கு சேர்ந்துக்க இவனுக்கு கொண்டாட்டம். எங்க கையில் ஒண்ணுமில்லைன்னு அதுகள் ஒண்ணும் செய்யாம. “தாத்தா குரங்குக்கு சாப்பிட ஏதாவது தரலாமா?” “ஒண்ணும் இல்லையேடா!” சரின்னவன் சட்டுன்னு ஞாபகம் வந்துட “கழுகுவர இடம் எப்போ வரும்?” “மேலே கடைசீ படி கோவிலுக்குள் ஏறப்போர மின்னாடி மேடை மாதிரி இருக்கும். காமிக்கரேன். இறங்கப்போ பாக்கலாம்”. வேதபுரீஸ்வரரை பாத்ததும் பிரதக்ஷிணமா வந்து பால்கனிபோல் இருந்த வளாகத்துலேந்து பாக்க கீழே பார்த்த கோவில் முழுசும் தடாகத்தோட கம்பீரமா. பிரணவ்வுக்கு ஆச்சர்யம். “அங்கே பெரீசா பாத்த கோபுரம் ஏன் தாத்தா இங்கேந்து பாக்கப்போ அத்தனை சின்னதா போச்சு?”

“நாம எத்தனை படிச்சிருந்தாலும் கத்துக்கவேண்டிய விஷயங்களுக்கு மின்னாடி அது ரெம்ப சொல்பமேன்னு சொல்ரதுடா. வேதகிரீன்னு சொல்லப்பட்ட மலைமேல ஈஸ்வரன் அதைத்தான் நமக்கு சொல்லித் தரார். இன்னும் இன்னும் படிக்கணும்னு நமக்கு ஆசை வரணுமாம். அங்கேந்து பாத்தா அது பெரிசு. இங்கேந்து பாத்தா அது ஒண்ணுமேயில்லைன்னு”. சுபத்ரா பேரனுக்கு புரியரா மாதிரி அழகா சொன்னது எனக்கும் பொருத்தமா இருந்தது. நானும் சும்மா இல்லாம, “அந்த ரிஷிகள் கழுகா வந்தான்னு சொன்னமே, அவாதான் ஈஸ்வரனிடம் எங்களுக்குத்தான் வேதம் சொந்தம், இதை சாமான்னியர் படிக்கப் பிடாதுன்னு அடம் பிடிச்சாளாம். அதுக்குத்தான் ஈஸ்வரன் அவாளுக்கு சாபம் தந்துட்டு இந்த யுகம் முடியரவரைக்கும் தினம் வந்து கொஞ்சம் கொஞ்சமா வேதத்தை கத்துக்க ட்ரை செய்யுங்கோ, ஆனா நான் ஓதினது பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் பொது. அதை பூரா படிச்சு புரிஞ்சுக்கரவாளுக்கே அது சொந்தம், யார் வேணும்னாலும் படிக்கலாம்னு சொல்ல ஒரு முழு யுகத்துக்கும் தினம் தினம் அந்த கழுகுங்க வந்துட்டு ஈஸ்வர பிரஸாதம் சாப்டூட்டுப் போனதா புராணக் கதை”.

“இப்போ வரலையே அப்படீன்னா கத்துண்டுடுத்தா தாத்தா?” கேப்பான்னு தெரியும். “அப்படி அர்த்தம் இல்லைடா செல்லம். முடியலைன்னு கிவ் அப் செஞ்சிருக்கும்”.

சுபத்ராவே ஒரு கேள்வி கேட்டா. “கழுகாப் போகன்னு ஏன் சபிக்கணும்? கழுகுன்னா மட்டமா?” “இல்லை. கழுகு மிக கம்பீரம், பக்ஷிகளுக்கு ராஜா மாதிரி. யாருமே எட்ட முடியாத உசரத்துக்கு போகும். அப்படிப் பட்ட கழுகும் என் கோவில சுத்தி இந்த வேதகிரிய பிரதக்ஷணமா வந்து தன்னடக்கமா உக்காந்தாத்தான் அன்னைக்கு மட்டும் தேவையான அத்தியாவசியமான அறிவு கிட்டும், எல்லாத்தையும் ஒரே நாளில் முழுங்கி வேற யாருக்கும் கிடைக்காம செய்ய பிரார்த்திக்க வந்தவாளுக்கு சரியான படிப்பினையா இருக்கட்டும்னு அப்படி”.

திரும்பி இறங்கி வரச்சே ஒரு இடத்தில் போர்ட். கழுகு வரும் இடம்னு. இப்ப வரதில்லைன்னும். சித்தே கரடு முரடான பாதை. முக்காவாசி தூரம் இந்தண்டைப் பக்கமா வர மின்னே ஏறிவந்த படிக்கட்டை அடைஞ்சிடலாம். பிரணவ்வுக்கு இந்த வழி இன்னும் பிடிச்சிருந்தது.

“ஏன்னா நீங்க வேதம் படிச்சிருக்கேளா?” என்ன பதில் சொல்ல சுபத்ராவுக்கு? “எல்லா பிராம்ணாளும் கொஞ்சமாவது படிச்சிருக்கணும். அதுக்கெல்லாம் பிராப்தம் வேணும். அமேரிக்கன் கம்பேனீன்னு போயாச்சு. உம்பிள்ளையும் ஆன்சைட்டுன்னு சுத்தீட்டு கல்யாணத்தோட சேர்த்தே பூணல் போட்டு சமாளிச்சிட்டம். என்னைப் போய் வேதம் படிச்சயான்னா?”

அந்த குறையாய் தீத்துக்கத்தான் பேரனுக்கு பிரணவ்னு பேர் வச்சு வாய் நிறைய கூப்பிட்டாரது. 4 வேதமும் அந்த வார்த்தைக்குள்ளே அடங்கித்தானே கிடக்கு?

No comments:

Post a Comment