லார்ட் எர்ஸ்கின் துரை
நளையிலிருந்து சரியாக 82 ஆண்டுகள் பின்னோக்கிப்போவோம்…31- 10 - 1938
…குப் குப் என்று அந்த ரயில் உபரி நீராவியைக்கக்கிவிட்டு லார்ட் எர்ஸ்கின் துரை இருப்பதையும் மதிக்காமல் “ழே” என்று ஒரு முறை அலறியது.
முழங்காலுக்கு மேல் பஞ்சகச்சம் வைத்து கட்டி மேலே ஆல்பக்கா கோட்டுடன் கஷ்கத்தில் பச்சை சிவப்பு கொடியை இறுக்கிப்பிடித்த ஸ்டேஷன் மாஸ்டர் நீலகண்ட அய்யர் “நிறுத்தப்பா, நிறுத்தப்பா, துரை போகட்டும்” என்று பதைபதைத்தார்.
டவாலி, துபாஷி உதவிக்கலெக்டர், இரண்டு மூன்று குமாஸ்தாக்கள் என்று படை சூழ அன்றைய மதராஸ் மாகாண கலெக்டர் ஹிஸ் எக்சலென்சி லார்ட் எர்ஸ்கின்ஸ் வாயில் சுருட்டுடன் ஸ்டேஷனை விட்டு வெளியேறி ஆஸ்டின் டூரரில் ஏறிக்கொள்ள ப்ருஷ்ட பாகத்தில் புகையுடன் அது அதி வேகமாக, மணிக்கு 12 மெயில் ஸ்பீடில் புறப்பட்டது. கூடவே ஜட்கா வண்டிகளில் மற்ற உத்தியோகஸ்தர்கள் அரக்க பரக்க விழுந்தடித்துக்கொண்டு பின் தொடர்ந்தார்கள்.
நீலகண்ட அய்யர் கிழிந்த வாழை இலையில் அக்கார அடிசலை வழித்து தின்று கொண்டே, “ எங்க இந்த துரையோட வண்டி லேட்டானா ஆறிப்போய்டுமேன்னு பயந்துண்டு இருந்தேன். ரங்கன் கை விடலே “ என்று பின்னங்கையை நக்கிய வாறே மணீஸ் கபேன்னா சும்மாவா” என்று ச்லாகித்தார்.
அந்த அழுக்கு கேட் அன்று பளபளப்பாக இருந்தது. வாசலில் திருச்சி மாகாண அதிகாரிகளும் குமாஸ்தாக்களும் மற்றும் ஊர் பெரியவர்களும் கூடி இருந்தனர்.
“ என்ன முதலியாரே! துரை எவ்வளவு நாழி இருப்பன்?”
“ ஏன் ஸ்ரௌதிகளே! உமக்கு என்ன அவசரம்? இன்னிக்குதான் உமக்கு டிபன் பிரமாதம்மா ஏற்பாடாயிருக்குமே! த்வாதசிதான் நேத்தே ஆயிட்டூதெ”!
“ சும்மா இரும் ஒய்”
“ ஸ்வாமின்! கோவில் பிரசாதம் கொண்டு வந்தீரா? துரை வந்தவுடனே உம்மைத்தான் கேட்பன்”
“ அதெல்லாம் நா பாத்துக்கறேன். நீர் ஒம்ம கணக்கு வழக்கெல்லாம் சப்ஜாடா எடுத்துக்கும். டுபாஷியே ஒம்ம பிசைஞ்சுடப்போறான்”
“ பேசாம இருங்கோளேன். துரை வர்ற நேரம் ஆச்சு”
அந்த ஆஸ்டின் டூரர் படை வந்து சேர, அங்கே இருந்த அத்தனை பேருக்கும் துரையின் பார்வையே நடுக்கமாக இருந்தது. இறங்கின உடனே, முதலியார் துபாஷியிடம் “இளநீர் சாப்பிடுவாரா?” என்று கேட்க, துபாஷி துரை யின் காதில் ரகசியமாகச்சொல்லி அவர் “ நா நா “ என்று ஆங்கில நோ வைக்கூட காலொடித்துப்பேசினார்.
துபாஷி, “ என்ன சேர்மன்! டைம் ஆறது. எல்லாம் ரெடியா?” என்று கேட்க, சேர்மன் அடையவளஞ்சான் ஆதிவராக முதலியார் மஸ்லின் சில்க் வைத்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கத்தரிக்கோலை எடுத்து நீட்டினார். துபாஷி அதை துரையிடம் கொடுக்க அவர் நாசூக்காக அந்த சுவற்றின் மேல் மூடப்பட்ட சில்க் திரையின் முன்னால் இருந்த மஞ்சள் ரிப்பனை வெட்டினார். அருகில் இருந்த ஒரு டவாலி சட்டென்று அந்த மஞ்சள் திரையின் நாடாவை இழுக்க கருப்பில் வெள்ளை எழுத்துக்கள் அந்த மூன்றடிக்கு இரண்டடி சிமெண்ட் பலகையில் மிளிர்ந்தன:
Opened by His Excellency Lord Erskins, Governor of Madras 31 -10 -1938
எல்லோரும் கை தட்ட துரை ஒரு மிதப்பாக தலை ஆட்டி அதை ஆமோதித்து சட்டென்று ஆஸ்டின் காருக்குள் ஏறி உட்கார்ந்து விட மறுபடி களேபரத்துடன் துரையின் கோஷ்டி ஜட்காவுக்கும் ரிக்ஷாவுக்குமாய் நகர, கூடியிருந்த லோகல் பெரிய மனுஷாள் குனிந்தும் வளைந்தும் துரைக்கு ஆஸ்டின் கார் கண்ணாடி வழியாக சல்யுட் அடிக்க கார் நகர்ந்தது.
ஆதிவராக முதலியார் முனிசிபல் டவாலி முனிய சேர்வையிடம் “ இந்தா முனியா! நீதான் இந்த போர்டை தினத்துக்கும் தொடச்சு பளபளப்பா வெச்சுக்கணும், தெரிஞ்சுதா? துரை திறந்து வெச்சது, மறக்கப்படாது” என்றவாறே நகர்ந்தார்.
“ஆமாம் சேர்வை! இது நாம் ஊர் ஸ்கூல். பசங்க அழுக்குபண்ணிப்பிடும். நீர்தான் பாத்து பாத்து துடைக்கணும், தெரியுமோல்லியோ” என்று ஸ்ரௌதிகளும் எச்சரிக்கை விடுத்தார். வீட்டில் கொத்தமல்லி தொகையல் காத்துக்கொண்டிருக்கும் அவருக்கு. அதனால் ‘ம்கும் “ என்று கனைத்தவாறே நடையைக்கட்டினார்.
டவாலி முனிய சேர்வை தன வாழ்நாள் வரை அதை தினமும் பள பளப்பாகத்தான் துடைத்து வைத்திருந்தான்.
1940களில் அந்த பள்ளிக்கூடம் பற்றிய சில செய்திகளே நமக்குக்கிடைக்கின்றன:
- “தமிழ் வாத்யார் தேசிகர் தீவிர ப்ராம்மனத்வேஷி. தாயுமானவரை ஒப்பிக்காவிட்டால் “ஆச்சாரியாரே என்று கூப்பிட்டு கதைத்திருகுவார்”
- “சமஸ்க்ரித்த வாத்யார் க்ஷவரம் செய்து கொண்டு பையன்களின் சிண்டைப்பந்தாடுவார்”
- முற்றிலுமாக பையன்கள் படித்த பள்ளி. பெண்களுக்கான பள்ளி அடுத்த காம்பௌண்டில். “சுவற்றின் மீதி ஏறிப்பார்த்தால் பெண்கள் தூரத்தில் புள்ளி புள்ளியாகதெரிவார்களாம்”
- பிரசித்த பெற்ற தஞ்சாவூர் கிரிக்கெட் டீமை ஸ்ரீரங்கம் லோகல் டீம் தோற்கடித்த சம்பவம் இந்தப்பள்ளி மைதானத்தில்தான் நடந்தது
- பையன்கள் சைக்கிள் கற்றுக்கொள்ள இந்த மைதானத்துக்குதான் வருவார்கள். சின்னராஜு கொடுக்கும் இருப்பதிலேயே லொடக்காணி சைக்கிளில் தான் ஹெட்மாஸ்டர் பிள்ளை கற்றுத்தருவான். ஒரு பையன் கற்றுக்கொள்ள ஹெட்மாஸ்டர் பையன் பிடித்துக்கொண்டே ஓட, “சங்கத்தின் மற்ற அங்கத்தினர்களும் எதற்கோ பின்னாலேயே ஒடுவார்களாம்”.
இந்த விஷயங்கள் கூட அந்தப்பள்ளியில் நாற்பதுகளில் படித்த ரங்கராஜன் என்பவர் எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளிலிருந்து தான் தெரிய வருகிறது.
முனிய சேர்வை இருந்தவரைக்கும் லார்ட் எர்ஸ்கின் திறந்துவைத்த போர்டு அப்பழுக்கின்றி இருந்திருக்கலாம். ரங்கராஜன் காலத்தில் எப்படி இருந்தது என்பது பற்றி விவரமில்லை.
ஆனால் இப்போது வெற்றிலை குதப்பல்களின் சிதறலுடன் காமா சோமா வென்று பெயிண்ட் அடிக்கப்பட்டு காரைகள் பெயர்ந்த ஸ்திதியில் பரிதாபமாக இருப்பதை அந்த லார்ட் எர்ஸ்கினோ அல்லது ரங்கராஜனோ விரும்பியிருக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment