Tuesday, March 23, 2021

ஓ...அமெரிக்கா - 19

 ஓ...அமெரிக்கா - 19 

சான் டியேகோவிலிருந்து சான்

ஃப்ரான்ஸிஸ்கோவுக்கு நாங்கள் சென்ற வழி scenic beachway என்று சொல்லப்பட்ட அழகான கடற்கரையோர சாலை. அங்கே மலையை ஒட்டிய கடல் அழகின் உச்சம். வழியில் புகழ்பெற்ற 34 கி.மீ. நீளமான Malibu Beach. ஒரு பக்கம் மலை, மறுபக்கம் ஆழம் அதிகமில்லாத நீண்ட shallow நீலக்கடல். 'கண்களை மூடினால் காட்சி மறைந்துவிடுமோ?' என்று தோன்றும் அளவுக்கு அழகு கொஞ்சியது. மறுபக்க மலையில் தங்க நகையில் பதித்த நவரத்னக் கற்கள்போல அங்கங்கே அழகழகான வீடுகள், வில்லாக்கள். பணக்காரர்களால் மட்டுமே குடியிருக்க முடியும் மலிபு பல ஹாலிவுட் நடிகர்களின் குடியிருப்பாக இருக்கிறது. கடற்கரையைத் தாண்டிச் செல்லும்போதே மனம் குதூகலித்தது. 'காணக் கண் கோடி வேண்டும்' என்பது அதைப் பொறுத்தவரையில் அட்சர சுத்தமான உண்மை. 

மற்றொன்று வழியில் ஒரு சின்ன டீ டூர் எடுத்து நாங்கள் சென்ற ஆக்ஸ்நார்ட் என்ற ஊர். ஸ்ட்ராபெர்ரி பழங்களின் உற்பத்திக்குப் பெயர் பெற்ற Oxnard, ஏக்கர், ஏக்கராக பழ சாகுபடி செய்கிறது. வெகு தூரத்திற்கு சாலையின் இருபுறமும் வெறும் வயல்களை மட்டுமே கொண்ட அந்த ஊரில் அப்போது பறித்த ஸ்ட்ராபெர்ரி, ஆஸ்பாரகஸ், ப்ளூ பெர்ரி, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை வகை காய், கனிகளை சாலை ஓரத்தில் கடைகளில் விற்பனையும் செய்கிறார்கள். புத்துணர்ச்சியும் தந்து, தாகத்தையும் தணித்த அந்தப் பழங்கள் வழிப்பயணத்தில் வயிற்றுக்கும் மிகுந்த இதத்தைத் தந்தது. சாகுபடியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுவது கூடுதல் செய்தி. 

சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் அமோக வளர்ச்சி 1848 கலிஃபோர்னியா கோல்ட் ரஷ் (California Gold Rush) எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்குப் பின்னோக்கி செல்கிறது. 1848 ல் James W Marshall என்பவர் முதல் முதல் கலிஃபோர்னியாவின் Sutters Mill என்ற இடத்தில் தங்கத்தைக் கண்டுபிடிக்க, ஏறக்குறைய 300,000 பேர் அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் கலிஃபோர்னியாவுக்குக் குடிபெயர, சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் மக்கள் தொகையும், அதைத் தொடர்ந்த முன்னேற்றங்களும் ஆரம்பம். 

சான் ஃப்ரான்ஸிஸ்கோ பழமை, புதுமை என இரு முகங்களைக் கொண்டிருப்பது அதன் பழமையான வரலாற்றைக் காட்டுகிறது. ஒருபுறம் பழமையான வீதிகளும், கட்டடங்களும். மறுபுறம் அதி நவீன வானுயர்ந்த ஸ்கை ஸ்க்ராப்பர்ஸ். 

நேரான சாலைகள் சான் ஃப்ரான்சிஸ்கோவில் அரிது. ஒன்று, கீழிருந்து மேலே, அல்லது மேலிருந்து கீழே என்பதுபோல ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ரோடுகள். ஏற்கனவே நாப்பா வாலியின் குறுகிய ஹேர்பின் பெண்டுகளில் ஒரு வழியான என் மகள், இங்கே ஏறியும், இறங்கியும் இன்னொரு வழியானாள். அதிலும் ஒரு ஏறுமுகமான சாலையின் முடிவில் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கெரிய, எங்கள் கார் ஏறக்குறைய தொங்கிக்கொண்டு இருந்ததைப்போல நின்றது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. பின்னால் அதேபோல நின்றுகொண்டிருந்த கார்களைத் திரும்பிப் பார்க்க எனக்குத் துணிவில்லை. நான் என் மகளிடம் "இந்த ட்ரிப் முடியும்போது நீ கார் ட்ரைவிங்கில் எக்ஸ்பெர்ட் ஆயிடுவேம்மா" என்று புன்னகைத்தேன்.

வேறென்ன சொல்வது? 

அடுத்து நாங்கள் சென்றது சான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் சான் ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாவில் இருக்கும் 22  ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆல்கட்ரஸ் தீவில் இருக்கும் சிறைச்சாலைக்கு. இதற்கு செல்வதற்கு பியர் 33 (Pier 33) என்று சொல்லப்படும் விசைப்படகுத் துறையிலிருந்து விசைப்படகில் செல்ல வேண்டும். 

Pier 33 ஐ நாங்கள் அடைந்தபோது வெயிலும், குளிர் காற்றுமாக வித்தியாசமான தட்பவெப்பம் நிலவியது. 

நாங்கள் போட்டில் சென்றுகொண்டிருந்தபோதே வேகமான நீரோட்டத்தின் காரணமாக அவ்வளவு பெரிய படகே அவ்வப்போது ஆட்டம் கண்டது. அடிக்கடி மேலும், கீழும் ஏறியிறங்கிய படகில் சறுக்கு மரம்போல வழுக்காமல் இருக்கத் தூண்கள்போல அங்கங்கே இருந்த மரச் சட்டங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த அதிகப்படியான நீரோட்டமும், உறைய வைக்கும் குளிர்ந்த நீரும் சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதைக் குறைத்ததாகக் கேள்வி. கடல்போல அலைகள் ஏறி ஏறி இறங்கியதை அருகில் பார்க்க முடிந்தது. 

தீவில் போய் இறங்கியதும் ஒரு நீளமான குறுகிய நுழைவுப்பகுதியில் வரிசையில் ஒவ்வொருவராக நுழைந்தோம். அது ஒரு ப்ரம்மாண்டமான மிலிட்டரி மற்றும் ஃபெடரல் சிறைச்சாலை. ஆனால் இப்போது உபயோகத்தில் இல்லை. அதில் நுழைவு வாசல் (மெட்டல் டிடெக்டர்களுடன்), ஆயுத அறை, லைப்ரரி, கைதிகளை சந்திக்கும் விசிட்டிங் அறை, கைதிகள் தங்கும் அறைகள், மருத்துவமனை, முடி திருத்தகம், சமையலறை, சாப்பிடும் அறைகள் மற்றும் கலங்கரை விளக்கம் இருக்கின்றன. சுற்றிலும் அரண்போன்ற சுற்றுச்சுவரைக் கொண்ட ஆல்கட்ரஸ் சிறைச்சாலையின் சுவர்களை அழகான மலர்க்கொடிகள் அலங்கரித்து, அது ஒரு சிறைச்சாலை இல்லைபோலத் தோற்றம் தருகிறது. 

அறைகளில் படுக்கை, மேஜை, வாஷ் பேஸின், டாய்லெட் இருக்கின்றன. கைதிகள் தங்கும் அறைகள் இருக்கும் A, B, C, D என்ற நான்கு ப்ளாக்குகளில் D ப்ளாக் கடுமையான கைதிகளுக்காகவும், The Hole என்று அழைக்கப்படும் அதன் கடைசி ஆறு அறைகள் மோசமாக நடந்துகொள்ளும் கைதிகள் தங்கவும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை தரவும் உபயோகப்படுத்தப்பட்டன. அதன் நீண்ட தாழ்வாரங்கள் அமெரிக்காவின் மிகப் பிரபலமான ப்ராட்வே, மிச்சிகன் அவென்யூ போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டன. 

ஆனாலும் இப்பேர்ப்பட்ட சிறைச்சாலையில் இருந்தும் கடந்த 29 ஆண்டுகளில் 14 முயற்சிகளில் 36 பேர் தப்பிச்சென்று, பின் பிடிபட்டும், கொல்லப்பட்டும், இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் தேடப்படுபவர்களாகவும் இருப்பதும் ஆச்சரியமே. Escape from Alcatraz என்ற 1979 க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த ஆங்கிலத் திரைப்படம் இந்த சிறைச்சாலைத் தப்புதலை மிகச் சரியாகக் காட்டும் என்று நம்புகிறேன். நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் ஒரு விமரிசனம் எழுத விருப்பம். 

ஒரு சிறைச்சாலை உண்மையிலேயே எப்படி இருக்கும் என்று சிறைச்சாலைகளை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவதுண்டு. அதனால் ஆல்கட்ரஸ் உள்ளே நுழைந்தவுடன் எனக்கு mixed feelings வந்தது. அங்கிருந்து வெளியே வரும் வரைக்கும், ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருந்த எனக்கே ஒரு அசௌகரியமான உணர்வு இருந்துகொண்டே இருந்தது. உண்மையிலேயே கைதிகளாக இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்குமோ? 

Ancila Fernando

படங்கள்

மலிபு பீச் (இன்டர்நெட்டிலிருந்து

பியர் 33

ஆல்கட்ரஸ் 

சான் ப்ரான்சிஸ்கோவிலிருந்துசான் ஃப்ரான்சிஸ்கோ ஆல்கட்ரஸிலிருந்த

ஆல்கட்ரஸ் சிறைச்சாலை






No comments:

Post a Comment