Thursday, March 25, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −28

 (தெரிந்து கொள்ளலாமா?..)


தர்ம சாஸ்திரம் பகுதி −28

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)


401. பிறப்பு இறப்புத் தீட்டுகளின்போது பூஜையறையில் நுழைவதையும், பூஜைக்குரிய சாமான்களைத் தொடுவதையும், கோயிலுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

402. குத்து விளக்குப் பூஜை, ஹோமம், ஹிரண்ய ஸ்ரார்த்தம், பித்ரு தர்ப்பணம் போன்றவற்றைச் செய்யும்போது கிழக்குமுகம் நோக்கியே அமர வேண்டும். மற்ற திசைகளை நோக்கி அமர்வது கூடாது.

403. பூஜை, ஜபம், ஹோமம், வைதீக காரியங்கள் ஆகியவற்றைச் செய்யும்போது வெற்றுத்தரையில் அமர்தல் கூடாது.

பாய், மரப்பலகை, தூய்மையான வஸ்திரம், கம்பளித்துணி, தர்ப்பாஸனம் ஆகியவற்றின் மீது அமர்ந்தே இவற்றைச் செய்ய வேண்டும்.

404. சாப்பிடுவதற்கு உபயோகப்படுத்துகின்ற தட்டுகளில் பூஜைக்கான சாமான்களை வைக்கக்கூடாது.

405. பூஜைக்கான சந்தனம், குங்குமம், ஜலம், பால், பூக்கள் இவற்றின்மீது தவறுதலாக நகம், வியர்வை, கண்ணீர் ஆகியவை பட்டுவிட்டால், அவற்றைச் சுத்திகரிப்பதற்கு, அதன்மேல் நீரைத் தெளித்து பிறகே உபயோகிக்க வேண்டும்.

406. பூஜைகளைச் செய்யும்போது, இடையிடையே தாக சாந்திக்காக, கடைகளிலிருந்து வாங்கிய பானங்களைப் பருகக்கூடாது.

407. கோபூஜை செய்யும்பொழுது தாய்ப்பசுவுடன் கன்றுக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். கன்றை ஒதுக்கிவிட்டு, தாய்ப்பசுவிற்கு மட்டும் பூஜை செய்யக்கூடாது.

408. வரலக்ஷ்மி பூஜையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்வதாயின், தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

ஒரே கலசத்தில் அனைவரும் ஆவாஹனம் செய்யக்கூடாது. ஆனால், அனைவரும் அர்ச்சனையை ஒரு கலசத்திற்கு மட்டும் செய்தால் போதுமானது.

409. ஸ்தோத்திர புத்தகங்கள், பாராயண புத்தகங்கள் ஆகியவற்றை மடியிலோ, கையிலோ வைத்துக் கொள்ளக்கூடாது.

அவற்றை ஒரு மரப்பலகையில் வைத்துப் பாராயணம் செய்தால்மட்டுமே, முழுப்பலனையும் அடையமுடியும்.

410. காயத்திரி மந்திரத்தை இசைவடிவிலோ, C.D./cassette மூலமாகவோ கேட்கக் கூடாது.

குருமுகமாக உபதேசம் பெற்ற பிறகு, காயத்ரி மந்திரமானது ஜபிக்கப்பட வேண்டும். வேறு எந்த முறையில் கேட்பதும் தகாத செயலாகும்.

411. ஆவணிஅவிட்டத்தன்று கோஷ்டியாக உபாகர்மம் செய்தாலும், இடமின்மையைக் காரணம்காட்டி தெற்கு/மேற்கு திசைகளை நோக்கி அமரக்கூடாது.

412. மங்கள ஹோமங்களை, மேற்கூரை இல்லாத வெற்றுவெளியில் செய்யக்கூடாது.

413. சண்டி ஹோமம் உட்பட எந்தவிதமான சாத்வீக ஹோமங்களையும் இரவு ஒன்பது மணியைக் கடந்து செய்யக்கூடாது.

414. ஹோமம் செய்யும்பொழுது, நெய்பாத்திரத்தை, ஹோமகுண்டத்தைச் சுற்றிலுமுள்ள தர்ப்பையின் மீதோ, அதற்கு உட்புறமாகவோ வைக்கக்கூடாது. அதைத் தாண்டியே நெய்பாத்திரத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

415. வீட்டில் செய்கின்ற ஹோமங்களில் கருப்பு எள்ளைக் கலக்கக்கூடாது. ஆனால், கோஷ்டியாகச் செய்கின்ற ஹோமங்களில் கருப்பு எள்ளைப் பயன்படுத்துவதால் தவறில்லை.

(வளரும்..)

No comments:

Post a Comment