Thursday, March 11, 2021

மாலதி டீச்சர்

 2. மாலதி டீச்சர் (சிசீ6) #ganeshamarkalaam

அன்னைக்குப் பூரா மூட் அவுட். எனக்கு இருந்த ஒரே பொழுது போக்கு டிவி. அது கெட்டுப் போச்சு. நேத்து ராத்திரி தூக்கமே வரலை. இன்னைக்கு கிளாஸ் எடுக்கலாம்னு வந்தா இந்த ஸ்டூடென்ட்ஸ் இத்தனை அன்ரூலியா.

சின்னக் குழந்தைகளா என்ன? செல்லம்மாளில் படிக்கும் யுவதிகள். ஆட்டம் போடரதுகள். கெமிஸ்ட்ரி லேபுக்கு சொல்லித் தந்துட்டு போர்டில் ஃபார்முலா எழுதி காபி பண்ணிக்கச் சொல்ரேன், மணி அடிச்சது. என்னமோ ஃபயர் ட்ரில் மாதிரி எழுந்து ஓடித்துகள். ஃபார்முலாவை யாரும் எழுதிக்கலை. சுகன்யாவும் சாந்தியும் கையக் கோத்துண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சுண்டு. கிளாஸ் நடக்கரப்போவே ஒண்ணுமில்லாத்துக்கு சிரிக்கும்கள். கேட்டா ஒண்ணுமில்லை மிஸ் னுட்டு கையால் வாய மூட்டிண்டு சிரிப்பா. நான்தான் புடவை விலகித்தோ, ரவிக்கையில் கிழிசலோன்னு சரி செஞ்சுப்பேன். “நில்லுடீ சுகன்யா!”

அதட்டினதும் நின்னா. “உன்னையா நிக்கச் சொன்னேன்?” சாந்தியை முறைக்க அவள் சுகன்யா பிடிச்சிண்டிருந்த கைய விலக்கிண்டு கிளாஸ் வெளீலே நின்னுக்கரா. இதுகள் இப்படி ஈஷிண்டே சுத்தரதுகளே “அதுகளா” இருக்குமோ! கூட வேலை பாக்கும் சோஷியல் ஸ்டடீஸ் மிஸ் கிட்டே சொன்னேன். “இதெல்லாம் இப்ப சகஜம் கண்டுக்காதே”.

“சுகன்யா! வாட் இஸ் திஸ், லிப்ஸ்டிக் போட்டுண்டு வந்தா எனக்கு பிடிக்காதுன்னு தெரியாதா? வைப் இட் அவே!” கர்சீப்பால் துடெச்சிண்டே போரா. போரப்போ புஸ்த்தகங்களை கஸ்கத்தில் இடுக்கிண்டு ஹேண்ட்பேக்கை தொறப்பது தெரியரது. ஸ்டிக்கை எடுத்து புதுசா இட்டுக்கப் போரான்னும் என்னால் ஒண்ணும் செய்ய முடியாதுன்னும் தோணித்து.

இருக்கும் டிப்ரெஷணில் கடுப்பும் கலந்துட மூட் அவுட். மணி 1230, சாயங்காலம் ஒரு பிரியட். 3 மணிக்கு. யாரையாவது எடுக்கச் சொல்லிட்டு ஆத்துக்கு கிளம்பிடலாம்னு தோணவே கரஸ்கிட்டே சொல்லீட்டு கிளம்பிட்டேன். பார்க்கிங்கில் நிறுத்தி வச்ச ஸ்கூட்டரை ஓங்கி உதெச்சதும் கிளம்பித்து. இல்லைன்னா அதுக்கு வேற மனசு அல்லல்படும். மெக்கெனிக் பக்கத்தில் இல்லை, 2கிமீ. தள்ளிண்டு வெய்யலில். இல்லை அந்த குணசேகர், லேப் அஸிஸ்டென்டை கூப்பிட்டு உதவி கேக்கணும். செய்வன். ஆனா பாக்கர பார்வையே சரியில்லை. இவனை மாதிரி ஆட்களை லெடீஸ் காலேஜில் வேலைக்கே வைக்கப் பிடாது. கண்ணை மேயவிட்டுண்டு.

ஆத்துக்கு வந்ததும் 3 மணிக்கு ஸ்கூல் விட்டு வந்த என் 14 வயசுப் பையன் ராம் “என்னம்மா பூட்டத் தொறந்துண்டு போணம்னு வந்தா கதவு தொறந்திருக்கு?” வந்தவன் கை கால் அலம்பிண்டு ஃப்ரிட்ஜில் இருந்த ஆப்பிளை எடுத்து கடிச்சிண்டே மாடி ரூமுக்குப் போயிட்டன். அடுத்த வாரம் பரீக்ஷை. பொறுப்பா படிப்பன். சொல்லேண்டாம். ஆனா இவன் அப்பாவுக்குத்தான் எல்லாத்தையும் சொல்லி விளங்க வைக்கணும்.

குமார் LICலே நல்ல வேலையில். கல்யாணம் ஆன புதிசில் ஆசையாத்தான் பழகினர். சட்டுன்னு பிள்ளையாண்டுட்டேன். எங்கம்மாக்கு எனக்கு நிச்சயம் ஆனதுமே நான் இவரோட சல்லாபமாடி கல்யாணத்தன்னைக்கே கர்பமா இருந்தேனோனு சந்தேகம். அத்தனை சீக்கிரம் உண்டானது யாருக்கும் பிடிக்கலையோ? அக்டோபரில் நிச்சயம். கார்த்தி மாசம் சத்திரம் ஆம்படலைன்னு தையில் வச்சுக்கலாம்னு இவாத்தில் கேக்க இவர்தான் “அப்படியே செய்யலாம், எங்களுக்கு லவ் மேரேஜ்னு சொல்லிக்கராப்போல் இடைப்பட்ட காலத்தில் பழகுவோம்.” எனக்கும் சேர்த்து சொல்லிட்டர். “ஏன் அப்படிச் சொன்னேள்? சீக்கிரம் கல்யாணம் நடந்தா நல்லதுதானே?” “அவசரம் ஏதுக்கு? ஒருத்தரை ஒருத்தர் நன்னா புரிஞ்சிக்க இது நல்ல சந்தர்ப்பம்.” சமாதானப் படுத்தினர்.

எங்கம்மாவுக்கு இதில் சுத்தமா இஷ்டமில்லை. பழகரேன்னு எதாவது ஆச்சுன்னா? ஒரே ஊர் வேற. பழகி புரிஞ்சிண்டு பிடிக்காமப் பொச்சுன்னா? இப்படி நின்னு போன கல்யாணங்கள் உண்டு. அவள் கவலை அவளுக்கு. அப்பா, “அவாத்தில் விருப்பப்படரா, நாம ஏன் நொட்டு சொல்லிண்டு!” அடக்கினர்.

நான் செல்லம்மாளில் டீச்சர். ஜாகை அடையார். பஸ் பிடிச்சா நேர வந்து விட்டுடுவான். சாயங்காலம் நேர அடையார். இவாம் நங்கநல்லூர். ஆபீஸ் போரச்சே காலேஜ் வழியாத்தான் போணம். கரெக்டா சொன்ன டயத்துக்கு காலேஜ் வாசலில் ஸ்கூட்டரை ஆஃப் செஞ்சிட்டு நிப்பர். அந்தண்டை பக்கம் இறங்கி ரோட்டை கிராஸ் செஞ்சு வரத்தை பாத்துண்டே நிப்பர். இந்தண்டை சௌக்கியமா வந்ததும் ஒரு மந்தஹாஸ புன்னகை கொடுப்பர். காதல் கொப்பளிக்கராப்போல் அந்த வயசில் பட்டது. நடையை வேகப்படுத்தி கிட்டத்தட்ட ஒடி வருவேன். இவரோட நின்னிண்டு பேசிட்டுப் போனாத்தான் அன்னிப்போது நன்னா போகும். எனக்கும் கிளாஸுக்கு நாழியாகிடும் அவருக்கும் இன்னும் 6 சிக்னல் தாண்டி வொயிட்ஸ் ரோடில் ஆபீஸுக்குப் போணம்.

ஒருநா “ரெண்டு பெரும் லீவு போட்டுட்டு ஏதாவது மாலில், மல்டிப்ளெக்ஸில் கடற்கரை சாலையில் போலாமா?” “அப்பாகிட்டே கேட்டுச் சொல்ரேன்!” நெத்திக் கண்ணை காட்டினர். “இதையே உன் ஸ்டூடென்ட் யாரண்டையாவது கேட்டிருந்தேன்னா இப்பவே போலாம்னு ஸ்கூட்டரில் ஏறிப்பாளுவ, நீயும் இருக்கயே!” தலைலே அடிச்சிண்டு கிளம்பிப் போனர். அதுக்கப்புரம் அப்படிக் கேக்கவேயில்லை.

இதெல்லாம் ஏன் இன்னைக்கு நினைவுக்கு வரணும்? காரணம் இருக்கு. இன்னைக்கு நான் இவரை முதல் முதல் சந்திச்ச நாள். பொண் பாக்க வந்தாரே அந்த நாளான்னா இல்லை. ஜாதகம் பொருந்தித்துன்னதும் அப்பாவுக்கு இந்த வரன்தான் திகையும்னு தோணவே பொண் பாக்க அழைக்கலாம்னு. அதுக்கு மின்னாடி “என் போண் மாப்பிள்ளைய பாத்துடணும், அவளுக்கு பிடிச்சிருந்தா மட்டுமே அவாலை ஆத்துக்குள் விடணும்”. “அதெப்படி சாத்தியம்?” அம்மாவுக்கு. செஞ்சு காட்டரேன்னுட்டு செஞ்சர்.

ஒருநா மத்தியானம் லன்ச் ப்ரேக்கில் வந்து நேர LIC ஆபீஸுக்கு அழைச்சிண்டு போயிட்டர். மின்னமே குமார் எந்த ஃப்ளோர்லேனும் அங்கே இன்னொருத்தரைப் பாக்கப் போராப்போல் பாஸ் போட்டுண்டு போயாச்சு. கூடவே நான் கொயட்டா இவர் பின்னாடி. நாங்க பாக்கப் போனவர் குமார் உக்காந்திருந்த கேபினுக்கு வெளீலே நாலு டேபிள் தள்ளி. அங்கேந்து எனக்கு கண்ணக் காமிச்சு “அதுதான் வரன், நன்னா பாத்துக்கோ ஆத்துக்கு வந்துட்டு பிடிச்சிருந்தா சொல்லு”. வந்தவரிடம் அதையும் இதையும் பெசிட்டு அடுத்த வாரம் வரம்னுட்டு கிளம்பிட்டம். பில்டிங்க் விட்டு வெளீலே வரலை எனக்கு பிடிச்சிருக்குன்னுட்டேன். எதுக்கு ஆத்துக்குப் போய் சொல்லணும்? குமார் அத்தனை அழகு, கம்பீரம்.

நிச்சயம் பண்ணிண்டா. அப்புரம் பஸ் ஸ்டாப்புன்னு அது நீண்டுண்டே போனாலும் டயம் போனதே தெரியலை. கல்யாணம் மட்டும் ரெம்ப தள்ளீ வச்சுட்டான்னு தோணரா மாதிரி இவர் நடந்துப்பர்.

மொதராத்திரி அன்னைக்கு ரெண்டு பேருக்கும் நடூலே ஒளிவு மறைவு பிடாதுன்னு இவர் சொல்ல “அப்படீன்னா நான் ஒண்ணு உங்களண்டை சொல்லியே ஆணம்!” இவர் முகம் வெளிறிப்போக – “அடடே! அப்படியெல்லாம் பயப்படரா மாதிரி ஒண்ணும் இல்லை, சொல்ல வந்தது என்னன்னா, நான் உங்களை நீங்க பொண் பாக்க வரத்துக்குள்ளேயே நேரில் பாத்துட்டேன், அதை சொல்ல வந்தேன்”. “அப்படியா எப்போ?” விவரம் சொல்ல ஆச்சர்யத்தில் இவர் திக்குமுக்காடிப் போக, அன்னைக்கு ராத்திரி பல ராத்த்ரிகளாப் போனது ஆச்சர்யமே இல்லை. அதுதானோ என்னமோ உடனே டாண்னு உண்டாகி அம்மாவை சந்தேகப்பட வச்சேன்னு வச்சுக்கலாம்

குமாரை போனில் கூப்பிட்டேன். “இன்னைக்கு நான் உங்களை மொத மொதலா பாத்த நாள். கொண்டாடணும். 5 மணிக்கு போய் கேக் வாங்கிண்டு வரேன். நீங்க சீக்கிரம் வந்துடுங்கோ, ஃப்ரைட் ரைஸ், கத்திரிக்கா கொஸ்து, ரயித்தா, சலாட் லிஜ்ஜத் பாப்பட் எல்லாம் செஞ்சு வைக்கரேன்”. கார்த்தாலே அப்படி நொந்து போனவள் இப்போ டிவி கெட்டுப் போயிருப்பதை மறந்து பட்டாம்பூச்சியா சிறகடிச்சிண்டு பரபரன்னு சமையலை கவனிக்கலாம்னு கிளம்பிட்டாய்னா அது அப்படித்தான். பெண் மனசு இப்படித்தான். துக்கத்துலேந்து சங்கடத்துலேந்து டயமெட்ரிகலி ஆப்போஸிட் மூடுக்கு மாற பெரீசா ஒண்ணும் தேவைப்படாது. குடும்பமும் கணவரும் சட்டுன்னு பிடிச்சுக்க ஒரு பிடிமானமா அதுவும் இன்னைக்கு ஸ்பெஷல் என்பதுவும் மூடை மாத்த போதாதா!

ஆனா பாருங்கோ எல்லா வேலையையும் முடிச்சிண்டு அக்கடான்னு 7 மணிக்கு இவர் வர டயமாச்சுன்னு உக்காந்துக்கரச்சே இவர் போன். “மாலதி, ஆபீஸில் கொஞ்சம் வேலை வந்துடுத்து, அவசரமா ஜோனல் மேனேஜர் மீட்டிங்க் கூப்டுட்டான், எப்படியும் 830க்குள் வந்துடுவேன், காக்கேண்டாம் கேட்டியா? நீயும் குழந்தையும் சாப்டுடுங்கோ. நான் வந்து மெதுவா சாப்டுக்கரேன்”. பானை உடைஞ்சு உறை குத்தின மோரெல்லாம் கொட்டீட்டாப்போல் தோணித்து. பையனை சாப்பிடவச்சு அவனுக்கு மத்தாநா ஸ்கூலுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு நானும் ஏனோதானோன்னு கொரிச்சுட்டு கேக்கை எடுத்து ஃப்ரீஜரில் வச்சுட்டு வந்து வாசப்படீலெ உக்காந்துக்கரேன்.

குழந்தையும் வரான். பக்கத்தில் ஒட்டினாப்போல் உக்காந்துண்டு தன் கையை என் கைக்குள் விட்டு பிடிச்சிண்டு அண்ணாந்து என்னைப் பாக்கரான். “அம்மா, கிளாஸில் என் ஃப்ரெண்ட் ரம்யா இப்படித்தான் எங்கிட்டே அப்பப்போ வந்து உக்காந்துக்கரா. தள்ளீ உக்காருடீங்கரேன், கோவிச்சுக்கரா”. ‘அட’ன்னு தோணித்து. “உன்னைவிட நன்னா படிப்பாளாடா? எத்தனியாவது ரேங்க்?” “படிப்பு கம்மிதான். ஆனா அழகா இருப்பா!” இந்த வயசில் அழகைப் பத்தி என்ன புரிதல் இருக்கும் இவனுக்கு? ஆனா இருப்பதுனாலேதானே பெசரான். அம்மா கிட்டே தயங்காம சொல்லணும்னு. நான் என்னத்தை சொல்ல? “ஆசையா பழகரவாகிட்டே நீயும் ஆசையா பழகு, தப்பில்லை”. சொன்னதும் புரிஞ்சிண்டான். தூங்கப் போரேன்னுட்டு போனான்.

இவர் வரப்போ மணி 930. ஒண்ணும் பேசாம சாப்டர். என்கூட வந்து படுத்துண்டர். கேஸ் சிலிண்டரை மூடினோமான்னு டவுட் வர “இதோ வரேன்”னுட்டு அடுக்களைக்கு வந்து செக் செஞ்சுட்டு திரும்ப வரத்துக்குள் தூங்கியாச்சு. கார்த்தாலே 530க்கு எழுந்துண்டு “குட் மார்னிங்க்” அப்படீங்கரர். “உம்”முன்னு சத்தம் வச்சேன். மிந்தய ராத்திரி எதிர்பாத்தபடி குட்டா அமையாதப்போ மத்தாநா மார்னிங்க் குட்டா இருந்தா என்ன பேடாப் போனா என்னன்னு கேட்டிருக்கணும். கேக்கலை.

எப்பவும்போல் கிளம்பி காலேஜுக்கு வந்தாச்சு. இந்த 18 வருஷத்தில் காலேஜுக்குள் இருக்கச்சே ஒண்ணு கவனிச்சிருக்கேன். வித்யாசமான உலகம். இங்கே இருக்கப்போ வெளி உலகம் மறக்கடிச்சுடும். இன்னைக்கும் கெமிஸ்ட்ரி கிளாஸ். எல்லாரும் வந்துட்டா. அந்த சுகன்யாவையும் சாந்தியையும் காணலை. கிளாஸ் ஆரம்பிச்சுடலாம்னு திரும்பரச்சே ஓடி வரதுகள். கையக் கோத்துண்டு. “சாரி மிஸ், ரோட்டைக் கிராஸ் செய்ய முடியலை, டிரேஃபிக் ஜாஸ்த்தி”. லேம் எக்ஸ்யூஸ். நேத்து எழுதி வச்ச ஃபார்முலா இன்னும் போர்டில். “கிடுகிடுன்னு அழிக்கரத்துக்குள் காபி செய்யணும்.” அதட்டல் போட்டேன். குழந்தைகளை ஏன் அதட்டணும்? தப்பு செய்யரோம்னு பட்டது. இன்னைக்கு என்னவோ இவாள்லாம் அத்தனை அன்ரூலியா இல்லையோன்னும் தோணித்து. நேத்தும் அவா பண்ணினதைவிட என் மனசுக்குள் இருந்த அலப்பரையே ஜாஸ்தியோ? ஆமாம்னு இன்னைக்கு புரிஞ்சது.

கிளாஸ் முடிஞ்சு எல்லாரும் கிளம்பிப் போரா. சுகன்யாவும் சாந்தியும் கடைசீயா கை கோத்துண்டு. என்னைப் பாத்துண்டே! நிக்கச் சொல்லுவேன்னும் கூப்பிட்டு வச்சு திட்டுவேனும்னு எதிர்பாத்துண்டு. செஞ்சா செய்யட்டும்னு ஒரு ஏட்டிட்யுட். லெட் அஸ் பேம்பர் திஸ் மிடிள் ஏஜட் டீச்சர்! “நில்லுங்கோ!” என்னை அறியாம வார்த்தை வெளீலே வந்துடுத்து. நிக்கரா.

இன்னைக்கு சுகன்யாவை லிப்ஸ்டிக் அடிச்சிண்டுதுக்கு திட்டலை. “டீ, உன் லிப் ஷேட் நன்னா இருக்கு. யூ லுக் ஸ்வீட். எஞ்சாய்!” ஆச்சர்யத்தோட டீச்சருக்கு மறை கழண்டுடுத்தோன்னு நினைச்சிண்டே திரும்பித் திரும்பி பாத்துண்டே போச்சுதுகள்.

இந்த வயசில் சந்தோஷமா இருந்துக்கட்டும். பின்னாடி எத்தனை ஏமாற்றங்கள் அவாளுக்கும் காத்திண்டிருக்குமோ!

No comments:

Post a Comment