! விவேகானந்தரை வியக்க வைத்த சோமசுந்தர நாயகர் !!
*தமிழ் படிக்காமல் இருந்துவிட்டேனே என்று கண்கலங்கிய விவேகானந்தர்
*உங்களைப் போன்று 100 தமிழர்கள்(மதராஸிகள்) என்னிடம் இருந்தால் உலகையே மாற்றிக்காட்டுவேன் என்று கூறிய விவேகானந்தர்.
பாம்பன் சுவாமிகள் வழிவந்த சற்குரு முத்துக்குமரகுரு சாமிகளின் உரையிலிருந்து(முழு உரை ஒளிப்பதிவு முதல் கருத்திடலில்)
"அண்மையிலே இந்துமதத்தின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய உத்தமர் வீரத்துறவி விவேகானந்த சாமிகள்.
அவர் உலக அரங்கில் செல்வதற்கு பெரிதும் காரணமாக இருந்தது தமிழகம்;தமிழ்ப் பாரம்பரியம்.
மார்தட்டிக்கொள்ளலாம்.இன்னும் சரியாகச் சொல்லப்போனால் தமிழ் மரபு.அதில் பெரும்பாலும் பங்கு கொண்டவர் சேதுபதி ராஜா.
சேதுபதியின் குலகுருவாக விளங்கியவர் சைவ சமய சண்டமாருதம் சோமசுந்தர நாயகர்.வடமொழி,தென்மொழி என்ற இரண்டு கடலையும் குடித்து எழுந்த ஞானமேகம்.அவருக்கு ஆங்கிலம் தெரியாது.
சேதுபதி ராஜா விவேகானந்தர் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்தவுடனே விவேகானந்தரையும் சோமசுந்தர நாயக்கரையும் ஒருசேரவைத்து அவர்கள் பேசுகின்றபோது பக்கத்திலிருந்து தான் இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்று கருதுகிறார்.
அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.இவரே மொழிபெயர்ப்பாளராக அமைகின்றார்.ஏனென்றால் விவேகானந்தருக்குத் தமிழ் தெரியாது.ஒரு சரியான நேரத்திலே பேச்சைத் தொடங்குகிறார்கள்.இது நடந்த நிகழ்ச்சி.
அறிமுகப்படுத்துகின்றபோது எம்முடைய குலகுருவாக விளங்கக்கூடிய சோமசுந்தர நாயகர் என்று விவேகானந்தருக்கும், விவேகானந்தரைக் குறித்து சோமசுந்தர நாயகருக்கும் சொன்ன பின்னர் இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொள்கின்றனர்.
விவேகானந்தர் கேட்டார், நீங்கள் எந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள்?
அவர் சொன்னார் நான் சைவசித்தாந்தத்தைப் பின்பற்றுகிறேன்.
அவர் கேட்டார் நீங்கள் என்ன கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள்.
நான் வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறேன்.
அப்பொழுது விவேகானந்தர், உங்களுடைய சைவசித்தாந்தத்தில் முடிந்த முடிபாக நீங்கள் சொல்லக்கூடிய கருத்து என்ன என்று கேட்டார்.
இவர் முப்பொருள் உண்மை என்று சொன்னார்.
அப்படியென்றால் என்ன என்று கேட்டார்.
பதி,பசு,பாசம்,---உலகு,உயிர்,இறைவன் என்று சொல்லக்கூடிய மூன்றும் நித்தியப் பொருள்கள் என்பது இந்தக் கொள்கை.
விவேகானந்தர் சொன்னார்,ஒருக்காலும் இருக்கமுடியாது.
அப்பொழுது சோமசுந்தர நாயக்கர் கேட்டார்,நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
இறைவன் ஒருவன்தான் உண்மைப் பொருள்.மற்றவையெல்லாம் உண்மை அல்ல என்பது எங்கள் வேதாந்தத்தின் முடிவான கருத்து.
பிரஹ்ம சத்யம்; ஜகன் மித்யா; ஜீவோ பிரஹ்மைவ நபர(பிரஹ்மத்தைக் காட்டிலும் தனித்து ஆத்மா என்று கிடையாது.)
பிரம்மம் ஒன்றுதான் என்றைக்கும் இருக்கக்கூடியது.இந்த உலகமானது இருப்பதைப்போல ஒரு தோற்றமளிக்கக்கூடிய பொருளேயன்றி உண்மையில் அப்படி இல்லை.
இந்த ஜீவன் என்று சொல்லக்கூடிய உயிர்கள் இறைவனுடைய பகுதிகளாக விளங்கிக்கொண்டிருக்கக்கூடியவையே தவிர இறைவனைவிட்டு வேறொன்றாக இருக்கக்கூடியவை இல்லை.அதனால் இருப்பது பிரம்மம் ஒன்றே.
அப்பொழுது இவர் சொன்னார்,இந்த உலகமானது வெறும் மாயத்தோற்றம் என்று சொன்னால் நாங்கள் அனுபவிக்கிறோமே. கற்பனையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை என்று விவாதம் எழுந்தது.
அப்பொழுது விவேகானந்த சுவாமிகள் மூன்று பொருள்கள் இருக்கின்றன என்று நீங்கள் நிரூபித்தால் நான் ஒத்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.
ஆஹா, தாராளமாக நிரூபிக்கிறேன்.
அப்பொழுது விவேகானந்தர்,நீங்கள் உங்கள் சாத்திர நூல்களை வைத்து உங்கள் கருத்துக்களை சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொன்னார்.
சரி வேண்டாம்.நீங்கள் சொல்லக்கூடியதை வைத்தே சொல்கிறேன்.
வேண்டாம்.நான் சொல்லக்கூடிய வேறுவேறு எல்லாவற்றையும் சொன்னால் நேரம் போதாது எனக்கு என்கிறார் விவேகானந்தர்.
வேண்டாம்.இப்பொழுது நீங்கள் சொன்னீர்களே,பிரஹ்ம சத்யம்; ஜகன் மித்யா; ஜீவோ பிரஹ்மைவ நபர.இதை வைத்துக்கொண்டே நான் என்னுடைய கொள்கையைச் சாதிக்கமுடியும் என்றார் சோமசுந்தர நாயகர்.
இதற்குப் பெரியநிலை வேண்டும்.வேண்டாம் என்றார் விவேகானந்தர்.
எனக்கு முதல் வார்த்தையே போதும் என்றார் சோமசுந்தர நாயகர்.
எங்கே சாதியுங்கள்.நீங்கள் உண்மை என்று நிரூபித்துவிட்டால் ஒத்துக்கொள்ளுகிறேன் என்றார் விவேகானந்தர்.
அப்பொழுது சோமசுந்தர நாயகர் விவேகானந்தரைப் பார்த்து, அந்த முதல் வார்த்தை இருக்கிறதே பிரம்மம் அதற்கு நேரடியான பொருள் என்ன என்று கேட்டார்.
அதற்கு பிரம்மம் என்றால் பெரியது என்று விவேகானந்தர் சொன்னார்.
அப்படியானால் நீங்கள் என்னுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டீர்கள்.முப்பொருள் உண்மையை ஒத்துக்கொண்டீர்கள் என்று பொருள் என்றார் சோமசுந்தர நாயகர்.
அப்பொழுது விவேகானந்தர், பிரம்மம் பெரிது என்று சொன்னால் பதி,பசு,பாசம் என்று மூன்று பொருள்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டேன் என்று எப்படி வரும் என்று கேட்டார்.
அப்பொழுது விளக்கினார் சோமசுந்தர நாயகர்.பிரம்மம் என்ற சொல்லுக்கு நீங்கள் சொன்ன அர்த்தம் பெரியது.
பெரியது என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றால் you have to make a comparative study.சிறியது என்று ஒன்று இருந்தால்தான் பெரியது என்று ஒன்று இருக்கமுடியும்.
சிறியது பெரியது என்று இரண்டு பொருள்கள் இருக்குமேயானால் அவைகள் இருப்பதற்கான ஒரு நிலைக்களம் வேண்டும்.
அப்பொழுது பெரியது என்பது பிரம்மம், சிறியது என்பது உயிர்கள் இவை இரண்டுக்குமான நிலைக்களம் உலகம்(பிரபஞ்சம்).
அப்ப உலகு,உயிர்,இறைவன் என்ற மூன்றையும் பறைசாற்றுகின்றது பிரம்மம் என்ற சொல் என்பதை விளக்கினார்.
விவேகானந்தர் இந்தப் பொருள் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார்.
சைவசித்தாந்தத்திலே சிவஞானபோதம் என்ற ஒரு நூல் இருக்கிறது.அது தமிழ் நூல் என்று சோமசுந்தர நாயக்கர் கூறினார்.
நான் இன்னும் தமிழைப் படிக்காமல் இருந்துவிட்டேனே என்று விவேகானந்தர் உண்மையிலேயே கண் கலங்கினார்.
அந்த நேரத்திலே விவேகானந்தர் சொன்னார், உங்களைப் போன்று நூறு மதராஸிகள் எனக்குக் கிடைப்பார்களேயானால் நான் இந்த உலகத்தை மாற்றிக்காட்டுவேன்.
நூறு மதராஸிகள் எனக்குக் கிடைப்பார்களேயானால் நான் இந்த உலகத்தை மாற்றிக்காட்டுவேன் என்று விவேகானந்தர் கூறியதை எல்லோரும் சொல்வார்கள்.
ஆனால் எந்தச் சந்தர்ப்பத்தில்,யாரை முன்வைத்து அதைக் கூறினார் என்பதை கூறாமல் விட்டுவிடுவார்கள்."
🌺ஜெய் சுவாமி ஜீ 🌺ஜெய் குரு தேவ்🌺
No comments:
Post a Comment