Saturday, March 20, 2021

ஓ...அமெரிக்கா - 17

 ஓ...அமெரிக்கா - 17 

San Diego Safari Park லிருந்து நாங்கள் Birch Aquarium சென்றோம். அங்கே திருக்கை உட்பட்ட மீன் வகைகள், வண்ண வண்ண ஆல்கே, sea urchins, விஷமுள்ள, ஆனால் கண்ணைக் கவரும் அழகான ஜெல்லி மீன் வகைகள், ஆமைகள், பல வகைகளில், அதுவரையில் கேள்விப்பட்டிராத, பார்த்திராத கடல் குதிரைகள் என்று திகட்டத் திகட்டக் காட்சிகள். அதுவரையில் ஒரே விதமான கடல் குதிரையை மட்டுமே பார்த்திருந்த எனக்கு வித விதமான, வித்தியாசமான, வண்ணமயமான, சிறகு முளைத்த வண்ணத்துப்பூச்சிபோன்ற கடல் குதிரை இனங்களைப் பார்த்து வியப்பு வந்தது. 

சில இடங்களில் நாம் கடந்து செல்லும் பாதைகளில் நம் தலைக்கு மேலும் கண்ணாடித் தடுப்புகளில் கடல் உயிரினங்கள் நீந்திக்கொண்டிருப்பது நமக்குக் கடலின் அடியில் இருப்பதுபோன்ற உணர்வைத் தருகிறது. உயரத்தில் இருக்கும் அக்வேரியத்துக்கு வெளியிலிருந்து கீழே அலையடிக்கும் கடலைப் பார்க்கும் கோணம் அழகானது. ரசனையானது. 

அடுத்து நாங்கள் சென்றது USS Midway Museum. அது கலிஃபோர்னியாவின் Navy Pier என்ற இடத்தில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்படை விமானத்தளம் கொண்ட Midway என்ற பிரம்மாண்டமான கப்பல். அங்கே தெற்குக் கலிஃபோர்னியாவில் கட்டமைக்கப்பட்ட பலவகையான விமானங்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இது ஒரு முழுமையான கடற்படைப் பொருட்காட்சியகம். மிதக்கும் ஏர்போர்ட். 

மிட்வே கப்பல் நீண்ட காலத்துக்கு, அதாவது 1945 லிருந்து 1992 வரை, செயலாக இருந்து 200,000 வரையான மாலுமிகளை ஏற்றிச் சென்றிருக்கிறது. கோல்ட் வார் முழுவதும், அதற்கப்புறமும் வேலை செய்திருக்கிறது. 2004 ல் ம்யூசியமாக்கப்பட்டது. இப்போதும் அங்கே கடற்படையில் பணி புரிபவர்களின் பணி மாறுதல், அதன் தொடர்பான அதிகாரம் கை மாறுதல், பணி ஏற்பவர்களின் சேர்க்கை, ஓய்வு பெறும் விழாக்கள் வருடம் முழுவதும் நடைபெறுகிறது. இதைத்தவிர மாணவர்களுக்கான களப் பயிற்சி, குழந்தைகளுக்கான இரவுப் பயிற்சி முகாம்கள் நடந்துகொண்டிருக்கின்றன. 

சிறிய ட்ரான்ஸிஸ்டர் போன்ற ஹெட் ஃபோன்ஸ் பொருத்தப்பட்ட ஆடியோ கருவியில் கப்பலின் பல பகுதிகளைப்பற்றிய விவரிப்புடன் நம் ஆடியோ ட்ரிப் ஆரம்பமாகிறது. மேலும் கீழுமாகப் பல தளங்கள் கொண்ட கப்பலில் விமான டெக்கில் புறப்படத் தயாராக இருக்கும் விமானங்கள், கேப்டன், அட்மிரல், பைலட்களின் அறைகளும், ஹாங்கர் டெக்கில் நங்கூரம் இடுவதும், பயணிகள் தூங்கும் அறைகளும், கீழ் டெக்கில் என்ஜின், லாண்டரி, நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கும் இடம், galley ம் உள்ளன. இதையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டே விவரங்களை நம் ஆடியோவில் கேட்டுக்கொண்டே செல்லலாம். 

நங்கூரம் இடும் பெரிய கனமான இரும்புச் சங்கிலிகள், ஆள் உயரக் குறுக்களவுகொண்ட கடற்படை எம்ப்ளம், இன்ஜின் அறையின் வர்ச்சுவல் இயக்கம் எல்லாம் என்னைக் கவர்ந்த விஷயங்கள். அங்கங்கே நிஜ ஆட்கள் போன்ற உருவப் பொம்மைகள் இப்போதும் கப்பல் இயக்கப்படுவதுபோன்ற பிரமையைத் தருகின்றன. கீழை இறங்கி வந்தால் நம் ஊர் பாண்டி பஜார் கடைகள்போல ப்ளாட்ஃபார்ம் கடைகளில் பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. 

அங்கிருந்து எங்கள் அடுத்த இடம் Beuna Park என்ற இடத்தில் ஏறக்குறைய 57 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் Knotts Berry Farm என்ற தீம் பார்க். அசப்பில் ஆங்கிலத் திரைப்படங்களில் நாம் பார்க்கும் ஒரு கௌபாய் வில்லேஜின் சாயலில் இருக்கும் அமெரிக்காவின் மிகப் பழமையான தீம் பார்க்குகளில் ஒன்றான இந்தத் தீம் பார்க், ஆரம்பத்தில் இதை சொந்தமாக வைத்திருந்த வால்டேர் நாட்ஸின் பெயரிலேயே தொடர்ந்து வருகிறது. ஃபிலடெல்பியாவின் இண்டிபெண்டன்ஸ் டவரின் நகல், பழைய நீராவி என்ஜின் ரயில், குகைகள் தவிர தீம் பார்க்கின் பிரத்தியேகமான நீர் விளையாட்டுகள் (இருண்ட குகைகளுக்குள் சுற்றிச் சுழன்றும், மேலும், கீழும் ஏறி இறங்கி அங்கங்கே கர்ண கடூர வில்லன்களைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும் துப்பாக்கி ஏந்திய மனிதப் பொம்மைகளின் நடுவிலும்) போதாதென்று, பயங்கரமான முடிச்சுகள் கொண்ட பிரம்மாண்டமான, வித விதமான ரோலர் கோஸ்டர்கள் வேறு. 

எனக்குத் திடீரென்று ரோலர் கோஸ்ட்டரில் செல்ல ஆசையும் வந்தது, அதன் சிக்கலான முடிச்சுகளையும், வானுயர நிமிர்ந்த உயரத்தையும் பார்த்துப் பயமும் வந்தது. ஆனாலும் 'it is now or never' என்று எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டு, ஒன்றுக்கு இரண்டு முறை என் களேபர முகத்தைப் பார்த்து "வரப் போறீங்களா?" என்று சந்தேகமாகக் கேட்ட மகளிடம் "ஆமாம்" என்று கூறிக் கிளம்பிவிட்டேன். ஏறி உட்கார்ந்து கிளம்பிப் போன இரண்டாவது நிமிடம் ரோலர் கோஸ்ட்டர் மேலே, கீழே, பக்கவாட்டில் என்று தலை தெறிக்க ஓட நான் பயத்தில் கண்களை மூடிக்கொண்டேன். கொஞ்சம் வேகம் குறைந்தபோதுதான் மீண்டும் கண்களைத் திறந்தேன். அது நின்று இறங்கி வரும்போதுதான் பார்க்கிறேன், அங்கங்கே பொருத்தப்பட்ட காமிராக்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதற்குள் டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். Of course, நான் பயத்தில் வெளிறிய முகத்துடன், கண்களை மூடிக்கொண்டு. மற்ற மூவரும் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். 

அங்கே சிலர் அந்தக் காலத்துக் குதிரை வண்டிகளில் சவாரி செய்துகொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கென்றே பெயர் பெற்ற பாய்சன் பெர்ரி மற்றும் இதர பெர்ரிகளின் சாறுகள், சாக்லேட்டுகள், குக்கீஸ் விற்பனை ஒரு பக்கம். அவரவர் குடும்பப் பெயர் பொறித்த மர வேலைப்பாடுகள் கொண்ட வீட்டின் பெயர்ப் பலகைகள், மரத்தால் ஆன பழமையான வீட்டு உபயோகப் பொருட்கள் என்று விற்பனை செய்யும் கடைகள் இன்னொரு பக்கம். 

பார்க்கும் இடங்களிலெல்லாம் மரத்தாலான அமைப்புகளுடன் அப்படியே பழங்கால கௌபாய் கிராமத்தில் இருக்கும் உணர்வைத் தந்த Knotts Berry Farm ஒரு வித்தியாசமான இடம். திடீரென்று எங்கிருந்தாவது கௌபாய்ஸ் சீறிப் பாய்ந்து வரும் குதிரைகளில், வெடிக்கும் துப்பாக்கிகளுடன், தோல் உடைகளில், தொப்பியுடன் ஒருவரையொருவர் விரட்டிக்கொண்டு எங்கள் நடுவில் தோன்றுவார்கள் என்றே எனக்கு அங்கே இருக்கும் வரைக்கும் தோன்றிக்கொண்டிருந்தது. 

Ancila Fernando


Pictures :


1 and 2 : The beautiful San Diego city

3 - 10    :  Birch Aquarium

11 - 15  :  USS Midway Museum

16 - 20  :  Knott's Berry Farm




No comments:

Post a Comment