Saturday, March 20, 2021

மூன்றாவது வரம் - சுஜாதா

 மூன்றாவது வரம் - சுஜாதா 

(அவருடைய சிசி கதைகள் புத்தகத்திலிருந்து)

அலாவுதீன் அற்புத விளக்கு பழைய ஜாடியைத் திறந்தால் வரும் பூதம். இந்த ஜீனி (Genie) பற்றி நிறைய சின்னஞ்சிறு கதைகள் உள்ளன. என்னுடைய ஃபேவரைட் இது.

===================

"இத்தனை நாள் ஜாடியில் சிறைப்பட்டிருந்த எனக்கு விடுதலை தந்ததற்காக தங்களது மூன்று விருப்பங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறேன் எஜமானே" என்றது ஜீனி. 

கிச்சா புளகாங்கிதம் அடைந்தான். "திஸ் இஸ் மை லக்கி டே. என்ன வரம் கேட்டாலும் கொடுப்பாயா?"

"கொடுப்பேன் எஜமானனே, மூன்று வரம்."

"ம் ..பத்து கோடி ரூபாய் என்  ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வாயா?"

"நோ ப்ராப்ளம். அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்கள்" என்றது ஜீனி. 

"முழுவதும் ஞாபகமில்லை"

"கடைசி நாலு நம்பர் சொல்லுங்கள் போதும்"

"நைன் சிக்ஸ் ஒன் எய்ட் ...."

"டன்" என்றது ஜீனி.

கிச்சா நெட் பாங்கிங் வழியாகப் பார்த்தபோது நிஜமாகவே அவன் கணக்கில் அந்தத் தொகை கூடியிருந்தது.

"அதே வங்கியில் பணிபுரியும் கிருத்திகா என்கிற பெண்ணை நீண்டநாள் மௌனமாகக் காதலிக்கிறேன். அந்தக் காதல் நிறைவேற வைப்பாயா ஜீனி?"

"அதெற்கென்ன?" என்றது ஜீனி. உடனே அவனது செல் ஃபோன் ஒலித்தது. "மிஸ்டர் கிருஷ்ணஸ்வாமி, நான் கிருத்திகா பேசுகிறேன். ஐசிஐசிஐ"

"சொல்லுங்க கிருத்திகா?"

"உங்ககிட்ட ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்ச விஷயத்தை இன்னிக்குச் சொல்லிடறேன்.உங்களை கிச்சான்னு கூப்பிடலாமா?"

"தாராளமா"

"ஐ லவ் யூ, கிச்சா"

"யிப்பி !! ஜீனி நீ ஜீனியஸ்ரா , கில்லாடிரா"

"எஜமானனே, உங்களுக்கு இன்னொரு வரம் பாக்கியிருக்கிறது"

"ம்ம் ...ரெண்டே திகட்டுது. இரு, இரு, யோசிச்சுட்டு சொல்றேனே"

"தங்கள் சித்தம் என் பாக்கியம். அவசரப்படுத்துவதற்கு மன்னிக்கவும். மூன்று வரங்களையும் கொடுத்தபின்தான் எனக்கு விடுதலை..."

"அதுக்குன்னு ? டோன்ட் ரஷ் மி "

"சரி எஜமானனே, காத்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் மூன்றாவது விருப்பதைத் தெரிவிக்கலாம்"

கிச்சா தன்னை மறந்த உற்சாகத்தில் லேட்டஸ்ட் தமிழ் சினிமா பாடல் வரியை முணுமுணுதான்."உன் மூச்சுக் காற்றாய் மாற விருப்பம்..."

அடுத்த கணம் கிச்சா காணாமற் போனான்.

No comments:

Post a Comment