அங்கம்மாவும் அரித்வாரும்
அங்கம்மா புருசன் ரயில்வேல வேலைபாக்குறார்ன்னு பேருதான் அவளை ஒரு ஊருக்குக்கும் கூட்டிட்டுப்போனதில்ல. பழனி ராமேஸ்வரம் திருசெந்தூர் போனதோட சரி. அவர் சொல்லுவார் எனக்கு பதான் கோட் வரை பாஸ் இருக்குன்னு ஆனா தமிழ்நாட்டத்தாண்டி கூட்டிட்டுப்போனதில்ல. பெரிய மகன் மெட்ராஸ்போனப்புறம்தான் மெட்ராசுக்கே அங்கம்மாவக் கூட்டிட்டுப்போனாரு திருப்பதி கூட கூட்டிட்டுப்போகல அந்தக்கொறைய தீத்துவைச்சான் மூத்தமகன் முத்தையா. அம்மாவ வரசொல்லி பஸ் புக் பண்ணி ஒரேநாள் தரிசணம் பண்ணவைச்சான்.
அவன் அடிக்கடி அரித்துவார் போய்ட்டு வருவான் அதுனால சொல்லிக்கிட்டே இருந்தான் அம்மா ஒன்ன அரித்துவார் கூட்டிட்டுப்போறேன்னு. அது மாதிரியே ஒரு நா போன் பண்ணுனான் அம்மா அடுத்தமாசம் அரித்துவார் போறேன் வாரீகளான்னு. கொஞ்சம் நடக்கமுடியாத நெலைமாதான் அங்கம்மவுக்கு. மூட்டு நடந்தா வலிக்கும் இருந்தாலும் இப்பப்போகாட்டினா அப்புறம் எப்பையும் போகமுடியாதுன்னு நெனச்சதுனால சரின்னு சொல்லிட்டாஅங்கம்மா தொணைக்கி ஆராவது வந்தாக்கூடக்கூட்டிட்டு வா செலவை நான் பாத்துக்கிடுறேன்னு சொன்னான் அதுனால அங்கம்மா தங்கச்சி தனத்தை தொணைக்கிக்கூப்புட்டுக்கிட்டு மகன் வீட்டுக்கு வந்து சேந்தா, அவன் ரயில் போகவர எல்லாம் புக் பண்ணி வைச்சிருந்தான் அவனும் அவன் சம்சாரமும் சேந்து வாரதா சொன்னான். அந்தப்பயணம் அங்கம்மவுக்கு புதுசா இருந்துச்சு ராஜதானி எக்ஸ்பிரஸ் ல டெல்லி வரை பயணம். ஏசி பொட்டி
நல்லா வசதியா இருந்துச்சு, வேளா வேலைக்கிச்சாப்பாடு அவுகளே குடுத்தாக. டீ காப்பி எல்லாம் போட்டுக்கச்சொல்லி சுடுதண்ணி பால் பவுடர் டீத்தூள் இல்ல காப்பித்தூள் எல்லாம் குடுத்தாக். எதுவும் கொண்டுபோகவேண்டிய அவசியைமில்ல
மறுநாளே டெல்லி போச்சு.டெல்லி அங்கம்மாவுக்கு பெரிய ஆச்சர்யம் தரல எங்கபாத்தாலும் எருமைமாடுக ஆடுமாடுகதான் இருந்துச்சு. அதைப்பாத்துட்டு அங்கம்மா மகன்கிட்ட கேட்டுச்சி டெல்லி கிராமம் மாதிரில இருக்குன்னு அதுக்கு அவன் சொன்னான் இது வெளிப்பகுதி கிராமம் தான் நகரம் வரும்போது பெரிய பெரிய கட்டடம் எல்லாம் இருக்கும்ன்னான்
அன்னிக்கி சாயந்தரமே அரித்துவாருக்கு ரயில். அங்கபோய் சேர ராத்திரி ஒம்போது மணி ஆகிடுச்சு. எல்லாம் சாப்புட்டுப்படுங்க காலையில கஙகையில குளிக்கபோகலாமுன்னு சொல்லிட்டு எல்லாரும்போய் சாப்புடப்போனாக. அங்க நம்ம ஊர்க்காரரு ஒருத்தர் அங்க இருக்குற சினிமாத்தேட்டர் வாசல்ல இட்லி வடை தோசை சுடுவார் ந்னு கூப்புட்டுப்போனான்
உண்மையில நல்ல தோசை இட்லி வடை கெடைச்சது நம்ம ஊருப்பையன்கள் தானாம் பலவருசமாத்தொழில் பண்ணுறாங்களாம். அங்க இருந்து கெளம்புறவரை நைட்டு சாப்பாடு அங்கதான் சாப்புட்டாங்க
கடுங்குளிர் அது அக்ட்டோபர் மாசம் வேற கம்பிளி ரசாய் எல்லாம் போட்டுபோத்துனாலும் குளிர் தாக்குச்சு. மறுநா ஆட்டோபுடிச்சி கங்கையில குளிக்கப்போனாக. ஹரிக்கிபூரின்ற எடத்துல குளிக்கப்போனாக. அங்கம்மாவுக்கு சந்தோசம் எம்புட்டுதண்ணி 100 விளாச்சேரி காலாங்கரை 50 வையை ஆத்து அதெல்லாம் விட அம்புட்டுபெருசு ஆத்து அம்புட்டுத்தண்ணின்னு பெருசாச்சொல்லிச்சி. வாழநாள்ல ஆத்துல இம்புட்டுத்தண்ணிபாத்ததில்ல. கடல்லதான் பாத்துருக்கேன் ராமேஸ்வரத்துலன்னு சொல்லிட்டு அம்புட்டும் நல்லதண்ணியான்னு கேட்டுச்சு. ஆமான்னு சொன்னவன்ன அடியாத்தி இம்புட்டுத்தண்ணி நம்ம ஊருல இருந்தா நம்மூரை அடிச்சிக்க ஊரேகெடையாது ஒரு கொடம் தண்ணிக்கி என்னா பாடுபடுறோம் இங்க இம்புட்டுத்தண்ணி அதுபாட்டுக்குக்குப் போகுதுன்னு சொல்லிட்டு வருசம் பூராம் போகுமான்னு சந்தேகம் கேட்டுச்சு. ஆமான்னு சொன்னவன்ன இதுதான்யா ஊரு குடுத்துவைச்சவுக இங்குனக்குள்ள இருக்கவுகன்னு பெருமூச்சு விட்டுச்சு அங்கம்மா.
தண்ணில நம்ம ஊரு மாதிரி குதிச்சிடாதீங்க தண்ணி ஐஸா இருக்கும் ந்னு மகன் சொன்னான். அங்கம்மாவும் தண்ணில காலைவைச்சிப் பாத்துட்டு சடக்குன்னு எடுத்துக்கிச்சு. எம்புட்டு குளிருன்னு. அப்புறம் அவன் சொன்னான் கொஞ்சம் கொஞ்சமா ஒடம்பை நனைங்க சங்கிலிய புடிச்சிக்கிட்டு எறங்குங்கன்னு எறங்கச்சொன்னான். ரெண்டுகாலும் தண்ணில எறங்குனவன்ன உச்சி மயிறு நட்டமை நின்னுச்சு . தண்ணிய அள்ளி மேல தெளிச்சவன்ன மயிர் கூச்செறிஞ்சிச்சு. மூக்கைப்புடிச்சிட்டு முங்கி எந்திரிச்சவன்ன உசுறு போய்ட்டு வந்துச்சு. அம்புட்டு ஜில்லுன்னு இருந்துச்சு, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாபழகி அங்கம்மா ஆசைதீர குளிச்சிட்டுச்சொல்லிச்சி வாழ்நாள்ல மறக்கமுடியாத குளியலப்பா. மகனே நீ நல்லாருக்கணும்ன்னு கண்கலங்கச்சொல்லிச்சி. எல்லாரும் குளிச்சிட்டு பக்கத்துல இருக்குற மனசாதேவி கோயிலுக்கு ரோப் காருல அந்தரத்துல ஏறுற மாதிரி கூட்டிட்டுப்போனான் மேல இருந்து பாக்கையில அங்கம்மா கங்கையோட முழு வடிவம் பாத்து அசந்து கைகூப்பி கும்புட்டா, அங்க போய் அம்மனை கும்புட்டு வேண்டுதல் கயிறு கட்டிட்டு ஓருவழியா திரும்ப ரூமுக்கு வந்துசேந்தாக
அங்கம்மா திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்துச்சு . இன்னிக்கி நான் குடுத்துவைச்சிருக்கேன் இதுக்குன்னு.
மறுநா ரிசிகேசுக்குக்கூட்டிட்டுப்போனான். அங்க ராம்ஜீலா லெக்சுமண் ஜூலா பாலம் பாத்துட்டு அசந்துடுச்சு அங்கம்மா எம்புட்டுப்பெரிய பாலம்ன்னு. கீழ அதள பாதாளத்துல கங்கை அமைதியா ஆழமா ஓடிச்சி பச்சக்கலர்ல கையெடுத்துக் கும்புட்டுச்சு அங்கம்மா.
கீழ எறங்கி அங்கயும் அன்னிக்கிக்குளிச்சாக. இப்ப அங்கம்மாவுக்கு பழகிடுச்சு எப்புடி கங்கையில குளிக்கிறதுன்னு ஆனந்தமா குளிச்சிட்டு அங்கயே மத்தியாணம் சாப்புட்டுட்டு வரிசையா இருக்குற மடமெல்லாம் பாத்துட்டு சாயங்கால ஆரத்தி பாக்க வந்தாக. ஒரே நேரத்துல அந்தக்கரையில நெறையாப்பேரு சூடம் விளக்கு ஆராத்திகாமிச்சாக கங்கைஅம்மாவுக்கு அதுபூராம் தண்ணில் தங்கம் மாதிரி மின்னித்தெரிஞ்சது. கையெடுத்துக்கும்புட்டாக எல்லாரும்
அப்பத்தான் மகன் சொன்னான் அரித்வார்ல அசைவமே கெடையாது முட்டைகூட இல்ல. இத அப்படி வைச்சிருக்காங்கன்னு சொன்னான்
மறுநா காலையில கெளம்பி டெல்லி வந்து ரெட்போர்ட் குதுப்மினார் லோட்டஸ் கோவில் லால் சவுக் காந்திநேரு நினைவிடம் நேரு இந்திராகாந்திவீடுன்னு எல்லாம் சுத்திப்பாத்துட்டு நம்ம ஊர் சரவணபவன் ஓட்டலுக்குகூட்டிட்டுப்போனான். அங்க இட்லி சாம்பார் தோசை எல்லாம் வாங்கிக்குடுத்தான் டெல்லில இதெல்லாம்கெடைக்குதான்னு கேட்டா அங்கம்மா
மறுநாள் சாயங்காலம் திரும்ப ரயில் இப்ப துரந்தோ வண்டி அதுல ஏற எல்லாரும் காத்துக்கிட்டு இருந்தாக வண்டி கொஞ்சம் லேட்டாத்தான் பிளாட்பாரத்துல போட்டான்
லக்கேஜ் எல்லாம் மொதல்ல மகனெடுத்துட்டுப்போய்வைச்சிட்டு திரும்பவந்து பாத்தான் அங்கம்மாவை காணோம். பதறிட்டான் ஏன்னா ரயில் கெளம்பப்போகுது அஞ்சு நிமிசம்தான் இருக்கு பிளாட்பாரதுல ஆளைக்காணோம்
பதறிப்போய் சம்சாரத்த வெளில நிப்பாட்டிட்டு பெட்டிக்குள்ள போய்த்தேடுக்கிட்டே வந்தான் அங்கம்மாஅதுபாட்டுக்கு ஒரு சீட்டுல ஏறி ஒக்காந்துருக்கு அதைப்பாத்தவன்னதான் அவனுக்கு உசிறு வந்துச்சு. அங்கம்மாவுக்கும் அப்புடித்தான் .அப்புறம் ஒருவழியா ஊரு வந்து சேந்தவன்ன அங்கம்மா கால்ல மகனும் மருமகளும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குனாக அப்ப அங்கம்மா கண்ணு கலங்குச்சு இந்தகுடுப்பினைய குடுத்ததுக்கு மறக்கமாட்டேண்டான்னு சொல்லிச்சி அப்ப மகன் சொன்னான் இது பிள்ளைகளோட கடமைம்மான்னான் கண்கலங்கி
அப்ப அங்கம்மாவோட தங்கச்சியும்சொல்லிச்சி அங்கம்மாவோட பொறந்ததுக்குக்குடுத்துவைச்சிருக்கணும் அதுனாலதான் இந்தபாக்கியம் எனக்குக்கெடைச்சது அதுக்கு உனக்குநன்றிப்பா என்னைக்கும் மறக்கமாட்டேன்னு சொல்லிக்கண்கலங்குச்சு...
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
No comments:
Post a Comment