Saturday, March 20, 2021

ஓ...அமெரிக்கா - 15

 ஓ...அமெரிக்கா - 15 

Road Trip

San Diego, California 

வாரக் கடைசி நாட்களில் சிறு சுற்றுலாக்களை மேற்கொண்ட எங்களுக்கு சேர்ந்தாற்போலப் பத்து நாட்கள் கிடைக்க, நாங்கள் அவசரமாக ரோட் ட்ரிப்பில் கலிஃபோர்னியாவில் சில இடங்களைப் பார்க்கலாம் என்று நினைத்தோம். எங்களுடன் என் மகள்/ மருமகனின் நண்பர், நம் நாட்டிலிருந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் ஒருவரும் சேர்ந்துகொள்ள நான்குபேர் கிளம்ப ஆரம்பித்தோம். 

முதலில் கலிஃபோர்னியாவின் குளிர்ப் பிரதேசங்களில் பயணம் செய்யத் தேவையான தெர்மல் உடைகள் (உடலோடு ஒட்டினாற்போல இருந்து வெப்பத்தைக் கடத்தாதது), கை உறைகள், பனியின்மேல் நடக்கத் தேவையான வழுக்காத காலணிகள், ட்ரெக்கிங் செல்லத் தேவைப்படும் ஷூஸ், தொப்பிகள், ஜாக்கெட்டுகள், ஸ்வெட்டர்ஸ் என்று வாங்குவதற்கென்றே உள்ள Bass Pro என்ற கடைக்குச் சென்றோம். அது வெளியிடங்களில் மேற்கொள்ளப்படும் எல்லாவிதமான வேடிக்கை விளையாட்டுகளுக்கும் தேவையான accessories அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை. 

Bass Pro கடையின் அமைப்பே காடும் அதிலுள்ள செடி, கொடிகள், மரங்கள், உயிரினங்கள் இருப்பதுபோல இருக்கும். திடீரென்று ஒரு இடத்தில் சோவென்று அருவி கொட்டும். இன்னொரு இடத்தில் ஒருவர் மலையேறிக்கொண்டிருப்பார். வன விலங்குகள் திடீரென்று நம் வழியை மறிக்கும், அல்லது, எங்கிருந்தோ நம்மை எட்டிப் பார்க்கும். அங்கேயே நம் பயணம் ஆரம்பித்துவிட்டதுபோல இருக்கும். 

ஒரு நாள் விடியற்காலையில் எல்லோரும் கிளம்பினோம். போதுமான உணவு, தண்ணீர் எல்லாம் எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து முதலில் சான் டியேகோ (San Diego) செல்ல ஆரம்பித்தோம். அரிசோனாவின் கடைசி எல்லை நகரமான யூமா (Yuma) வைத் தாண்டி கலிஃபோர்னியாவின் அருகில் செல்லச் செல்ல, பாலைவனத்தின் தோற்றமானது கள்ளித் தாவரங்கள் நிறைந்த சம தளங்களும், மலைகளுமாக இல்லாமல், வெற்று மணல் குன்றுகளாக (sand dunes) நம் ராஜஸ்தான் பாலைவனம்போலத் தோன்றின. வழியெங்கும் குறிப்பிட்ட இடைவெளிகளில், பயணிகள் சிறிது நேரம் தங்கிச் செல்லக்கூடிய உட்காரும் இடங்கள், மேஜைகள், கழிவறைகள், குளியலறைகள் கூடிய rest stops என்று சொல்லக்கூடிய கட்டிடங்கள் வந்ததால் சிறிது காரை நிறுத்தி இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர வசதியாக இருந்தது. 

டெம்ப்பியிலிருந்து ஏறக்குறைய ஐந்தரை மணி நேரப் பயணத்திலும், 580 கி. மீ. தூரத்திலும் இருந்த சான் டியேகோ உள்ளே நுழைந்ததும் குளிர ஆரம்பித்தது. நாங்கள் எல்லோரும் எங்கள் ஜாக்கெட்டுகளையும், கையுறைகளையும் அணிந்துகொண்டோம். UV ரேடியேஷனிலிருந்து தோலைக் காப்பாற்றிக்கொள்ள சன் ஸ்க்ரீனையும் உபயோகித்துக்கொண்டோம். 

சான் டியேகோ பச்சைப் பசேலென்று மரங்களால் நிறைந்த, அதே சமயம் புதுமையான கட்டடங்கள், குறுக்கும் நெடுக்குமான மேம்பாலங்கள் என்று ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் நகரம்போல அழகாகத் தோன்றுகிறது. 

அத்தனை நேரமும் அனுபவித்த வெப்பம் எங்கேதான் போனதோ? காரின் கதவைத் திறந்து காலை வெளியே வைத்தபோது ஜில்லென்று ஏஸிக்குள் போனதுபோல இருந்தது. அடுத்தடுத்து நெருக்கமாகக் கார்கள், அதுவும் பெரிய கார்கள், பார்க் செய்யப்பட்டிருந்ததால் எங்கள் காரின் கதவை கவனமாக இடித்துவிடாமல் திறக்கும்படி என் மகள் என்னிடம் சொன்னாள். இடித்தாலோ, காரின் பெயின்ட் போனாலோ பல ஆயிரம் டாலர்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதால். இதனால் அந்த டிரிப் முடியும்வரை காரின் கதவை கவனமாகவே திறந்து மூடிக் கொண்டிருந்தேன். 

முதலில் நாங்கள் செல்ல நினைத்தது சான் டியேகோ சஃபாரி. ஆனால் தவறாகச் சென்றுவிட்டது சான் டியேகோ zoo. எக்கச்சக்க டூரிஸ்ட்களால் நிறைந்து வழிந்த zoo ஏறக்குறைய 100 ஏக்கர் பூமியில் பச்சைப் பசேலென்று நெருக்கமான மரம், செடி, கொடிகளுடனான இயற்கைப் பின்னணியில் ஏறக்குறைய 650 வகையான 3500 பறவை,  விலங்கினங்களுடன் பராமரிக்கப்படுகிறது. ஏரியல் ட்ராம் கேபிள் காரில் ஒருமுறை சுற்றிவர சான் டியேகோ நகரம் முழுவதையும் மேலிருந்து பார்த்த கோணம் அழகாக இருந்தது. அங்கே நம் இந்தியர்கள் பலர் அவர்கள் குடும்பத்தோடு வந்திருந்து எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். 

வித்தியாசமான, அரிதான போலார் பேர், பாண்டா வகை மிருகங்களையும், பறவைகளையும் கால் நோக சுற்றிச் சுற்றி நடந்தாலும் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான சான் டியேகோ ஜூவுக்கு மட்டும் ஒரு நாள் போதாது. அங்கே ஒரு ஹோட்டலின் பால்கனியில் பசுமையும், தண்மையும், சுற்றிலும் பறவை, விலங்கினங்களின் நிஜ ஒலிகளும் கொண்ட இயற்கைப் பின்னணியிலும், நல்ல பசியிலும் நாங்கள் சாப்பிட்ட பகல் உணவும் விசேஷமாகத்தான் இருந்தது. 

இதில் என் மனதைக் கொஞ்சம் கஷ்டப்படுத்திய விஷயம் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்கங்கள் உற்சாகமோ, கம்பீரமோ இல்லாமல் சோர்வுடன் களையிழந்து, தங்கள் உடல் வலிமையைப்பற்றிய நினைவே இல்லாததுபோல ஆதரவற்ற நிலையில் படுத்திருந்ததுதான். அடைக்கப்பட்டிருந்ததால் நாளடவில் சோர்வு வந்துவிடுமோ என்னவோ? அல்லது உடல் நலமில்லாததுபோன்ற வேறு காரணங்களும் இருக்கலாம். ஆனாலும் கம்பீரத்திற்குப் பெயர்போன சிங்கங்கள் அப்படி நிராதரவாக இருந்த நிலை என் உற்சாகத்தைக் கொஞ்சம் குறைக்கத்தான் செய்தது.

Ancila Fernando


படங்கள் Bass ProSan Diego Zoo




No comments:

Post a Comment