ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 28
கொனார்க்கிலிருந்து மீண்டும் விசாகபட்டினம்…
கொஞ்சம் வாசுமாமா ஆன்மீக டூரிலிருந்து விலகி ஒரு ஜாலி டூர் போகலாமா?
வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டணம் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். அடிப்படையில் ஒரு தொழில் நகரமான இந்த விசாகப்பட்டணம் தனது ரம்மியமான கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான இயற்கைக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாகவும் மாறியிருக்கிறது.
விசாகப்பட்டினத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமான கைலாச கிரியை அடைந்தோம். நிஜமாகவே மானஸசரோவரில் உள்ளது போன்ற பிரமை. பெரிய சிவன் பார்வதி சிலை. குளு குளுவென்று காற்று வழியெங்கும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் பூங்காக்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிசயமாகப் பார்க்கும் பல இடங்கள்.
இந்த மலைப்பூங்கா கடல் மட்டத்திலிருந்து 360 அடி உயரத்தில் 380 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஒரு பக்கம் வங்காள விரிகுடாக் கடல் ஓயாது அலைகளால் நம்மை முத்தமிடுகிறது. மறுபக்கம் விசாகப்பட்டினம் நகரம். அந்த உயரத்திலிருந்து நகரம் முழுவதையும் தெளிவாக பார்க்க முடிகிறது. தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல் கட்டிடங்கள் வீடுகள் அலுவலங்கள் என மிக அழகு.
டைட்டானிக் முனை, பூக்களால் அமைக்கப்பட்ட கடிகாரம், [FLORAL CLOCK ] சாந்தி ஆசிரமம், உணவுக்கூடங்கள் என நிறைய இதில் அமைந்துள்ளன. இந்த பூ கடிகாரம் 10 அடி விட்டமுள்ளது. இந்தியாவிலேயே அமைந்த பெரிய கடிகாரங்களில் ஒன்று. அங்கிருந்த சின்ன ரயிலில் [TOY TRAIN ] நாங்கள் அனைவரும் ஒரு பெரிய ரவுண்டு சுற்றி அனைத்து காட்சிகளையும் ரசித்தோம். இந்த கைலாசகிரிக்கு 2003ல் சிறந்த சுற்றுலாத்தலம் என்ற விருது கிடைத்துள்ளது என்பது உபரி தகவல்.
கைலாசகிரியை விட்டு இறங்க மனமில்லாலே இறங்கி வந்து விசாகபட்டினத்தின் கடற்கரையை கண்டு களித்தோம். இந்தக் கடற்கரையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் உள்ளது. குர்சூரா என்ற இந்த நீர்மூழ்கிக்கப்பல் இந்திய கப்பற்படையின் நாலாவது நீர்மூழ்கிக்கப்பல். இதன் ஆயுள்காலம் முடிந்ததும். ஆந்திரபிரதேஷ் அரசு இதனை ஆகஸ்டு 24ம் தேதி 2002ல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தது. . அந்த உலகே வேறு என அதனை சுற்றிப்பார்த்த போது தெரிந்தது.
நமது எல்லையில் ராணுவம் நீரில் கப்பற்படை வானில் நமது விமானப்படை என வீரர்கள் நம்மையும் நம் நாட்டையும் காப்பதால் தான் நாம் இப்படி பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பதிவுகள் எழுத முடிகிறது என்பதை எண்ணும்போது அவர்களின் தியாகம் எத்தனை மகத்தானது என்பது புரிகிறது.
அதற்குப்பிறகு கடற்கரையில் உள்ள இராமகிருஷ்ண மடத்தையும் அதன் அருகில் உள்ள ஒரு காளி கோயிலையும் தரிசித்தோம்
நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலிருந்து விலகி அழகு ததும்பும் மலைவாழிடங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும்.
அரக்கு பள்ளத்தாக்கு (Telugu: అరకు వ్యాలీ; English: Araku Valley) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாழிடங்களில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமாகும். மேகம் வருடிச் செல்லும் மலைத்தொடர்கள், வெள்ளியை உருக்கி வார்த்தது போல மலையிலிருந்து கொட்டும் அருவிகள், இதமான குளிருடன் மயக்கும் சூழல், காற்றில் காஃபி மணம் தவழ்ந்து வர கண்ணிற்கினிய பசுமையான காஃபித் தோட்டங்கள் சூழ்ந்த நிலப்பரப்பு, இனிமையாய்ப் பழகும் மலைவாழ் மக்கள் என்று பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்த ரம்மியமான பள்ளத்தாக்கு இதுவாகும். ஆங்காங்கே சில வீடுகள் தென்படுகின்றன. விவசாயம் நடைபெறுகிறது. சில இடங்களில் நெல் அதிக அளவில் பயிரிடுகிறார்கள்.
அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதும் சுண்ணாம்புப் பாறைகளால் உருவாகியுள்ளதும், இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாக அறியப்படுவதுமான உலகப்புகழ் பெற்ற போரா குகைகள் (Borra Caves) ,ஒவ்வொருவரும் கண்டிப்பாக கண்டுகளிக்க வேண்டிய குகையாகும்
இது மட்டுமின்றி தடிபுடி நீர்த்தேக்கம் (Thadipudi Reservoir), டைடா கிராமம் (TYDA Village) மற்றும் ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம் (Jungle Bells Nature Camp), காலிகொண்டா காட்சிக் கோணம் (Galikonda View Point), சாப்பாறை நீரிணை (Chaparai Water Cascade), சங்க்டா அருவி (Sangda Falls), பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Gardens), பத்மபுரம் தொங்கும் குடிசைகள் (Padmapuram Hanging Cottages), மலைவாழ் மக்கள் பற்றிய அருங்காட்சியகம் (Tribal Museum). போன்ற சுற்றுலாத் தலங்கள் ஆண்டுதோறும் பல சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்த்து வருகின்றன.
மனதிற்கினிய மலைவாழிடமான அரக்கு பள்ளத்தாக்கு ஆந்திர பிரதேச மாநிலம், விசாகபட்டிணம் மாவட்டம், அரக்குவேலி மண்டலில் (Arakuvalley Mandal) அமைந்துள்ளது. இதமான குளிர் நிலவும் மலை வாழிடமாகும் இதுவாகும். அரக்குவேலி மண்டலில் 245 கிராமங்களும், 15 பஞ்சாயத்துகளும் உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சூழ, கடல் மட்டத்திலிருந்து 925 மீ. உயரத்தில், ஓடிஸா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள அரக்கு பள்ளத்தாக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
ரக்தகொண்டா, சிட்டமகொண்டா, கலிகொண்டா, சுங்கரிமெட்டா போன்ற அழகிய மலைச்சிகரங்களின் நடுவே அமைந்துள்ளது அரக்கு பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு அழகிய மலைமுகடுகளாலான மிகப்பெரிய மலைதொடர்களையும், அனந்தகிரி மற்றும் சுங்கரிமெட்டா பாதுகாப்பு காடுகளையும் அரக்கு பள்ளத்தாக்கு உள்ளடக்கியுள்ளது.
அரக்குவேலிக்கு சுற்றுலா செல்லுவோர் இரயில் பயணம் மேற்கொள்வது மிக இனிமையான அனுபவம் ஆகும். விசாகபட்டிணம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து (Visakapatnam Railway Junction) கிரண்துல் இரயில் நிலையம் (Kirandul Railway Station) வரை ஒரு பாசஞ்சர் இரயிலும் ஒரு கிரண்துல் விரைவு இரயிலும் இயக்கப்படுகின்றன.
கண்ணாடிக் கூரையும் குளிர்சாதன வசதியும் கொண்ட இரயில் பெட்டி (Glass-domed Air-conditioned Coach) கிரந்துல் பாசஞ்சருடன் தற்போது இணைக்கப்படுகிறது. விஸ்டாடோம் கோச் (Vistadomeஎன்று பெயர்கொண்ட இப்பெட்டியில் மெத்தையுடன் இருக்கைகள் (cushioned seats), பரந்த கண்ணாடி ஜன்னல்கள், (wide glass windows), எல்.ஸி.டி டி.வி. (LCD TV) போன்ற வசதிகள் உள்ளன. இந்த இரயில் பெட்டி அரக்கு நகரில் கழட்டிவிடப்படுகிறது. பாசஞ்சர் இரயில் மாலை வைசாக்கிற்குத் திரும்பும்போது மீண்டும் இணைக்கப்படுகிறது. இந்த வகுப்பில் இருக்கைக்கான கட்டணம் ரூ. 665.00 ஆகும்.
அரக்குவேலியில் ஒரு பேரூந்து மூலம் பயணிகள், பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Garden), பழங்குடியினர் அருங்காட்சியகம் (Tribal Museum), ஆனந்தகிரி காஃபித் தோட்டங்கள், காலிகுண்டா காட்சிக் கோணம் Galikonda View Point), போரா குகைகள் மற்றும் திம்சா நடனம் (Dimsa dance) ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மாலை இதே பாசஞ்சர் இரயிலில் பயணிகள் அரக்குவேலியிலிருந்து விசாகபட்டணத்திற்குத் திரும்புகிறார்கள். இந்த இரயில் இரவு 11:00 மணிக்கு விசாகபட்டணம் சென்றடையும்.
இரயில் ஜன்னல் வழியே நீங்கள் காண்பது ஒரு பக்கம் பள்ளத்தாக்கு, மறுபக்கம் குன்றுகள் என்று பாதை நெடுக திகைப்பூட்டும்படியான, எப்போதும் கண்டிராத எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பது சுகமான அனுபவம் ஆகும். இந்த இரயில் தடத்தில் 58 சுரங்கப் பாதைகளையும் 84 பாலங்களையும் கடந்து செல்வது சிலிர்ப்பான அனுபவம் ஆகும். இங்குள்ள பெரிய சுரங்கப் பாதை 896 மீ. தூரமும் சிறிய சுரங்கப் பாதை 26 மீ. தூரமும் கொண்டுள்ளது. சராசரியாக சுரங்கப் பாதையின் தூரம் 400 மீ. ஆகும். இங்குள்ள சுரங்கப் பாதைகளுக்கு வரிசை எண் தரப்பட்டுள்ளது சுவாரஸ்யமான செய்தி. பயணிகள் சுரங்கப் பாதைகளை எண்ணிக்கொண்டு வருவதும் சிறிது தூரம் கடந்தபின்பு எண்ணிக்கையைத் தவற விடுவதும் எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல.
மேகம் தவழும் மலையில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த தூறல் மழையால் மலையெங்கும் உள்ள செடிகொடிகள் அலம்பிவிட்டது போல பசைப்பசெலேன்று தோன்றியது. இந்த எழில் கொஞ்சும் காட்சிகள் உங்கள் மனதில் பதிந்துவிடுவது உறுதி…..
No comments:
Post a Comment