Sunday, March 21, 2021

ஓ...அமெரிக்கா - 18

 ஓ...அமெரிக்கா - 18 

சான் டியேகோவில் அடுத்து நாங்கள் சென்ற இடம் Reuben H Fleet Science Centre. அது ஒரு புகழ்பெற்ற அறிவியல் மியூசியம் + ப்ளானடேரியம். அங்கே நேரக் குறைபாடு காரணமாக நாங்கள் நேராகப் ப்ளானடேரியம் சென்றோம். நாங்கள் சென்ற நாளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் இருந்தாலும் காட்சி சரியான நேரத்துக்கு ஆரம்பித்தது. 

ப்ளானடேரியம் எப்போதுமே என்னை வசீகரிப்பது வழக்கம். நாம் நேரடியாகப் போக முடியாத விண்வெளிக்கு அது நம்மை வர்ச்சுவலாக அழைத்து செல்கிறதே! காலம் காலமாக அந்நியமாகவும், அதிசயமாகவும் வெகு தூரத்தில் இருக்கும் சூரியனும், கோள்களும், நட்சத்திரங்களும், பால் வீதிகளும் நம் அருகில் தொடும் தூரத்தில் காணக் கிடைத்துவிடுமே! 

அதிலும் அன்றைய ஸ்பெஷலான வர்ச்சுவல் ஸ்பேஸ் டூரில் நம் விசேஷக் கண்ணாடிகள், ஹெட் ஃபோன்ஸ் உதவியுடன் "சீட் பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுங்கள். விண்வெளிப் பயணத்துக்குத் தயாராகுங்கள்" என்ற அறிவிப்புடன் ஏதோ நாம் உண்மையாகவே புறப்படுவதுபோன்ற உணர்வைக் கொடுத்து, அத்துடன் நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளும் இலேசாக உலுக்கப்பட்டதுபோல வைப்ரேஷன் கொடுத்தபோது, உண்மையிலேயே எனக்குள் அட்ரீனலின் ரஷ் வந்தது. அத்துடன் கையருகில் விண்வெளிப் பொருட்கள், நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் 3D ல் மிதந்துசெல்ல சில நிமிடங்களுக்கு நான் உலகத்தைவிட்டு உண்மையிலேயே விண்வெளிக்குள் இருந்ததைப்போல உணர்ந்தேன். 

அதிலும் உச்சகட்டமாக நாவிகேஷனில் முன்னால், வலது, இடது என்று திரும்பிய விண்கலம் சரேலென்று முன்னறிவிப்பின்றி டைவ் செய்வதுபோலக் கீழேபோக, நான் என்னையறியாமல் என் சீட்டின் இருபுறக் கைப்பிடிகளையும் இறுகப் பிடித்தேன். காட்சி முடிந்தபோது ரோலர் கோஸ்ட்டரில் போய் வந்ததைவிடவும் த்ரில்லாகவும், அதே சமயம் 'அப்பாடா! நம்ம பூமிக்கு வந்து சேர்ந்துட்டோம்!' என்று நிம்மதியாகவும் இருந்தது. மறக்க முடியாத அனுபவம் தந்த ரூபன் ஹெச். ஃப்ளீட் சயின்ஸ் ம்யூசியம்! 


இத்துடன் எங்கள் திட்டப்படி சான் டியேகோவில் நாங்கள் பார்க்க நினைத்த இடங்களைப் பார்த்துவிட்டதால் அங்கிருந்து கிளம்பி சான் ஃப்ரான்சிஸ்கோ நகருக்கு எங்கள் பயணம் ஆரம்பித்தது. வழியில் ஒயின் தயாரிப்புக்குப் பெயர் பெற்ற நாப்பா வாலி (Napa Valley) யின் உள்ளேபோய் அந்த இடத்தை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினோம். பார்க்கிற இடமெல்லாம் திராட்சைத் தோட்டங்களும், கொடிகளும் நிறைந்த நாப்பா வாலியின் காற்றிலேயே திராட்சைப்பழங்களின் மணம் வீசுகிறது. உலகத்தின் மொத்த நிலப்பரப்பிலும் 2% மட்டுமே இருக்கிற உலர்ந்த, வெது வெதுப்பான, சூரிய ஒளியுடனான பகல்களும், அருகில் இருக்கும் பசிபிக் பெருங்கடலிலிருந்து வரும் கடற்காற்றும், மிதமான பனி மூட்டமும் கொண்ட இரவுகளும், திராட்சை வளர்ப்பிற்கு மிகத் தேவையான மெடிட்டரேனியன் தட்பவெப்பத்தை நாப்பா வாலிக்குத் தருவதால், அது ஒயின் தயிரிப்பில் பேரும், புகழும் பெற்று விளங்குகிறது.   


அங்கே இருக்கும் ஏகப்பட்ட ஒயின் தோட்டங்களின் உள்ளே சென்று பார்த்து, உலகப் புகழ்பெற்ற வித விதமான ஒயின்களை சிறிது சுவைத்துப் பார்ப்பதும், வாங்குவதும் மட்டுமே அங்கே நாங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயமாக இருந்ததால், நாங்கள் அதில் விருப்பமின்றித் திரும்பி சான் ஃப்ரான்ஸிஸ்கோவை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். 


சான் டியேகோவிலிருந்து நாப்பா வாலிவரை சென்று மீண்டும் திரும்பும் சாலை நம் ஊட்டி, கொடைக்கானல் போலப் பல ஹேர்பின் வளைவுகளைக் கொண்டது. என் மருமகன் முந்தின நாள் முழுவதும் கார் ஓட்டியதால், அவருக்கு ஓய்வு கொடுத்துக் கார் ஓட்டிக்கொண்டிருந்த என் மகள் சமீபத்தில்தான் லைசென்ஸ் வாங்கியிருந்ததால், டெம்ப்பியின் நேரான சாலைகளில் ஓட்டிப் பழகியிருந்த அவளுக்கு, அந்தக் குறுகிய, அடிக்கடி வந்துகொண்டிருந்த வளைவுகளில் கார் ஓட்டுவது பெரும் சவாலாக இருந்தது. 


நாங்கள் காரில் அப்போது பிரபலமாக இருந்த எட் ஷீரன், பிரியாணி பாடல்களை எஃப். எம்மில் திரும்பத் திரும்பக் கேட்டு போரடித்துப் போய், என் மகள் சிறுவயதில் கேட்டிருந்த Aqua (I'm a barbie girl), Michael learns to rock, Backstreet boys, boy zone, Medonna, Bonny M, Abba என்று பழைய பாடல்களைப் போட, என் மகள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக் காரைப் பாடிக்கொண்டே ஓட்டினாள். அதை நானும் சேர்ந்து பாடியதை என் மருமகனும், அவர்கள் நண்பரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். 'அம்மா' என்கிற வார்த்தை கொடுக்கும் பிம்பம் ஆச்சரியமானது. 


சான் ஃப்ரான்ஸிஸ்கோ செல்லும் வழியெங்கும் நான் கண்ட சாக்ரமென்டோ போன்ற பெயர்கள் எல்லாம் ஹாரி பாட்டர் கதைகளில் வரும் மந்திரங்கள்போல இருந்து எனக்கு சிரிப்பைத் தந்தன. சான் ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாவின்மேல், நகரையும், மரின் கௌன்ட்டியையும் இணைக்கும் 1.6 கி.மீ. நீள Golden Gate suspension bridge உலகப் புகழ் பெற்றது. அநேக ஆங்கிலத் திரைப்படங்களில் ஏற்கனவே அதைப் பார்த்திருந்த நான் நேரில் பார்த்து, அதில் பயணம் செய்தபோது த்ரில்லானேன். 

அங்கே நாங்கள் முதலில் சென்ற இடம் டெலக்ராஃப் மலைகளில் இருந்த காயிட் டவர் என்ற மிக உயரமான கோபுரம். அங்கிருந்து சுற்றிலும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரைப் பார்க்க முடியும். அங்கிருந்து கடலின், அடுத்த பக்க நகரின் தோற்றமும் மிக அழகானது. காயிட் டவர் ம்யூரல்களுக்கும் புகழ் பெற்றது. அதன் முன்னால் இருக்கும் கொலம்பஸின் சிலையும் ப்ரம்மாண்டமானது. காயிட் டவர் ஹிட்ச்காக்கின் வெர்ட்டிகோ முதல் ஏகப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களில் நம்மூரில் சென்னை என்றால் LIC கட்டிடம், சென்ட்ரல் ஸ்டேஷனைக் காட்டுவதுபோல லாண்ட் மார்க் கட்டிடமாக சான் ஃப்ரான்ஸிஸ்கோவைக் காட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மலையின்மேல் ஏகாந்தமாக, சிலுசிலுவென்ற காற்றில் நின்றுகொண்டு தூரத்தில் தெரியும் கடலைப் பார்க்கும் காட்சி ரம்யமானது. 

Ancila Fernando

Pictures 

1. Reuben H Fleet Science Museum (from internet)

2 - 4 Napa Valley

5 - 9 Coit Tower





No comments:

Post a Comment