29. அந்தஸ்து (சிசீ6) #ganeshamarkalam
அந்த உத்யோகம் நிச்சயம் கிடெச்சுடும்னு நம்பிக்கை இருந்தது. என்னோட குவாலீஃபிகேஷன்ஸ், தஜுர்பா அப்படி. பல கட்டத் தேர்வு ஒரு ஸ்டேஜுக்கு வரப்ப தெரிஞ்சிடுத்து. “பேனலில் 2 பேர் வச்சிருக்கம், ஃபைனல் முடிவு அடுத்த வாரம் எடுத்துடுவம் திவாகர்.” ஒருத்தர் போன் போட்டு சொன்னப்போ ஹின்ட். கூடவே நான் ரெம்பவே ஆகே இருப்பதா.
இப்ப வேலைக்கும் இதுக்கும் நிறைய வித்யாசம். போப்போறது பெரீய பொறுப்பு. HDFC ஹவுஸிங்க் ஃபைனான்ஸ் ஆல் இந்தியா ஹெட். கிடெச்சுதுன்னா இத்தனை சின்ன வயசில் இந்தப் பொறுப்புக்கு வரும் மொத ஆள் நானாத்தான் இருப்பேன். சம்பளம் ரெட்டிப்பு ஆகும். வீடு, கார் சிலவு தனியா தருவா. டாப் மேனேஜ்மென்ட் டீமில் ஒரு பெர்த். “சிங்கப்பூரில் கிளை, ஈஸ்ட் ஏஷியா நாடுகளில் கால் பதிக்கணும், DBSஓட ஒப்பந்தம் போட்டாச்சு, ஆரம்ப கட்டத்தில் அவாளோட நடைமுறைப் படுத்த வேண்டிய விஷயங்களையும் நீங்க பாத்துக்கணும். உங்க பொறுப்போட சேரும்”.
சொன்னாப்போல் ஒருவாரத்தில் ஆஃபர். ஒரு மாசத்தில் சேர்ந்துக்கணும். அப்பா பாத்துட்டு “எல்லாம் அஞ்சனா ஆத்துக்கு வந்த அதிர்ஷ்டம்”. இவள் வெக்கத்தில் மயங்கி சரிஞ்சு விழாத குறை. எங்களுக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆரது. மயக்கம் தெளிஞ்சதும் அவாத்துக்கு போன் போட்டுச் சொல்வள். போட் கிளப்பில் 4 பெட்ரூம் அப்பார்ட்மென்ட் எடுத்துண்டு போயிடலாம்னு அப்பா சொல்ரர். அம்மாவும் “இந்த மடிப்பாக்கத்துலேந்து ஒரு சேஞ்ச் வேணும்டா”. பழைய மாருதி எஸ்டீமைக் ஒழிச்சுக் கட்டணும். போட் கிளப்பில் நிறுத்தணும்னா அதுக்குத் தோதா கார் வாங்கிடலாம். இப்படி நானும் அப்பாவும் பிளேன் செய்யரப்போ அம்மாவும் அஞ்சனாவும் GRTக்கு கிளம்பிட்டா.
“அஞ்சனாவுக்காக வாங்கினேன்.” டயமன்ட் வச்சது வாங்குவள். “வைரம் தோஷமில்லைன்னு பாக்கணும், சித்தேநா நான் போட்டுக்கரேண்”. அப்பரம் “நீ சின்னப்பொண் திவாகரொட சுத்தப் போவாய். சேஃப் இல்லை, அப்பரமா தரேன்.” வச்சுண்டுடுவள். இன்னொண்ணு வாங்கிண்டு இதை தருவள். இன்னொண்ணும் மாட்டுப் பொண்ணுக்காகத்தான் வாங்கினாளாம், நம்பிடணும். வரப்போர சம்பளத்துக்கு முன்கூட்டியே வேட்டு. எங்காத்தில் சித்தே அகலக்கால். கப்பைகிட்டே பொறுக்க முடியாம வலிச்சா சுதாரிச்சுண்டுவம்.
நல்லநா பாத்து இப்ப இருந்ததை ரிஸைன் செஞ்சேன். இன்னொரு நல்லநா பாத்து புதுவேலையை ஒத்துண்டாச்சு. இன்னைக்குத்தான் ஜாயீன் செய்யன்னு அண்ணா சாலை ITC சென்டருக்கு போரேன். இங்கேதான் கொடுத்திருக்கா. நானும் என் டீம் 4 பேரும். சொச்ச டீம் மும்பையில், கூப்ட குரலுக்கு. மொத மாசம் கேப் வரும், அப்பரமா நீங்க வீடு மாத்திண்டு புது கார் புக் பண்ணினதும் நீங்களா வந்துக்கோங்கோன்னு ஆசையா சொன்னா. என் பொசிஷணுக்கு ஃபார்மெல் ட்ரெஸ். டை கட்டிண்டு கையில் கோட்டைப் பிடிச்சிண்டு. கேப் ட்ரைவெர் இந்த வெய்யலில் இது இப்படின்னு தினுசாப் பாத்தான். நிறையப் பாத்திருப்பான், இருந்தாலும் அசூய பட்டான். கண்டுக்கலை.
லிஃப்டில் ஏறரச்சே செக்யூரிடி கூடவே. என் ஃப்ளோர் வரைக்கும் வந்து ஸ்வைப் கார்ட் அவனது யூஸ் செஞ்சு உள்ளே விட்டான். “இன்னும் 1 அவரில் உங்க ஸ்வைப் பாஸோட வரேன்”. உள்ளே பூங்கொத்து வச்சிண்டு ஒரு பொண், செக்ரடெரியாம், அப்புரம் 2 ஆபீஸர் சென்னை ஜோன் பாத்துக்கரவா. ஆலிந்தியா ஹெட் சென்னை ஆபீஸில் அவாளோடவே உக்காரப் போரேன்னதும் கெத்து. ஒவ்வொருத்தரா அறிமுகம் ஆச்சு.
அர்ச்சனா என் செக்ரடரி 3 வருஷமா. சிட்டுக் குருவிக்கு சல்வார் மாட்டினாப்போல். ரமணி மும்பையில் இருந்துட்டு ‘சவுத் போஸ்டிங்க் வேணும், வரன் பாக்கரா’ ப்ரொமோஷனை வேண்டாம்னுட்டு வந்தவனாம். குமார் இங்கேதான் ஆரம்பத்லேந்தே, இவாலெல்லாரையும் விட “அதிக எக்ஸ்பீரியன்ஸ் 7 வருஷம் சந்திரமோகன் இன்னைக்கு லீவு சார்”. “சரீ”ன்னுட்டு இன்ட்ராநெட்டில் இவா டீடெயில்ஸ் பாத்துக்கலாம்னு கேபினுக்குள் வரவும், மத்த ஃப்ளோர் டிபார்ட்மென்ட் ஹெட்ஸ் என்னை பாக்கன்னு வரவும் சரியா இருந்தது.
எப்பவுமே மொதநா “ஜகாசக்”குன்னு போகும். புது இடம், புது மனுஷா, உசந்த பதவீன்னதும் அவாளே இழைஞ்சுண்டு சிஷுருஷைன்னு நேரம் போரதே தெரியாது. மத்தியானத்துக்கப்புரம் சட சடன்னு மும்பை கால்கள், “சீக்கிரம் செட்டில் ஆய்க்கோ, வர வெள்ளிக்கிழமை சிங்கப்பூரோட கான்ஃபெரென்ஸ் கால், DBSலேந்து சொளயா முன்பணம் வந்தா பெரீய கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்க்ட்ஸுக்கு லோன் பிஸினெஸ் ஆரம்பிக்கலாம்”. எத்தனை பெரீய பதவின்னாலும் நமக்கு மேலேயும் சிலர்.
மறுநா ஆபீஸுக்கு சீக்கிரமா போயிடலாம்னு. எனக்கும் மின்னாடி செக்ஷணில் ஒருத்தர். நேத்து பாக்கலை. நாமளே அறிமுகப் படுத்திக்கலாம்னு போரேன். “ஹாய், ஐ ஏம் திவாகர், நேத்துதான் சார்ஜ் எடுத்திண்டிருக்கேன்”. சட்டுன்னு திரும்பினது சந்திரமோகன். என் இனிய நண்பன், எங்கூட பிகாம் வரைக்கும் ஒண்ணா படிச்சான். மதுரைலே. இப்ப இங்கே. கையப் பிடிச்சதும்தான் ரெண்டு பேருக்கும் யார் மின்னாடி நிக்கரம்னு.
“டேய் எப்படீ இருக்காய்? நீதான்னு நேத்து தெரியலை. பேர் மட்டும் சொல்லி நீ லீவில்னு சொன்னா. எத்தனை வருஷமாச்சு?” சந்தோஷமும் ஆச்சர்யமுமா அவன் முகத்தையே பாக்கரேன். அவனோ கொயட்டா, “வெல்கம் டு HDFC திவாகர். ஹௌ ஆர் யூ?” “என்னடா இவ்ளோ ஃபார்மலா?” தோளில் தட்டி என்னண்டை இழுத்து கட்டிக்கலாம்னா நெளிஞ்சு நழுவிப் போரான். அதுக்குள் சிலர் வந்துடவே, “கேபினுக்கு வா நிறையப் பெசணும்”. வந்துடரேன். ஆனா அவன் வரலை. இங்கேந்தே கண்ணாடி வழியா என்னமோ மும்முரமா எழுதிண்டு கம்ப்யூடரில் பாத்துண்டு இன்னைக்குள் துபாய்ல ரெண்டு கட்டடம் விலைக்கு வாங்கிடணும்போல் எதையோ செஞ்சிண்டு.
அவன் என்னிடம் ரிப்போர்ட் செய்யலை. அதுனால் வா பெசணும்னு கட்டாயப் படுத்தலை. வேலை முடிக்கணுமோ என்னமோனு விட்டுடரேன்.
சந்திரமோகன் நன்னா படிப்பான். 6ஆவதுலேந்து என்னொடயே ஒண்னா படிச்சன். நான் முக்கி முக்கி 65 வாங்கினா அவன் அநாயாசமா 98 வாங்குவன். மதுரையில் இருந்தம். தல்லாகுளம் காமராஜ் நகரில் எங்காம் எதிரில் அவாம். ஒண்டுக் குடுத்தனம். அத்தனை வசதி இல்லை. படிப்பு ஒண்ணே மூலதனம், அதில் ஜெயிச்சுக் காட்டிட்டா குடும்பம் தலை தூக்கிடும்னும் அவனப்பா. ஒரு தங்கை. சூடிகையா இருப்பள். எங்காத்துக்கு வருவள். எங்கம்மா ஒருக்கா “அவளை நோக்குப் பாக்கலாம், ஆத்தொட பாந்தமா அடக்க ஒடுக்கமா இருப்பள்”. அப்ப பெரிய மனுஷிகூட ஆலை. அப்பரம் பேச்சு எடுக்கலை. அந்தஸ்துன்னு ஒண்ணு பெரீசா நடூலே இருக்காப் போல். ஆனா நானும் சந்திரமோகனும் இணை பிரியாம.
அவனாத்தில் எல்லோரும் பிரியமா. என்னை ரெம்ப பிடிக்கும். எங்காத்தைவிட அவாத்து சமையலை விரும்பிச் சாப்பிடுவேன். மத்தியானம் அவன் ஸ்கூலுக்கு கொண்டு வரதை அப்படியே பிடிங்கிண்டு. கோவிச்சுக்காம என்னதை சாப்பிடுவான். சாயங்காலம் “வச்சது எப்படீ இருந்தது? அளவு காணித்தா, உப்பு காரம் சரியா இருந்ததா? அம்மா கேட்டா ஜோரான்னுடுவேன் ஒருநா சந்திரமோகன் தங்கை வந்து “உங்காத்தில் இன்னைக்கு ஏதோ வாழைப்பூவில் செஞ்சேளாம், அண்னா நன்னா இருந்ததுன்னு சொன்னான், எப்படீன்னு என்னை கத்துண்டு வரச் சொன்னா”. அப்பரம்தான் அம்மாவுக்கு விளங்கித்து. அன்னைலேந்து சந்திரமோகனுக்கும் சேர்த்து ஒரு டப்பா தந்துடுவள்.
பிகாம் முடிக்கரச்சே இவன் அப்பா காலமாகிட்டர். அவா சேலத்துக்கு மாமாவொட போய் தங்கிப்பதாய் போயிட்டா. அப்பப்ப லெட்டர் வரும். டச்சில் இருப்பம். இவனும் என்னைப் போல் MCom முடிச்சிட்டு LICலே செர்ந்துட்டதா தகவல். தங்கைக்கு சேலத்துலேயே வரன் செட் ஆச்சாம். கூப்பிட்டாளா தெரியலை.
இத்தனை நாள் கழிச்சு என் மின்னாடி என் சிநேகிதன். சந்தோஷமாப் போச்சு. ஆத்துக்கு போன் செஞ்சு அம்மாகிட்டே சொல்ரேன். “இன்னைக்கு யாரப் பாத்தேன்னு நினைக்கராய்?” “சொல்லுடா”. சொன்னதும் “அப்படியா! எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு, சாயங்காலம் வரப்போ உன் காரில் ஆத்துக்கு அழைச்சிண்டு வாடா”. கிளம்பரச்சே பாத்தா இவனைக் காணம். கேபினுக்கும் வரலை. நானும் சித்தே பிஸியா. “3 மணிக்கே கிளம்பிப் போயிட்டார்” குருவி சொல்ரா. “நாளைக்கு 11 மணிக்கு எனக்கொன்னும் அப்பாயின்ட்மென்ட் இல்லை, சந்திரமோகன் ஃப்ரீயான்னு பாத்து என்னை பாக்க வரசொல்லு”. “யெஸ் ஸார்”
ஆத்துக்கு வந்ததும் அவனையும், தங்கை அவா அம்மா அப்பாவைப் பத்தியும்தான் பெச்சு. அத்தனை நெறுங்கிப் பழகிட்டு ஊர் விட்டு ஊர் போனதும் டச்சில் வச்சுக்கலையேன்னு அப்பாவும் வருத்தப் பட்டர். “என்னவாடா இருக்கன்? நீ போய் சேர்ந்த ஆபீஸ்லேயேன்னா உனக்கு நிச்சயம் ஒத்தாசயா இருப்பன்.” அம்மா. சொல்ரேன். “உன்னொத்த வேலையா இல்லை அதைவிட உசத்தியா? அவன் படிச்ச படிப்புக்கும் வாங்கின மார்க்குக்கும் உசத்தியாத்தான் இருக்கணும்”. “இல்லைப்பா, கீழ்மட்டத்துலேந்து ஒரு ப்ரொமோஷன் வாங்கிண்டிருக்கான். மின்னே LIICலே என்னவா சேர்ந்தானோ அதைவிட நல்ல சம்பளம். ஆனா அவன் அனுபவத்துக்கு செர்வீஸுக்கு இன்னும் நன்னா வந்திருக்கணும்”. அதிர்ஷ்டமில்லையோ!
“இந்தூரில் இருக்கான்னா கோமதிமாமியும் இங்கேதான் அவனோட இருக்கணும். பையன் தலை தூக்கிட்டான்னா மாமாவொட ஏன் சேலத்தில். கல்யாணம் ஆச்சான்னு விசாரிச்சயா?” “பேசினான்னா ஏதாவது தெரிஞ்சுக்கலாம்? ஓடி ஒளிஞ்சுக்கரான் மா. பிஸியா இருக்கன். நாளைக்கு வளைச்சுப் பிடிச்சு வர சனி ஞாயிறு ஆத்துக்கு இழுத்துண்டு வந்துடரேன்”.
ஆனா பாருங்கோ அர்ச்சனா கேட்டதுக்கு “அவசரமா க்ளயன்ட் பாக்கப் போரேன், நாளைக்கு திருச்சி கேம்ப் திங்கட்கிழமைத்தான் வருவேன். உன் பாஸ் கிட்டே சொல்லு.” சொன்னானாம். சிட்டுக்குருவி வந்து என்னண்டை சொல்லித்து. சொல்ரப்போவே அவள் கண்கள் பதட்டத்தில் அடிச்சிக்கரது. இத்தனை பெரீய ஆபீஸர் கூப்பிட்டா இப்படியா ஒரு ஜூனியர் பதில் சொல்வன்? வந்து சொன்னதை நேரில்னா சொல்லியிருக்கணும்? அவள் மனசில் என்ன ஓடித்துன்னு எனக்கு புரிஞ்சது. “டோன்ட் வொர்ரி, ஹி இஸ் ஏ ஃபேமிலி ஃப்ரெண்ட், ஐ வில் கேட்ச் ஹிம் வென் ஹி இஸ் பேக்.”
அடையார் போட் கிளப்பில் ஆபீஸ் காட்டின அப்பார்ட்மென்ட்டை பாத்துட்டு என்னென்ன ஃபர்னிஷிங்க் செய்யன்னு சொல்லீட்டு அப்படியே டிடிகே சாலை சங்கரா ஹாலில் எக்ஸிபிஷன் என்னன்னு பாத்துட்டு வெளீலே சாப்டூக்கலாம்னு நானும் அஞ்சனாவும் சனிக்கிழமை. எக்ஸிபிஷணில் கூட்டம். இவளை உள்ளே அனுப்பிச்சுட்டு நான் வெளீலேயே. அப்பத்தான் ஸ்கூட்டரில் சந்திரமோகன் நாரத கான சபா கிட்டே. “டேய் நில்லுடான்னு வழி மறிச்சுட்டேன்”. சட்டுன்னு ப்ரேக் போட்டவன், வளைஞ்சு வளைஞ்சு அல்லாடி நிறுத்தினான். இப்படி ஒருத்தன் அதுவும் நான் ரோட்டில் மடக்கப்போரேன்னு யோசிச்சிருக்க மாட்டான்.
“என்னடா? என்னை பிடிக்கலையா, வெளியூர் போரேன்னு ஏன் பொய் சொன்னாய். அம்மாவும் அப்பாவும் உன்னை பாக்கணும்னு எத்தனை ஆசையா. ஏன் இப்படி?” திருதிருன்னு முழிச்சீண்டு “திவாகர், வந்து சார்ஜ் எடுத்துக்கப் போரது நீதான்னு தெரிஞ்சதுடா. பெரீய பொசிஷணில் வந்திருக்காய். உன்னோட படிச்ச நான் இன்னும் தலையெடுக்காம. எந்த மூஞ்சிய வச்சிண்டு உன்னோட மின்னே சகஜமா பழகினாப்போல் பழக? எங்கேயாவது பழக்க தோஷத்தில் வாடா போடான்னு சொல்லிட்டா, கூச்சமா இருந்ததுதா. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி இந்த அந்தஸ்து சின்ன சுவர் மாதிரி குறுக்கே. பல்லாவரத்தில் இருக்கம். அம்மாகிட்டே உன்னை பத்தி சொன்னப்போ சந்தொஷப்பட்டா”.
“முட்டாள். நாம பிரிஞ்சது வேற காரணங்களுக்காக, அந்தஸ்துனாலே இல்லையே! நட்பு அதுவும் பால்ய கால நட்பு அந்தஸ்தெல்லாம் பாக்காதுடா. வா, உனக்கு என் ஆத்துக்காரியை அறிமுகப் படுத்தரேன். இங்கேந்து உங்காத்துக்கு போரம்.”
என் கண்ணில் லெசா துளிர்விட்ட ஜலம் சித்தே கழிச்சு சின்ன நீரோடயா விஸ்வரூபம் எடுத்து கன்னத்தில் சரிய, தன் கர்ச்சீப்பை எடுத்து தொடச்சுக்கோன்னு தரான். உள்ளேந்து வந்த அஞ்சனா யாரிந்த மனுஷர் நம்மாத்துக்காரரை அழவச்சிண்டின்னு பாக்கரா.
No comments:
Post a Comment