Thursday, March 25, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −27

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −27

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)


386. ப்ரார்த்தனையாக தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டதை ஆறுமாதங்களுக்கு மேலாகச் செய்யாமல் தள்ளிப்போடக்கூடாது.

387. கோயில் கோபுரத்தையும், துவாரபாலகர்களையும் மரியாதையோடு வணங்காமல், கோயிலுக்குள் ப்ரவேசிக்கக்கூடாது.

388. பூஜை, ஜபம், அர்ச்சனை, ஹோமம் ஆகியவற்றுக்கான சங்கல்பத்தைச் செய்யும்பொழுது, முழு பெயரையும் சொல்ல வேண்டும்.

பெயர்களைச் சுருக்கியோ, செல்லப் பெயர்களையோ சொல்லக்கூடாது.

389. கோயில்களுக்குள் ப்ரவேசிக்கும்போது, வலது காலை முதலில் உள்ளேவைக்க வேண்டும்.

390. இரவு பத்து மணியைக் கடந்து கோயில்களுக்குள் ப்ரவேசிக்கக் கூடாது.

புதுவருடம் பனிரெண்டு மணிக்குப் பிறக்கிறது என்று சொல்லிக்கொண்டு, அந்த நேரத்தில்  கோயிலுக்குள் ப்ரவேசம் செய்வதற்கும், அர்ச்சனை/பூஜை செய்வதற்கும் நிர்பந்திக்கக்கூடாது.

391. காலையில் நீராடாமல், கோயிலுக்குச் செல்வதையோ, மற்றவர்களால் அளிக்கப்படுகின்ற ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்வதையோ செய்யக்கூடாது.

392. சனி பகவானைத் தவிர மற்ற தெய்வங்களுக்குக் கருப்பு நிற வஸ்திரங்களையும், கருப்புக் கரையை உடைய வஸ்திரங்களையோ படைக்கக்கூடாது.

393. விஷ்ணு ஆலயங்களில் கொடுக்கப்படுகின்ற தீர்த்தத்தை ஸ்வீகரிக்கும்பொழுது, அது கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக, கைகளின் கீழே ஒரு துணியை வைத்துக்கொள்வது நலமாகும்.

394. மூல சந்நிதியைச் சுற்றி ப்ராகரங்களில் அமைந்துள்ள துர்கை, தக்ஷிணாமூர்த்தி, நவக்ரஹங்கள் ஆகியவற்றைத் தனித்தனியாக ப்ரதக்ஷிண, நமஸ்காரங்கள் செய்வது தவறான செயலாகும். அனைத்து தெய்வங்களையும் ஒருசேர ப்ரதக்ஷிணம் செய்தே நமஸ்கரிக்க வேண்டும்.

395. கோயிலில் அமர்ந்திருக்கும்போது, நமது பின்புறம் தெய்வத்தை நோக்கி இருக்கக்கூடாது.

396. மார்கழி மாதங்களில் வீட்டுவாசலில் கோலமிட்ட பிறகு, அவரவர் வீட்டுப் பூஜைகளை முடித்துக்கொண்ட பிறகே, கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

397. கோயில்களில் ப்ரஸாதமாகக் கொடுக்கப்படுகின்ற மாலைகளையும் புஷ்பங்களையும் வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், நம்முடைய வாகனங்களில் வைக்கக்கூடாது. அதுபோலச் செய்வதால், துர்வாச முனிவர் அளித்த மாலையை, தனது ஐராவதத்திற்கு இட்டு, பிறகு முனிவரின் சாபமடைந்து வருந்திய தேவேந்திரன் நிலையை நாமும் அடைவோம் என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

398. விஷ்ணு கோயில்களில் வழங்கப்படுகின்ற பொங்கல் மற்றும் இதர பிரசாதங்களை அங்கேயே உண்ணக்கூடாது. அவற்றை வீட்டிற்குக் கொண்டுவந்தே உண்ண வேண்டும்.

399. பூஜைக்காகக் கொண்டு செல்லும் புஷ்பம், துளஸி ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக்கூடாது.

400. மற்ற அறைகளிலிருந்து பூஜை அறையை, குறைந்தபட்சம் ஒரு மரத்தடுப்பை வைத்தாவது தனிமைப்படுத்த வேண்டும். இது வீட்டினுள் கெட்ட அதிர்வலைகள் நுழைவதையும், பூஜை அறையிலிருந்து வெளிப்படுகின்ற நல்ல அதிர்வலைகள் வீடு முழுவதிலும் பரவுதலையும் உறுதிப்படுத்தும்..

(வளரும்..)

No comments:

Post a Comment