95. நிறைகுடம் (சிசீ6) #ganeshamarkalam
எம்பொண் மகதி படிக்கும் ஸ்கூல்ல டீச்சர் கேட்டாங்களாம் “உங்கப்பா என்ன செய்யராங்க?” ”வாட்டர் வெசல்ஸ் பிசினஸ்” அப்பட்டீன்னு சொல்லிட்டாம். அன்புக்கு பெருமையாப் போச்சு. புரியாம “அப்படீன்னா என்ன?” “வாளி, குடம், டப்புலேல்லாம் தண்ணீதானேப்பா புடிச்சு வச்சுக்கராங்க, நீ அந்த பிசினேஸ்தானே செய்யரே, அதான் அப்படி இங்ளீஷில் சொல்லிட்டேன்.” இப்ப எனக்கும் பெருமையா பட்டிச்சு.
படிப்பு ரெம்பவே அவசியம் சார். நான் ஸ்கூலுக்கே போவல. அதான் சைக்கிளில் எம்புட்டு வச்சுக்கிட முடியுமோ அம்புட்டு வச்சு கட்டீட்டு தெருத்தெருவா சுத்தி கூவிக் கூவி வித்து நாலு காசு சம்பாதிக்கன். சென்னையில் இப்படிப் பொருட்களுக்கி ரெம்பவே கிராக்கி. தண்ணிக் கஸ்டம் பாத்தாத்தான் புரியிம். பித்தள எவர்சில்வர் குடங்களை பயன்படுத்தலாம்தான். யாரு தூக்கிட்டு ஓடரது? கனக்கிம். தண்ணிலாரி வந்திடும். வீட்டுலே இருப்பவங்க சின்னது பெரிசுன்னு வித்யாசமில்லாம எல்லாரும் ஒண்ணு தூக்கி பிடிச்சு வச்சாத்தே அன்னி பொளுது நாறாம களியும். மத்தாநா அதே கூத்து
லாரி இல்லைன்னா ரோட்டில் வச்சிருக்கும் சின்டெக்ஸ் டாங்கியில் இத்தனை மணிக்கு கார்பரேசன் கவுன்சிலர் ஆளுங்க தண்ணீ தொறந்து விடுவாகன்னு போய் நின்னம்னா டயத்துக்கு மாட்டாங்க. அதுனால ராவுக்கே போய் ப்ளாஸ்டிக் குடத்தை வரிசையில் வச்சிட்டு வந்திடுவாக. பித்தளைன்னா திருட்டுப் போகும். இத 80ரூபாய்க்கு விக்கம். சைஜ் வாரியா.
தண்ணிக்கு அடிச்சுக்குவாங்க. வரிசை மீறி வந்திட்ட, அளவுக்கு அதிகமா தண்ணி பிடிச்சிட்டான்னு எடுத்ததுக்கெல்லாம் சண்டை வந்திடும். நேத்துத்தான் இவிங்க வீட்டு விசேசத்துக்கு அவிங்க போயிருப்பாங்க, மொய் எளுதிருப்பாக ஆனா தண்ணி வரிசேல அம்புட்டு அசிங்கமா திட்டிகிட்டு பாக்கவே க்ஸ்டமா இருக்கிம். அன்னைக்கு சைக்கிள தள்ளீட்டு கூவிட்டே போரேன் ஒரு பொம்பளை வயசு 45 இருக்கும் வரிசைல நின்னவ பின்னால இருந்தவள மண்டையில் ஒரு போடு போடரா. குடம் டொக்கு விளுந்திரிச்சி. எதுக்கு அடிச்சா? தெரியாது. ஆனா என்னமோ நடந்திடிச்சி. அத்தோட போச்சான்னா இல்ல. அடிச்சவள இவ திட்ட ஆரம்பிக்கரா. நின்னு நிதானமா. பாலசுப்ரமணியம் மூச்சு இளுத்து பாடுவாரே அப்படி வார்த்தை இடைவெளி இல்லாம சரளமா. கவனமா கெட்டீங்கள்னா காது அளுகி விளுந்திடிம்! அடிச்சது இவ. திட்டினது அடிச்சவ அம்மாவ, அவ பெத்த பொண்ண, அவ வீட்டுக்கு வந்த மருமவள. அவிங்க உடம்பில் என்னெல்லாம் இருக்குதோ அதையெல்லாம் வரிசையாச் சொல்லி அதுகளை வச்சி என்ன செய்வாகன்னு விளக்கிட்டு அளிஞ்சு போவன்னு சாபம் கொடித்திச்சு.
தண்ணிக் குடத்தை வச்சிட்டு சண்டைன்னு வந்தா நாங்க விக்கர இந்த பிளாஸ்டிக் குடம்தே சேஃப்டி. அதான் ப்ளாஸ்டிக்க தடை செஞ்ச அரசாங்கமே இதை விட்டூட்டாங்க. தடை செய்யல. இல்லைன்னா அன்னைக்கு இவ மண்ட ரெண்டாப் போயிருக்கும். அம்புட்டு சுவாரஸ்யமா திட்டத கேக்க முடிஞ்சிருக்காது.
எம்பொண்ணு நான் பிசினெஸ் செய்யரேன்னு சொல்லிட்டா. ஆமாம்னு நினைச்சுக்கிடிதேன். இந்த சமாச்சாரங்கள ஈகாட்டுத்தாங்கலில் ஒரு ஃபேக்டரீலே போய் வாங்கியாந்து லாபம் வச்சி விக்கரது. அப்படீன்னா பிசினெஸ்தானுங்களா? சரி. போன மாசம் அங்கே போயிருந்தப்ப இங்கேயே வேலைக்கு வந்திடியான்னு கேட்டாக. மாசா மாசம் நிம்மதியா சம்பளம் உத்தரவாதம். கிடந்துபுடலாம். இப்படி சுத்திக்கிட்டிருப்பதில் ஒருநா வியாபாரம் நல்லா, இன்னொருநா ஒண்ணுமே விக்காது, திரும்ப வீட்டுக்கு கொண்டாந்திருவன். ஒரு நாளைக்கி ஒரு இடம்னு போயி, வெள்ளிக்கிளமை பல்லாவரம் சந்தையில. அப்ப குறஞ்ச விலைக்கு கொடுத்திடரது.
இன்னும் கொஞ்சநா பாக்கலாம் அப்பரவு நிரந்தர வேலைலே சேருவதா இல்லை வேற ஏதாச்சியிம் தொளில் செய்யலாமான்னு யொசிச்சுக்கிடலாம்னு. எனக்கும் எம்பொஞ்சாதிக்கும் பிள்ள நல்லா படிச்சிடணும். அது தலை தூக்கிடிச்சுன்னா குடும்பமே தலை தூக்கிடும். எம்புட்டு நல்லா படிக்குது. பாருங்க! டீச்சர் கேட்டதுக்கு கவுரதையா பதில் சொல்லியிருக்கு?
என்பேர் தண்டபாணி. என் வூட்டுக்காரிய அன்புன்னு கூப்பிடுவேன். அவிங்க வீட்டில் வச்ச பெர் அரசாணி. “நல்லா இல்லை கட்டிக் கிட்டதும் மாத்திப்பிடுவன்” சொல்லி சம்மதிச்சப்பரம்தே கட்டிக்கிட்டேன். பேருக்கேத்தாப்போல் அன்பை கொட்டி என்னையும் எம்பொண்னையும் பாத்துக்கிடிம். நான் அநாதைன்னு தெரியும். சட்டுன்னு அந்த துக்கம் மறக்கடிச்சிருச்சி. கட்டிட்டு கூட்டிட்டு வந்ததும் சொல்லிச்சி, “இனிமேல் நீங்க நான் நமக்கு பிறக்கபோர குளந்தைதான் நம்ப உலகம், ஞாபகம் வச்சுக்கிடுங்க, இதில் வேற யாரும் வாராமா பாத்துக்கிடுதென். நீங்களும்”. சொல்லி வச்சாப்போல மகதி வந்து பிறந்திச்சி. பொண் குளந்தையா போச்சுதேன்னு அன்பு கவலைப் பட்டிச்சு. “அதைப் பத்தி நானே யோசிக்கலை உனக்கெதுக்கு விசனம்?” மாமீயா ஆஸ்பத்ரீக்கு வந்தப்ப “என்ன பிள்ள அரசாணி? இப்படி பண்ணிப் பிட்டயே?” புலம்பிச்சு. அப்ப சொன்னேன் “நம்ப குடும்பத்தில் யாரையும் உள்ளே விடக் கூடாதுன்னு நீயே சொல்லிப்பிட்டு உங்காத்தா புலம்பினதை ஏன் சொல்லிட்டி?” சந்தோசத்துல ஆசையா என்ன கட்டிகிட மாமியா சொன்னத மறந்திட்டன்.
பிள்ளய நல்லா படிக்க வைக்கோணும்னு எதுனாலும் நம்ப சந்தொசத்தை குறைச்சிட்டு அதுக்கு குறையில்லாம பாத்துக்கிடணும்னு. அது பிரியப் பட்டதை வாங்கித் தந்து, பிடிச்சதை வாய்க்கு ருசியா ஊட்டிவிட்டு. வேடிக்கை என்னன்னா அதுவும் இது வேணும்னுனு அடம்பிடிச்சு அளுது நாங்க பாத்ததில்ல. மகதீன்னு ஏன் பேர் வச்சம்னா அன்பை பிரசவத்துக்கு ஆஸ்பத்ரீலெ சேத்துட்டு வாசல்ல டீக்கடையில் காத்துக் கிடக்கன். ரேடியோவில் “நெஞ்சே நெஞ்சே” பாடல் வந்திட்டிருக்கு. “என்ன படம், யாரு பாடராக?” விசாரிச்சதில் சொன்னாங்க. “அயன்” படமாம். மகதின்னு ஒரு பொண்ணு பாடிச்சாம். பேரே புதுசா இருக்குதே அப்படின்னா என்ன அர்த்தம்னு கெட்டேன். டீக்கடைக்காரன் “ரெம்ப ஆலம்பாதே! படிச்சவங்க கிட்டே போய் கேளு” தொறத்திப் புட்டான். அப்பரம் பொம்பள பிள்ள பொறந்திச்சுனு தெரிஞ்சிகிட்டதும் அந்தப் பேர்தான் அன்புகிட்டே சொல்லிட்டேன். “அர்த்தம் தெரியாம வச்சா எப்படி?” கேட்டுட்டு வான்னு அனுப்பிச்சு. அப்பரமா ஒரு தமிழ் வாத்தியார் ஆம்பிட்டாரு. அவக சொல்ல அர்த்தம் தெரிஞ்சிட்டு வச்சிட்டம்.
மகதிக்கு இப்ப வயசு 9. 4ஆப்பு படிக்குது. வீட்டுலே இருக்கப்போ அது புஸ்தகத்த எடுத்து நானும் வச்சுக்கிடுவேன். ஒண்ணும் புரியாது. ஆனா பெரீய படிப்பு படிக்குதுன்னு மட்டும் புரிஞ்சு கிட்டேன். ஒரு நாளைக்கு தமிழ் பாடத்தில் பாரதியார் பாடல் ஒண்ணு படிச்சுக் காமிச்சிச்சு. சட்டுன்னு ஒண்ணு தோணிச்சி. சனிக்கிளமை இதுக்கு ஸ்கூல் லீவாச்சே. சைக்கிளில் கொஞ்சம் வாளிய குறச்சுப்புட்டு அதை ஏத்திகிட்டு “கூட வா வியாபாரம் பாக்கலாம்.” கிளம்பிட்டேன். அன்புக்கு ஆச்சர்யம். “எம்பிட்டு தூரம் சின்னப் பிள்ளய கூட்டிப் போரீக?” “கிட்டத்தான் பாரதியார் வீட்டக் காமிச்சிடு வந்திடுவன்”. பல்லாவரத்துலேந்து திருவல்லிக்கேணி போரேன்னு சொன்னா விடாது. ரெம்பத் தொலைவாச்சுதே!
வர வளீலே கேகே நகரில் ரண்டு வாளி வித்துச்சு. மகதி எப்படி அப்பா வியாபாரம் செய்யராகன்னு பாக்குது. அப்பரவு மிதிச்சிட்டே வெஸ்ட் மாம்பலம் போரப்ப, “அவிங்க குறச்சுக் கேட்டாங்க நீ குடுத்திட்ட? நமக்கு நஸ்டம் இல்லையாப்பா?” “இல்ல பாப்பா. சொல்ரப்ப கொஞ்சம் கூட வச்சித்தான் விலய சொன்னேன்.” “அப்படி பொய் சொன்னா தப்பில்லையாப்பா?” என்ன சொல்ல? பிள்ளைக்கு நாம சொன்ன பொய்யிலும் ஒரு நியாயம் இருப்பத எப்படிச் சொல்ல? சொன்னா அதை தப்பான வளிகாட்டியா எடுத்துக்கிச்சின்னா?” இரிந்தாலும் சொல்லுதேன். “அப்பாரு மொத்தமா வாங்கின விலை 50 ரூபா கண்ணு. லாபம் வச்சுத்தான் விக்கோணம். 100 சொல்லுவம். வாங்கரவங்களுக்கு குறைச்சு வாங்கினா அவிங்க காசு மிச்சம் செஞ்சிட்டாப்பல சந்தோசப் படுவாங்க. அதுக்கு கொஞ்சம் குறைச்சுக்கிடுவன். இப்ப எல்லாமுமா விக்கப் போவுது? வீட்டுக்கு திரும்பப்ப கையில் கொஞ்சம் மிஞ்சும். நாமளும் சாப்பிட வேணாவா?” 50ரூவா பொருள 80க்கு தந்தா ஏமாத்தரதில்லையா?” “இல்லைம்மா.”
“எப்படி, எனக்கு புரியல?” படிக்குதில்லை? கேட்டுத்தேன் தெரிஞ்சுக்கிடணும். எல்லாம் புஸ்தகத்தில் சொல்லுவாங்களா என்ன? அவிங்களெ ஃபேக்டரீலே போய் வாங்கிட்டா 50க்கு கிடைக்கும். ஆனா சைக்கிளில் வேகாத வெய்யல்ல இவிங்க இருக்க இடத்தில் கொண்டாரனே, அதுக்கும் சேத்து காசு கேட்டு வாங்கிக்கிடதேன். அம்புட்டுத்தேன்”. என்ன நினைச்சிச்சோ அப்பரவு ஏதும் கேட்டுக்கிடலை.
நேர திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் வந்திட்டம். சைக்கிள சாமானோட வாசல்ல திண்ணைகிட்ட வச்சிட்டு பாப்பாவ கூட்டிட்டு உள்ளே போரேன். “மகதி கண்ணு, அப்பாவுக்கு கால் நோவுது. நான் இங்கேயே உக்காந்திகிடுதேன். நீ போயி சுத்திப் பாத்திட்டு வா. அன்னைக்கி பாரதியார் பாட்டுப் படிச்சீல, அவரு வாள்ந்த வீடு புள்ள.”
உக்காந்திட்டுருக்கன். இவ நல்லா சுத்தீ பாத்திட்டி பக்கத்துலே வந்து உக்காந்துகிடரா. “போலாமா?” “இருப்பா, இங்கேயே கொஞ்சம் இருப்பம்.” எதுத்தாப்புலெ பாத்தசாரதி கோவில். கன்னதுலே போட்டுகிட்டன். “பாரதி பத்தி உனக்கு தெரியிமா?” சுதந்திர போராட்ட வீரர்னு சொல்லுதாக. பாட்டெளுதுவாராம் கேக்கரவங்கிளுக்கு வீரமா வந்திடிம்னு கேள்விப் பட்டிருக்கன். அம்புட்டுதே. நான் எங்கே தாயி உன்னப் போல ஸ்கூலுக்கு போன்னா என்ன?” “நான் சொல்லட்டுமா?” “சொல்லு தாயீ!”
“டீச்சர் சொல்லித் தந்தாங்கப்பா. கேட்டுக்க. எட்டயபுரத்தில் பொறந்தவர் எட்டாத ஊசரத்துக்கு வளர்ந்தவராம். மண்ணடிமை, பெண்ணடிமை இதையெல்லாம் ஒளிச்சிடணும்னு பாடுபட்டவராம். சீட்டுக்கவின்னு சொல்லுவாங்களாம். சிட்டுக் குருவியும் இவர் பாட்டக் கேட்டா உசர பறக்கலாம்னு தெகிரியம் வருமாம். எல்லா உயிரினங்களும் என் ஜாதீன்னு சொல்லிட்டி கண்ணனை ஆசையாப் பாட்டில் வர்ணிச்சாராம், நம்பள மாதிரி ரெம்ப வறுமையிலும் யார்கிட்டேயும் கை நீட்டாம பெருமையா வாள்ந்தவராம், கொஞ்சங்கூட தற்பெருமை காட்டாம சக மனுசங்களை, குறிப்பா மத்த புலவர்கள பாராட்டி, ஞானிகளுக்கு மருவாத தந்து சின்ன வயசுலேயே இங்கேதான் எதுக்கால கோவில் யானை மிதிச்சு செத்துப் போயிட்டாராம். இங்கே ஏன் என்ன கூட்டியாந்த, அத சொல்லு?”
“தெரியல தாயி. நீ பாட்டுப் படிச்சீயா, எனக்கு இவர் வீடு இங்கே தெரியிம். இடத்த காட்டிடணிம்னு தோணிச்சி. அம்புட்டுதே”. “சரியாத்தேன் செஞ்சிட்டாய். டீச்சர் பாரதியார் பத்தி சொல்லுதப்ப ஒரு வார்த்தை சொல்லீச்சு. நிறைகுடம்னு. என்ன அர்த்தம்னு கேட்டேன். தண்ணீ ரெப்பி வச்சிட்டா அந்த குடம் நிறைகுடமா டீச்சர்னு. இல்லை, நிறைகுடம்னா நிரம்ப அறிவும் பக்குவமும் நிறம்பிய மனுஷங்களை அப்படிச் சொல்லுவம், ஆனா அவிங்க அப்படீன்னு காமிச்சுக்கிடவே மாட்டாங்க. எப்படி நிறஞ்ச குடத்திள நீர் எடுத்துப் போகையிலே தளும்பாதோ அப்படி கொயட்டா. இங்கே வந்து பாத்ததிம் அப்படிப்பட்ட ஒருவர்தான் இங்கே வாள்ந்திரிக்கோணும்னு புரிஞ்சிகிட்டேன். தேங்க்ஸ்ப்பா”.
எம்பொண்ணு இப்படிச் சொன்னதும் வெக்கமாப் போச்சுது. யாருமே எனக்கு இதுவர தேங்க்ஸ் சொன்னதில்ல!
“நீ இங்கே உக்காந்திட்டு பாத்திட்டிரு, உன் சாமானெல்லாம் இப்ப வித்துக் காமிக்கரேன்”. சட்டுன்னு வாசப்படீலே இறங்கி சைக்கிளாண்ட பொய் நின்னிட்டு “குடம் வாங்கலையோ, பக்கிட் வாங்கலையோ!” என்னை போலவே எம்பொண்ணு கூவ மனசு பதைபதச்சுப் பொச்சு. நாம செய்யர இந்த தொளில் எம்புள்ல செய்யக்கூடாதின்னு நினச்சம், இது என்னடா இப்படி ஆகிடிச்சேன்னு பயந்திட்டன். அன்புக்கு தெரிஞ்சா கொன்னே போட்ரும். எளுந்து அதை எப்படியாச்சியும் தடுக்கோணும்னு பாக்கப்ப இவளச் சூத்தி 4 பேர் கூடிட்டாக. சரி என்னதே ஆகுதுன்னி பாப்பம்னு நிக்கேன்.
சட சடன்னு எல்லாத்தையும் வித்துபுட்டு கையில் காசை வச்சிடிச்சு. நான் விக்கரதைவிட 200ரூ கூட! குடம் வாங்கினவங்க எல்லாம் பக்கிட்டும் எடுத்துகிட்டத பாத்தேன். இது என்ன செஞ்சிருக்குன்னா ரெண்டின் விலையையும் சேத்துச் சொல்லி அப்ப்பரவு கொஞ்சம் குறச்சி ரெவ்வெண்டா குடுத்திருக்கி. தனியா பேரம் பெச வுடாம ஜோடியா வாங்கினா இம்புட்டுக்குத் தரேன்னு. எல்லாமும் வித்துப் போச்சுதே. எம்புட்டு புத்திசாலித்தனம்? தெரியவேயில்லையே.
காசை சட்டப் பையில் வச்சிட்டு குளந்தைக்கு பசிக்கிமேட்டு இளநீ வாங்கித் தாரேன். தேங்காயோட. “அம்மாக்கு ஒண்ணு வாங்கிக்கிடு” ஞாபகமா சொன்ன அளகு அனுபவிச்சாத்தே புரியிம். சைக்கிள பல்லாவரத்துக்கு மிதிக்கேன். காத்துலே மிதக்காப்புலே. நினைச்சுக்கிடுதேன். மகதீன்னா அன்னைக்கு வாத்தியார் சொன்னது க்ரேட், உன்னதம், மிகச் சிறந்தன்னு இன்னும் அதே அர்த்தத்தில் என்னென்னமோ சொல்லிட்டே போனாரு. எம்புட்டு வருசமா காலிக் குடத்தை வித்திட்டிருந்த எனக்கு, அந்தக் குடம்போல காலியா கிடந்த என் வாள்க்கையிலே சந்தோசம் நிறப்பிட்டாப்போல.
மகதீன்னா "நிறைகுடம்"னு சேர்த்துக்குங்கன்னு சொல்லுவேன்.
No comments:
Post a Comment