17. திருப்பாதிரிப் புலியூர் (சிசீ6)
#ganeshamarkalam
கடலூர் கிட்டக்க சின்ன ஊர். கடலூர்னே வச்சுக்கலாம். மெயின் கடலூர் தென்பெண்ணைக்கும் குடிலத்துக்கும் நடூலே. பாண்டிச்சேரீலேந்து வரச்சே இந்த ரெண்டு ஆத்துப் பாலங்களையும் தாண்டினதும் ஒரு ஜங்க்ஷண் வரும். கசாமுசான்னு. இடதுபக்கம் திரும்பி நேரப் போனா சிதம்பரம். திரும்பாம நேரப் போனா திருப்பாதிரிப் புலியூர்.
சின்ன ஊர். ரெங்கநாயகி இங்கேதான் பொறந்து வளர்ந்து, படிப்பு முடிச்சது எல்லாம். யார் ரெங்கநாயகி? நான்தான். எங்காம் பாடலீஸ்வரர் கோவில் பக்கத்தில். சதாசிவ ரெட்டித் தெரு. வடகலை. ஆனா இருப்பது ஈஸ்வரன் லோவில்கிட்டே. எங்கப்பா அதெல்லாம் பாக்க மாட்டர். நாங்க ஐயங்கார் இருக்கம், கோவில்ல பெருமாள ஏளப்பண்ணுன்னு சொல்லவா முடியும்? இதே குடிலம் ரிவர் வளைஞ்சு வளைஞ்சு போகும். இதே ஆத்தங்கரையில் அந்தண்ட தேவநாதசுவாமியும், லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலும். ஆட்டோ பிடிச்சா 3 கிமீ. அங்கேயும் கும்பிட்டுப்பம்.
இப்ப அது பிர்ச்சனையில்லை. என் அத்தை பையன்தான். சாரங்கபாணி கும்மோணத்தில் கப் பேங்கில் பெரீய வேலை, சி.ஏ பண்ணிட்டு கை நிறைய சம்பளம். அத்திம்பேர் தாசில்தார். அத்தையாம் கருடாழ்வார் கோவில் கிட்டக்க பி. ஷண்முகம் தெரு. சின்ன வயசில் அப்பா அழைச்சிண்டு போனர். “ஒரே அக்கா, அத்திம்பேர், சொந்தம்னு சொல்லிக்க அவாதான்”. சின்ன வயசில் உறவு முறையெல்லாம் தெரியாது. நானும் அத்திம்பேர்னு கூப்பிடரேன், அப்பாவும் அப்படியே கூப்பிடரார், அப்படீன்னா இவர் கும்மோணத்தில் எல்லாருக்கும் அத்திம்பேரோன்னு பட்டது.
“என்னை பேர் சொல்லிக் கூப்பிட்ரா வாசுதேவா!” அத்திம்பேர்னா வயசு கூடப் காண்பிக்கரதாம். வெகுளியா, “நான் உங்களை எப்படிக் கூப்பிடரது?” கேட்டு வச்சேன். “நீ எம் செல்லம்டீ ரெங்கீ, அத்திம்பேர்னே கூப்பிட்டுக்கலாம். அப்பரமா எங்காத்துக்கு மருமகளா வந்தப்புரம் அப்பான்னே கூப்பிடலாம்.” எடுத்துக் கொடுத்தவர் அவர்தான். திண்ணைலே உக்காந்திண்டு விளையாட்டா என்னை மடீலே வச்சிண்டு சொன்னப்போ எங்கப்பா “உண்மையாவா சொல்ரேள்?” “ஆமாம், இதிலென்ன சந்தேகம். உன் அக்காவும் இதைத்தான் பிரியப்படரா”.
அப்ப எனக்கு 8 வயசாம். சாரங்கன் 8ஆவது படிச்சன். அம்மா அவனை ‘மாப்பிள்ளை’ன்னு கட்டிண்டா. அவனுக்கு வெக்கமாப் போச்சு. நெளிஞ்சான். கன்னத்தில் சபக்குன்னு முத்தம் வச்சா. அழுத்தி துடெச்சிண்டே ஓடிப் போனன். அப்புரம் கும்மோணம் போக சான்ஸ் கிடைக்கலை. சாரங்கன் என்னெல்லாம் எடுத்து படிச்சானோ அதெல்லாம் நானும் படிப்பேன்னு அடம் பிடிச்சேன். ஆனா பாருங்கோ எனக்கு படிப்பே ஏறலை. பி.காம் 42 மார்க் வாங்கி பாஸ். செகண்ட் அட்டெம்ப்ட்டில். அப்பா தலைலே அடிச்சிண்டர். “இப்படி மக்கா இருக்கியே உன்னை சாரங்கன் எப்படி கல்யாணம் பண்ணிப்பான்?” லேசா பயம் வந்தது. அத்திம்பேரே ப்ராமிஸ் செஞ்சிருக்கப்போ ஏன் பயப்படணும்?
ஸ்கூல் தொறக்கப்போ, பரிக்ஷைக்கு போரச்சே பல ஊர்லேந்தும் ஜனங்கள் வந்து திருவந்திபுரம் ஹயக்ரீவருக்கு பிரார்த்தனை செஞ்சுண்டு போய் நல்ல மார்க் வாங்கிப்பா. நானும் மலையேறிப் போய் செய்யாமலில்லை. மார்க் போடாம விட்டுட்டர்.
சாரங்கன் காலேஜ் முடிச்சதும் ஒருக்கா மாமாவாத்துக்கு வந்தான். திருச்சி ஹாஸ்டலில் தங்கி சுதந்திரமா படிச்சவன் நன்னா வளர்ந்து ராஜா போல் வாட்ட சாட்டமா. அவன் அப்பாவை விட உசரமா. ரெண்டுநா தங்கிட்டு, மஹாமகம் வரது எல்லாரும் வரணும்னு அழைப்பு வேற. “என்னாலே எங்கேடா வர முடியறது, மாமியையும் ரெங்கநாயகியையும் அனுப்பி வைக்கரேன். இப்போ இந்தூர் கோவிலுக்கு போகாம திரும்பிப் போகாதே.” சொல்லி “ரெங்கி, சாரங்கனை சாயங்காலமா கோவிலுக்கு அழைச்சிண்டு போய் காட்டீட்டு வா”. வெக்கமாப் போச்சு. ஆனா இப்படிப் போனாத்தான் அவனோட தனியா பெச முடியும், அவன் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.
அம்மா அப்பாவ தனியா அழைச்சிண்டு போய் ‘வயசுப் பொண்ணை அனுப்பரேள்’னு குசுகுசுன்னு திட்டினா. சாரங்கன் மாடீலே துவச்சு போட்ட வேஷ்டீயை காயப் போட போயிருக்கான். காய்ஞ்சாத்தான் நைட் போரச்சே எடுத்து மடிச்சு வச்சிக்கலாம். மஹாமகத்துக்கு 3 மாசமிருக்கு. அதுவரைக்கும் வேஷ்டீ இங்கேயே தங்கிடும். இதிலெல்லாம் ரெம்பவே கரெக்டா இருப்பானோ! அப்பாதான் “என்னைக்கு இருந்தாலும் ரெங்குவ கட்டிக்கப் போரவன், சின்னஞ்சிருசுகள் போய்ட்டு வரட்டும், கோவிலுக்குத்தானே!”
சாரங்கன் உசரத்துக்கு ரெண்டு எட்டு எடுத்து வச்சா நான் 4 வைக்க வேண்டியிருக்கு. அம்மா வேற புதுப் பாவாடையும் தாவணியையும் போட்டுக்கோன்னு. அட்ரேக்டிவ்வா இருப்பேனாம். சித்தே மின்னாடி அனுப்பவே மாட்டேன்னு குதிச்சா. இப்ப காஸ்ட்யூம் எடுத்துத் தரா. கோவிலப் பத்திச் சொல்லணுமா வேண்டாமா? “சாரங்கா, இப்ப நாம பாக்கப் போர கோவில் ஈஸ்வரனை ஒருதடவ தரிசனம் செஞ்சா காசிக்கு 16 தடவையும், திருவண்னாமலைக்கு எட்டு தடவையும், சிதம்பரத்துக்கு 3 தடவையும் போனாப்போல் பலனாம்”. “நிறுத்து. அப்படீன்னா பாடலீஸ்வரர் காசி விஸ்வந்தாரை விட அத்தனை பெரீயவரா?” பக்குன்னுது. அப்படியெல்லாம் இருக்காதே. “அப்படித்தான் போலேருக்கு”. தயங்கிண்டே சொல்ரேன். நான் சீரியஸா மூஞ்சிய வச்சிண்டதை பத்து பகீர்னு சிரிக்கரான். “டீ ரெங்கீ, விளையாட்டு பண்ணேன்”.
“இதெல்லாம் உனக்கு யார் சொல்லீத் தந்தா?” “எல்லாம் படிச்சதுதான்”. “இத்தனை ஞாபகம் வச்சிண்டு சொல்ராய், பாடத்தில் படிச்சது மட்டும் நினைவில் இருத்திக்க முடியலையோ?” கட்டிக்கப்போர முறைப் பையன் இப்படி சொன்னா? அவமானமாப் போச்சு.
2000 வருஷம் புராதனமான கோவில். எல்லாம் பாத்ததும், “ஆம் கிட்டக்கத்தானே இருக்கு, மாமி இன்னும் சமையல் முடிச்சிருக்க மாட்டா, 11 மணீக்குத்தான் பஸ், வா சித்தே உக்காந்துட்டுப் போலாம்.” கொடிமரத்துகிட்டே நமஸ்காரம் செஞ்சுட்டு உக்காந்திண்டம். அப்பத்தான் வெக்கத்த விட்டு கேட்டுட்டேன்.
“என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” “அப்படீன்னா?” இது என்ன ரெஸ்பான்ஸ்? என்ன கேக்கரேன்னு இவனுக்கு புரியலையா? எல்லாத்தையும் நானேவா சொல்லணும்? “உனக்கு ஞாபகம் இருக்கோ, நாங்க கும்மோணம் வந்தப்போ…” இழுத்தேன். “நீ எப்போ அங்கே வந்த? நினைவில்லையே.” வந்ததே ஞாபகத்தில் இல்லைன்னா அத்திம்பேர் சொன்னதை எப்படி? டாபிக்கை விட்டூட்டேன். பாப்பம், பிராப்த்தம் இருந்தா. ஏர்பேக்கில் காயப்போட்ட துணி, ஃப்ளாஸ்க்கில் சுவாதீனமா மாமிகிட்டே கேட்டு வாங்கி ரொப்பிண்ட ஹார்லிக்ஸ் எல்லாத்தையும் மறக்காம வச்சுக்க துணையா கூடவே நின்னேன். வரேன்னுட்டு கிளம்பிப் போனவன் முகம் இன்னைக்கும் மறக்கலை.
அப்புரம் அவன் எம்.காம், சி.ஏ, இன்ட்டெர்ன்ஷிப் பண்ணி, கடைசீலே கப்பில் உத்யோகமும் கிடெச்சதை அப்பப்ப வந்த கடுதாசுகளை வச்சுத்தான். எனக்கும் 22 ஆச்சு. படிப்பேறலையா, ஆத்துலேயே அம்மாவோட கூட மாட. அப்பா ஜாதகக் கட்டை எடுத்தார். “சாரங்கபாணி கோவிலில் வச்சு கல்யாண பெச்சை ஆரம்பிப்பம், அக்காவே பொண்ணக் கொடூன்னு கேட்டுண்டு வரட்டும், நாம வெளீலேயும் பாத்திண்டிருப்பம்.” ஆரம்பிச்சர். அம்மாதான் “நீங்க சம்மதம்னு சொன்னா நானே நாத்தனாரண்ட பேச்சை விடரேனே?” “அதெல்லாம் பாத்துண்டு செய்யலாம். கும்மோணம் போய்ட்டு கோவிலில் வச்சு அப்புரம் அக்காவாத்துக்கும் போய்ட்டு அவா மனசில் என்னன்னு சூசகமா தெரிஞ்சிண்டு வரேன், பேசலாம்”.
என்னை வச்சிண்டே இவா பேசிப்பதும், என் காதுபட வேற நல்ல மாப்பிள்ளையா ரெங்கநாயகிக்கு பாந்தமான்னெல்லாம் சொல்லிப்பதும் என்னை பாடாப் படுத்தித்து.
அப்பா கிளம்பிப் போனதும் அம்மாகிட்டே மெதுவா, “சாரங்கனுக்கு என்ன சம்பளம் தராளாம்?” “தெரியலைடீ. சீனியர் மேனேஜர்னு சொன்ன ஞாபகம்.” சித்தே இருன்னுட்டு மாடிப் போர்ஷணில் ஐ.ஓ.பி.யில் இருக்கர் அவரண்டை விசாரிக்கரா. “மாசம் 38 டு 40 கொடுப்பா, கப் நன்னா போயீண்டிருக்கு”. 1980களில் அது பெரீய சம்பளம். நாமளோ ஜஸ்ட் பாஸ். நன்னா படிச்ச பொண்ணா வேணும்னு இருந்தா? வேலைக்குப் போகும் சம்பாதிக்கும் பொண்தான் வேணும்னு வச்சிருந்தா? அதெல்லாம் முடியாது அத்திம்பேர் வாக்குத் தந்துட்டர், என்னைத்தான் பண்ணிக்கணும்னு அடம் பிடிக்கவா முடியும்? இன்ன தேதிக்கு கல்யாணம் மாமாவும் மாமியும் 4நா மின்னாடி வந்து இருந்து ஆசீர்வாதம் செஞ்சுட்டுப் போங்கோன்னு லெட்டரோட பத்திரிகை வந்தா நேர வந்து கூப்பிடக்கூட வேண்டாம், அப்பா தவ்விக் குதிச்சிண்டு போவர். நாம வேணா உடம்பு முடியலைன்னு போகாமம் இருக்கலாம். வயசுப் பொண்ண தனியா விட்டூட்டுப் போமாட்டா. இழுத்துண்டு போவா.
என் சாரங்கன் இன்னொருத்தி கையப் பிடிச்சு அக்னிய வலம் வரதை நான் பாத்து மனசுக்குள் அழணுமோ? இவன் அங்கவஸ்திரத்தையும் அவள் கூரப் புடவைத் தலைப்பையும் முடிச்சு வேர போடுவா. அப்பா வரட்டும். ஏதாவது செய்தி கொண்டு வருவர். இந்த சாரங்கபாணி எனக்கா இன்னொருத்திக்கான்னு அந்த சாரங்கபாணி சொல்லியனுப்புவர். அதுவரைக்கும்? தோணித்து, பாடலீஸ்வரரையும் பெரீயநாயகியையும் சேவிச்சா காசிக்கே அத்தனை வாட்டிப் போன புண்யமாச்சே, போவம்னு கிளம்பி வந்துட்டேன். அம்மா ‘நானும் வரேண்டீ’ன்னு கிளம்பினா. “நீ ஆத்துலேயே இரு, நான் போனாப் போதும். முழுக் குடும்பத்துக்கும் சேர்த்து வேண்டிப்பேன்”.
அன்னைக்கு சாரங்கனோட சுத்த வந்த இடமாத்தான் தெரிஞ்சதே தவிர கோவிலா ஃபீல் ஆலை. அவனை மனசுலெ ஓரமா வச்சிண்டு ஈஸ்வரா எனக்கு ஒரு நல்லவழி காட்டிடுன்னு வேண்டிக்கரேன்.
அப்பா எதிர்பாத்தாப்போல் கார்த்தாலே 6மணிக்கு ஆத்துக்குள் நுழைரர். குளிச்சிட்டு காபி டிப்பன் சாப்டவரைக்கும் வாயே தொறக்கலை. நானும் அம்மாவும் அவர் முகத்தை பாத்துண்டே சுத்தி வந்தம். அவரோ எங்க முகத்தை நேர்கொண்டு பாக்கத் திராணியில்லாதவர் போல் தரையையே என்னமோ புதுசா மொழுகிட்டாப்போல் பாத்துண்டு. உப்மாதான். சாப்டு கையலம்பிண்டதும் “போன காரியம் என்னாச்சு. இப்படி வாயத் தொறக்காம இருந்தா?” நன்னா ஒரு விடு விட்டள். காலியான காப்பி டம்ப்ளரை ஆயுதம் போல் கையில் பிடிச்சிண்டு இவள் கேட்ட தோரணை உடனே சொல்லலைன்னா நெத்தீலே தழும்பாயிடும்னு புரிஞ்சிண்டிருப்பர்.
“2 மாசத்தில் சாரங்கன் யூ.எஸ் போரானாம். எங்கேயோ பாத்துட்டு அப்ளை செஞ்சிருக்கான், போன்லேயே இன்டெர்வ்யூ செஞ்சு வேலைக்கு எடுத்துண்டுட்டாளாம். சேஸ் மன்ஹாட்டனாம். ந்யூ யார்க் சிடி. மாசம் 12ஆயிரம் டாலராம். அத்திம்பேரும் “பேஷா போய்க்கோடா, இங்கே கும்மோணத்தில் என்னத்தைன்னு வளருவாய்” அப்படீன்னராம். இந்தாடீ ஜாதகத்தை கோவிலில் வச்சு கொண்டு வந்திருக்கேன். அக்கா அத்திம்பேரப் பாக்கப் போனேன். சாரங்கன் ஆபீஸில். உபசரிச்சா, எப்பவும்போல். நாம இருக்கும் நிலமையில் அவா ஏணி வச்சாலும் எட்டாதுன்னு தோணிடுத்து. பேச்சையே எடுக்கலை. பெசாம வந்துட்டேன். என்ன வேலையா கும்மோணத்துக்கு வந்தேனு அக்காதான் கேட்டா. ரெங்கநாயகி ஜாதகத்தை பெருமாள் கிட்டே வச்சு பிரார்த்தனை செஞ்சுக்கன்னு சொன்னேன். ஒண்ணும் கண்டுக்கலை”.
சினிமாவுலே வராப்போல் ஓடிப்போய் அழுதுண்டே கட்டிலில் குப்புர விழணும்போல் பட்டது. ஆனா நின்ன இடத்துலேந்து கால் நகர விடலை. அம்மா என்னை தீர்க்கமா ஒரு பார்வை பாத்துட்டு அடுக்களைக்குப் போனா. அவாளப் பொறுத்தவரைக்கும் இந்த சேப்டர் குளோஸ். எனக்கு வாழ்க்கையே குளோஸ்னு தோணிடுத்து.
படியேறி வந்து மாடிப்படிமேல் திருப்பத்தில் காலை மடிச்சிண்டு உக்காந்துக்கரேன். ரெம்ப துக்கமா ஃபீல் ஆச்சுன்னா இங்கேதான். இனிமேல் இங்கேதான் பெர்மனென்ட்டா வசிக்கணுமோ.
1 மாசம் ஓடித்து. சாரங்கன் கிளம்பிப் போக எல்லா தயார் நிலையும் செஞ்சிண்டிருப்பான். பாஸ்போர்ட், வீஸான்னு. சென்னைக்கு போவன். புதுத்துணி, கோட் டையெல்லாம் வாங்கிப்பன். ஒரு நா காலங்கார்த்தாலே 6 இருக்கும், மொள்ல வாசத்தெளிச்சு கோலம் போட்டுக்கலாம்னு அம்மா கதவத் தொறந்து வச்சிட்டு பக்கெட் எடுக்கன்னு திரும்பரா. வாசல்ல அத்தை அத்திம்பேர். “அக்கா”ன்னு முகம் மலர சிரிச்சிண்டு “வாங்கோ வாங்கோ”ன்னு. “எம்பொண்ணு ரெங்கநாயகி எங்கே? பாத்து நாளாச்சு”ன்னு என் அத்திம்பேர், இல்லை அப்பா.
இன்னும் ந்யூ யார்க்கில்தான் ஜாகை. ட்ரிப்க்கான்னு லோவர் மன்ஹாட்டனில் பெரீய பணக்காரால்லாம் வசிக்கும் ஏரியாவில் சாரங்கனுக்கு சொந்த அப்பார்ட்மென்ட். எனக்கு 63 ஆச்சு. ரெண்டு பொண்களையும் ஜாம்ஜாம்னு பண்ணிக் கொடுத்தாச்சு. சாரங்கன் இப்பவும் பிஸி. லெக்ச்சர் சர்க்யூட். ஆனா எங்கேயும் வெளீலே தலை காட்ட முடியலை. கொரோனாவாம்.
அதான் பழச அசை போட்டுண்டு.
No comments:
Post a Comment