77. புலவர் பித்தன் (2 of 2) (சிசீ6) #ganeshamarkalam
மேகலை போல் பெண்கள் இல்லையெனில் சிற்பிக்கு கற்பனை எங்கிருந்து? வடித்தபின் சரியாக வந்தததாவென இவளைப் பார்த்து தீர்மானிக்கலாம். என்னைப் படைத்த ஈசன் என் நிம்மதியை குலைக்க இவளையும் படைத்தானோ! இவளைப் படைத்த கைகளையும் எவ்வூர் குஞ்சிதபாதத்தையும் தஞ்சமடைந்து விடணும்.
கனவில் பிதற்றிக்கொண்டே புரண்டவன் காலில் ஈரப்பசைபோல் எழுந்த உணர்வினால் தூக்கம் கலைய மேய்ச்சலுக்குப் போகும் பசு ஒன்று நீட்டிய என் பாதங்களை நக்கிச் சுவைக்க தன்னை தயார் செய்து கொள்வதை பார்த்து சட்டென்று எழுந்து உக்கார, மருவூர்பாக்கம் பழந்தரையர் வீட்டுத் திண்ணையில் கிடப்பது நினைவுக்கு வந்தது.
எழுந்து குளித்து, மாற்றுடை அணிந்து செங்கண்ணனாரை தரிசிக்க கிளம்ப வேண்டும். வந்த வேலை நிறைவேறினால் தில்லை கோவிந்தராஜருக்கு அர்ச்சனை உறுதி. எப்பவும்போல் இன்று எம்மொழி என்னை கைவிடாதென அவரையே வேண்டி கிளம்பினேன். அறிமுக மடல் பையில். நடையில் நம்பிக்கை. கண்களில் மீண்டும் இப்பூம்பட்டினத்தை பார்க்கையில் எழுந்த வியப்பு. வரிசையாக தெருக்கள். சுத்தமான வீடுகள். அழகான முகப்புக் கோலங்கள். அதிகாலைப் பொழுது தரும் மயக்கம். வீசும் உப்பங் காற்றும் மீங்கொத்திப் பறவைகளின் கூவலும் சிதம்பரத்தான் செவிக்கு புதிதாக.
செங்கண்ணனார் எனும் பித்தர் வசிப்பது நாளங்காடியில். இப்பகுதி மரங்களடர்ந்த சோலையாக தெரிந்தது. பெயருக்கேற்ப கடைகள் அமைந்த இடம். அருகில் சென்றதுமே ஆரவாரம் மிகுந்த இடமென புரிந்தது. இதிலெப்படி புலவர்? கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். “பித்தரைத்தேடி வந்துள்ளேன், அவர் இல்லம் காமித்துக் கொடுக்க இயலுமா?” எதிரில் வந்த அந்தணரை கேக்க, “அதோ, கோலப்பொடி விற்கும் கடை! அவருடையது, அதன் பின் வீடு.” ஓ வியாபாரம் பண்ணுபவரோ? யோசிக்க ஏதோ பயம் வந்தது. என் பாட்டை எட்டு விதமாக புனையத் தெரிந்தவருக்கு வியாபாரம் செய்து பிழைக்க அவசியம்? அப்படியென்றால் தமிழ்ச் சங்க ஊதியம் உப்புப் பெறாதோ!
கடையில் கம்பீரமாய் முதியவர். கடைக்கு வந்தவர் கேட்ட வர்ணம் ஒன்றை அவர் கண்கள் தேடுகின்றன. கிடைத்ததும் அதில் சிட்டிகை எடுத்து விலை கேட்டவர் கையில் போடுகிரார். என்னையும் பாத்தவர் “நீர் சற்றே நில்லும், இவரைக் கவனித்துவிட்டு உம்மிடம் வருவேன், என்னிடம் நீர் தேடி வந்தது எல்லாமும் கிடைக்கும், போய் விடவேண்டா”மென கண்ணிலே ஜாடை காட்டி. அவர் பார்வையில் அத்துணை அர்த்தமிருப்பதாக பட்டது. வந்தவர் பேரம்: “பெரீய பொட்டலம் 2 சிறிய செம்புக்கு தரமுடியுமா? முதியவர் அவரை ஏறிட்டு பார்த்து சொல்கிரார்.
சிறக்க வாங்கிப் போடும் கோலம் உம்வாசல் தனில் வெறும்
செம்பை ஈடாகத் தர இத்துணை யோசிக்கிராய்
செம்படவா நீ பிடித்த கயலும் பாதம் பதிக்கும் கடற்பரப்பும்
சிந்திய எம் வியர்வையும் கண்சிவக்கக் கேலி செய்யும்
சிந்திக்காமல் வெளிப்படும் உன் கஞ்சத் தனத்தை கண்டு!
இவர்தான் செங்கண்ணனார் என்று தெளிவாக தெரிந்து விட என் உற்சாகம் கட்டுக்குள் அடங்காமப் போனது. கடைக்கு வந்து அநியாய பேரம் பேசுபவரை துறத்தி அடிக்கவும் ஒரு கவிதையோ! பித்தர் சட்டென்று எடுத்த பொடியை திரும்ப வைத்துவிட்டு என்னை “நீங்கள் முன் வாருங்கள்.” கையோடு கொண்டு வந்த மடலை நீட்ட, இவனும் பொருள் வாங்க வரவில்லையே, இன்று வியாபாரம் மட்டுப் படுமோவென அவர் முகத்தில் கவலை கவ்வியதை கவனித்தேன்.
படித்து முடித்தவர், “நாம்தான் நீர் தேடிவந்த பித்தன். வாரும் உள்ளே! பழந்தரையர் என் நண்பர், அவர் நண்பர் எனக்கும் நெருக்கமாப் போனீரே!” சின்ன வீடுதான், ஆனால் கலை நயமிக்க ஓவியங்களையும் சீலைகளையும் கொண்டு கண்கவரும் வண்ணம் சீராக இருப்பதை கண்டேன். என் நினைப்பு புரிந்ததுபோல், “தமிழ் கூறும் நல்லுலகத்தில் தமிழ் கவிஞன் வாழும் இல்லம் சுத்தமாக பேணிக் காத்தல் வேண்டுமென என் தந்தையார் சொல்வர்”. அமர்ந்ததும் அவரே ஒரு மண் குவளையில் அருந்த நீர் எடுத்துத் தர, எத்துணை பண்பாடு இந்தூரில் என மகிழ்ந்தேன்.
“பாட்டெழுதுபவரோ?” “ஆமாம்”. “நீர் எழுதிய பாட்டொன்று கூறமுடியுமா?” “எடுத்து வந்துள்ளேன், படித்துப் பார்க்க இச்சையெனில் இதோ!” ஓலைகளை இவரிடம் அப்படியே கட்டாக தந்து விட்டது எனக்கும் ஆச்சர்யம். ஏனென்று தெரியவில்லை இவரிடம் முழுவதுமாக சரணடைந்து விடுவது நல்லதென என் மனம் எடுத்துரைக்க, கொண்டு வந்த நூறு பாடல்களில் பிடித்ததை தேர்ந்தெடுத்து படித்திக் கொள்ளட்டுமென.
செங்கண்ணனாரெனும் அப்பித்தர் ஒவ்வொன்றாய் எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டே என்னை ஏறெடுத்துப் பார்க்கிரார். பழந்திரையர் படித்தபோது எழுப்பிய பாராட்டு விமர்சனங்கள்போல் இவர் ஒன்றும் சொல்லாதது வருத்தத்தை அளித்தாலும் இவர் முகத்தில் பாராட்டு கீற்றாவது ஏதேனும் வெளிப்படுகிறதாவென என் கண்கள் அலைந்தது. தேடியது புலப்படவில்லை. “மேகலை என்ற பெண் பற்றி பாடலியற்றிக் காட்டினாயாம்? அது இதில் இல்லை?” “ஆமாம் ஐயா. அது பழந்தரையர் சட்டென்று இயற்றிக் காட்ட வைத்த தேர்வுக்காக சொன்னது, உங்களுக்கும் கேட்க விருப்பமென்றால் சொல்கிரேன்” “ஆம், எங்கூரில் வந்த பின்பு நீர் இயற்றிய முதல் பாடல் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்லவோ! அதைத்தான் இப்பித்தன் கேட்க ஆசை. சொல்லும்”. சாய்ந்து அமர்ந்து கொள்கிரார்.
நேற்று பழந்தரையருக்கு சொன்ன கவிதை இன்று பித்தனுக்கு ஒரு முறை. புலவனாய் போனதால் எழுதி வைக்காத போதும் தட்டுத் தடங்கலில்லாமல். ஞாபக சக்தி ஒரு புறமானாலும் பாட்டின் நாயகி இன்னும் மனக் கண் முன்னால் என்பதாலோ? கேட்டவர் .”உம்” என்று பட்டுமே சொல்ல என் மனம் தொங்கிப் போயிற்று.
“நேற்றுத்தான் பூம்பட்டினம் வந்தீரோ? வரும் வழியில் எவ்வளவு காட்சிகள்! இயற்கை எழில் கொஞ்சும் காவிரியின் கழிமுகம், ஓங்கியுயர்ந்த கப்பல்கள், அங்காடியில் காணக் கிடைக்காத அரும்பொருட்கள். இவையெல்லாம் துறந்து எம்மூர் பெண்ணின் மேல் மையல் வந்ததோ? போகட்டும். வேறு எந்த பொருட்களின் மீது பாட்டெழுதுவீர்? ஓலையில் பெண்களே பிரதானமாய்ப் போனதைப் பார்த்தேன். இப்பிராயத்தில் தப்பில்லையெனலாம். இருப்பினும் சொல்லும்!”
“நீங்கள் சொல்வதுபோல் கிடையாது, எடுத்து வரும்பொழுது இவ்வோலைகளே எம் புலமையை சிறப்பித்தனவெனவும் இங்கே கேட்போர் மனதில் இடம் பிடிக்கவல்ல பாடல்களென நினைத்து தேர்ந்தெடுத்தவை. அவ்வளவே. ஆடவரும், பெருந்தொழிலும், வீரரும், படைத் தளபதியும், சேனையும், சேனைக்கு அதிபதியான இச்சோழ சாம்ராஜியத்தின் அரசரும், ஏன் முத்தும், மாணிக்கமும், முத்தமிழ் மன்றங்களும் அதிலுறையும் செங்கண்ணனார்போன்ற அறிவுச் செம்மல்களையும் பாடுவேன். சரியான உக்கம் கிடைத்தால் கரும்பும், கசக்கும் பாகற்காயும், கட்டெறும்பும் என் சொல்லில் மிளிரப் பண்ணுவேன். இவ்வூரில் என் கவிதை காண்பிக்க ஒரு மன்றம் தேவை. வாழத் தகுந்த ஊதியம் தேவை. என் தாயாரையும், எனக்காக ஏற்படப் போகும் குடும்பத்தையும் பேணிக் காக்க. புலமைக்கு அங்கீகாரமும், என் திறமையை செம்மைப் படுத்திக் கொள்ள, தெரியாதவற்றை கற்றுத்தர நல்லதோர் ஆசானும் கிடைத்தால் என்னை புண்யவானாக மதித்துக் கொள்வேன்”.
“நல்லது, உன் ஆசை ஞாயமானதுவே. அதிலொன்றும் தப்பில்லை. ஆனால் இவ்வளவு தூரம் வரவேண்டிய காரணம்? புகழ் தேடித்தானே?” பெரியவரை பித்தனென சொன்னார்கள், பித்தம் தெளிந்தவராகத் தெரிகிரார். தெளிவாக ஒவ்வொரு கேள்வியும் கணைபோல். சுத்தி வளைக்காமல், “தங்களுக்கு என் பாடல் பிடித்திருந்தால் இந்தூர் தமிழ் சங்கத்தில் எனெக்கொரு இடம் பிடித்துக் கொடுக்க முடியுமா?”
“ஸ்ரீராமரே, முதலில் உம் தமிழ்ப் புலமைக்கோர் வந்தனம். நீவீர் எழுதிய பாடல்களில் கடுகளவேனும் குற்றமிருப்பின் உங்களையும் வழியனுப்பி விட பாட்டு சொல்லியிருப்பேன், பார்த்திருப்பீரே அங்காடிக்கு வந்த மீனவரை எப்படி அனுப்பினேனென்று! விஷயம் அதுவல்ல. எனக்கு நீர் பாட்டெழுத எடுத்துக் கொண்ட பொருளின்மேல் வருத்தம். நீர் செல்லத் தேர்ந்தெடுத்த பாதையில்தான் பயம். நீரும் என்னைப்போல் புலமையை சிதைத்து கடைப் பொருளாக்கி சீரழிவை நோக்கிப் போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!”
அதிர்ச்சியாப் போயிற்று. “என்ன சொல்கிரீர்கள்?” “இவ்வூரில் பொருளீட்ட எத்தனையோ பேர் தினம் வந்த வண்ணம். இங்கு எல்லாம் கிடைக்கும், எல்லாவற்றிற்கும் விலையுண்டு, வைத்த விலையில் பாதிக்கு பேரம் பேச ஊர் திரண்டு வரும். என் புலமைக்கும் தமிழுக்கும் நேர்ந்தது உமக்கும் நேர்ந்து விடக் கூடாதென விருப்பம். தமிழ்ச் சங்கத்தில் நீர் இன்னும் பலரை எதிர் கொள்வீர். உம்புலமையால் பலர் சிறப்பர், அதேவண்ணம் அவர் சிறுமையால் நீவிர் நலிந்து போவீர். ஏட்டிக்கு போட்டி நடத்துவர். நல்ல ஒரு பாட்டை சிறுமைப்படுத்தி அதற்கு கிடைக்கும் சன்மானத்தை குறைப்பர். நொந்து போவீர், நீர் படித்துணர்ந்த தமிழை மறப்பீர். மானமாவது காக்கலாமென விலகிப் போவீர், வாழ வழிக்கு என்னைப் போல் வீதிக்கு வருவீர். இதெற்கெல்லாம் தயாரென சொல்லும், நாளைக்கே சங்கத்தில் உம்மை வைத்து பூட்டி விடுகிரேன்”.
“நான் என்னதான் செய்ய வேண்டுமென சொல்வீர்? தமிழ் மீது பற்றை துறக்க வேண்டுமா என்ன?” “அப்படி யார் சொன்னது? “இப்புலமையும் சாகித்யமும், மொழி ஆளுமையும், கற்பனைத் திறனும் ஒருவருக்கே சொந்தமென இல்லாமல் பாரில் எவருக்கும் எடுத்துப் படிக்க அள்ளி அள்ளி கொடுக்கலாமே! பாடியதின் பொருள் அறிந்த உமக்கு பாடுவதற்கு சரியான பொருள் எதுவென அறியாமப் போனீரே!” அப்பட்டமா நகையாடுவாதுபோல் தெரிந்தது. வயதில் மூத்தவர், பித்தரென சரியாகத்தான் பெயர் சூட்டினார்களோ? ஊரோடு ஒன்றிப் போகாதவரோ? ஆனால் இவரைப் பற்றித் தெரிந்தும் பழந்தரையர் இவரிடம் என்னை அனுப்பி வைத்தமைக்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும்.
“பின் எதைப் பொருளாக்கி நான் பாட வேண்டுமென நீங்கள் அறிவுறுத்துவீர்?”
“எல்லா துதியும் அந்த படைத்தவனுக்கே போய் சேர வேண்டும் ஸ்ரீராமரே! அழகு தமிழில் அவன் புகழ் பாடுங்கள் அனுதினமும். வற்றாத நீறூற்றுப்போல் கிளம்பும் உந்தமிழால் வற்றாத அவன் கருணை உம்மை ஆட்கொள்ளட்டும். நீர் வாழும் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள ஈசனுமே பெருமாளும் உம்பாட்டுக்கு உகந்தவர்கள். அவர் புகழ் பாட மட்டுமே உம்புலமை பயன் படவேண்டும். செய்துதான் பாருங்கள்! பிறகு என் கூற்றின் உண்மை துலங்கும். இப்பூவுலகில் மண்ணும், மாந்தரும் அழகு மங்கையரும் ஏன் நீர் தேடி வந்த இக்காவிரி பூம்பட்டினத்தையும் ஒருநாள் கடல் கொண்டு செல்லுமே! நிலையாய இன்பம் தரும் தூயத்திருவடி தன்னை பற்றிக் கொள்ளவே உமது வாய்மை பயன் படவேண்டும்”.
பெருவிழிப் பார்வையில் காண் அவள்பாதி உறையும் சங்கரனை
சொல்லில் வை அகரமும் முதலுமான தமிழன்னையை
சொல்லும் கவிதையில் நிரப்பு ஓம்கார நாதந்தனை
விழுந்துவிடும் காண் தமிழ் சங்கம் உன் காலடியில்
வந்து சேரும் காண்பாய் இவ்வுலகமே சன்மானமாய்!
எத்துணை அழகாக சொல்லி விட்டார்! இனி என் கவிதை கண்கவர் தில்லையம்பதி உறை ஈசனை பற்றியும் என் மனம் நிறைந்த கோவிந்தரைப் பற்றியுமே இருக்க வேண்டுமென அழகாச் சொல்லி விட்டார். அதற்கு சங்கமெதற்கு, கைதட்டிப் பாராட்ட பெரும் புலவர்கள் கூட்டமெதுக்கு?
பித்தன் போல் வந்த என் மனதை மாற்றியது அந்த மதுரையம்பதி பித்தனோ? கண் கொட்டாது அவரையே பார்க்கிரேன்.
அப்போது வாசலிலிருந்து சத்தத்தோடு ஒருவர் வீட்டுள்ளே நுழைவதையும், வந்தது மேகலையே என பார்த்ததும் மனம் சொல்லொண்ணா சந்தோஷம் அடைந்தது. பார்த்தவள் “ஓ நீரா, வழி தவறி வந்தீரோ? போகுமிடம் கேட்டிருந்தால் நேற்றே அழைத்து வந்திருப்பேனே!” “இவரை அறிவாயா மகளே?” “நேற்று அங்காடியில் கண்டது”. “உன்னைப் பற்றி பாடலியற்றிக் காமிக்க வந்தர்”. “அப்படியா காமியுங்கள்!”
“மகளே! முதலில் வந்தவருக்கு உண்ண ஏதாவது கொண்டுவா!” பணித்துவிட்டு சொல்கிரார், “என் மகள் மேகலைக்கு மணமுடித்துவிட ஆசை. என்னைப் போல் தமிழுக்கு தாசனே மணாளனாக வரவேண்டுமென அவா. மேகலைக்கு சிதம்பரத்தில் வாழப் பிரியம். பூம்புஹார் இரைச்சலும் கூட்டமுமாய் உள்ளதாம்!”
பாலும் பழமும் ஏந்தி நின்ற மேகலையை என் அம்மாவுக்கு பிடிக்குமாவென ஒரே ஒரு கேள்விதான் மிஞ்சியது.
No comments:
Post a Comment